ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள் என்று பாஜக தலைமைக்கு சாக்ஷி மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க எம்.பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர்.
ப்ரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில், அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கைசர்கன்ச் மக்களவைத் தொகுதி எம்.பியாக உள்ள ப்ரிஜ் பூஷனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் அவரது மகன் கரன் பூஷன் சிங்குக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ப்ரிஜ் பூஷனுக்கு எதிராக போராடிவரும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர், “நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை ப்ரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை. நீதியை மட்டுமே கோருகிறோம்.
கைது செய்வதை விடுங்கள். இன்று ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்’ என்று சாக்ஷி மாலிக் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நாட்டின் மகள்கள் தோற்றனர், ப்ரிஜ் பூஷன் வென்றுள்ளார்.
ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டும் சீட் ஒதுக்கப்படும் என்றால், ஒரு மனிதனுக்கு முன்னால் அரசு இவ்வளவு பலவீனமாக உள்ளதா?
ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே உங்களுக்கு தேவை. ஆனால் அவர் காட்டிய பாதையை மறந்துவிட்டீர்களே” என்று சாக்ஷி மாலிக் பாஜகவை விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிஎம் கிஷோர் எப்படி இருக்கிறார்?
வெப்ப அலையும் உண்டு… கனமழையும் உண்டு : வானிலை மையம் எச்சரிக்கை!