வாக்கு எண்ணிக்கை முடியும் வரை… நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்!

அரசியல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக நடைபெற்றது. நேற்று இரவு 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் 69.46 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் அதிமுக நிர்வாகிகள் கண்காணித்திட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக நாடாளுமன்ற வரலாற்றில் அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அதிமுக.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக, அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற குறிக்கோளோடு அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பாஜகவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியது.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 4 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் அதிமுக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘குக் வித் கோமாளி’ ஆரம்ப தேதி வெளியானது… செம குஷியில் ரசிகர்கள்…!

“சனாதனம் குறித்த கருத்துக்கு உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்” – ரேவந்த் ரெட்டி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *