“சனாதனம் குறித்த கருத்துக்கு உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்” – ரேவந்த் ரெட்டி

Published On:

| By Selvam

சனாதனம் குறித்த கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள்.

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம்’ என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜக, ஆர்,எஸ்,எஸ் அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் உதயநிதியின் சனாதன பேச்சு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, “சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது தவறு. இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Gold Rate: குறைந்தது தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

தஞ்சையில் களைகட்டிய பெரியகோவில் சித்திரை திருவிழா!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel