சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் திருவிழாவை யார் நடத்துவது என்பது தொடர்பாக வன்னியர் சமுதாயத்தினருக்கும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்கும் இடையே இன்று (மே 2) வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது, அப்போது அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகள் மீது கற்களை வீசியும் தீ வைத்தும் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலம் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான போலீசார் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்,
பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சம்பவம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
அதுசம்பந்தமாக இன்று தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஒரு தரப்பினர் கொஞ்சம் டைம் கேட்டிருந்தார்கள். இன்னொரு தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர்.
அமைதி பேச்சுவார்த்தை முடிந்ததும் ஒரு தரப்பினர் வெளியே வந்து அருகிலிருந்த கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல மற்றொரு தரப்பும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பு நபர்களையும் கண்டறிந்து, கைது செய்துள்ளோம். வீடியோ காட்சிகள் உள்ளது. அதனை ஆராய்ந்து வேறு யாரெல்லாம் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு தரப்பிலும் மொத்தம் 19 பேரை கைது செய்தோம். கண்டிப்பாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மாலை 4.30 மணிக்கு மேல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
இரவில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரிங்கு சிங், கே.எல்.ராகுலை அணியில் சேர்க்காதது ஏன்? – காரணம் சொன்ன அஜித் அகர்கர்