ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதனைத்தொடர்ந்து இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். அதில் காங்கிரஸ் 250 வாக்குகளும், அதிமுக – 104 வாக்குகளும், நாம் தமிழர் – 10 வாக்குகளும் பெற்றன.
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன.
இதிலும் முதல்சுற்று முதலே ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்று வருகிறார்.
9வது சுற்று முடிவில் ஈவிகேஸ் இளங்கோவன் 70,299 வாக்குகளும், அதிமுகவின் தென்னரசு 24,985 வாக்குகளும் பெற்றனர்.
45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக டெபாசிட் பெறுமா என்று கேள்வி எழுந்தது.
டெபாசிட் பெற 28,365 வாக்குகள் தேவையான நிலையில் 10வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துள்ளார்.
எனினும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது 76,834 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள சுற்றுகளின் மூலம் மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.
அதேவேளையில், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் திருமகன் ஈவெரா பெற்ற மொத்த வாக்குகளை தற்போது 9வது சுற்றிலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்று விட்டார்.
மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் கடந்த தேர்தலில் 67,300 வாக்குகள் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!
பிரதமர் மோடி கொடுக்க இருக்கும் 7 மணி அப்டேட்!