அவசரச் சட்டத்தை எதிர்த்து வென்றால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அரையிறுதியில் வென்றது போல் இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஏ பிரிவு அதிகாரிகள் நியமனம் மற்றும் பணி மாறுதலில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரம் மாநில அரசிடம் இருந்து பறித்து துணை நிலை ஆளுநர் கையில் கொடுக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று (ஜூன் 1) தமிழ்நாடு முதல்வரை சந்தித்துப் பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் வந்திருந்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு மூன்று மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இன்று நானும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வந்தோம். எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து விவாதித்தோம்.
8 வருட போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக மே 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு டெல்லியில் செயல்பட்டு வருகிறது.
பெரும்பான்மையுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அரசாங்கத்தை நடத்த அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வந்த ஒரு வாரத்திற்குள் (மே 19) இரவு 10 மணிக்கு பாஜக அரசு இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அவசரச் சட்டத்தை அறிவித்தது.
இது ஜனநாயகத்திற்கும் இந்திய அரசியலமைப்பிற்கும் எதிரானது. ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவை நாடி வந்துள்ளோம்.
டெல்லி மக்களின் பிரச்சனைக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் பாஜகவிற்கு பலமில்லை. 238 எம்.பி.க்களில் 93 எம்.பி.க்கள் தான் பாஜகவுக்கு உள்ளனர். எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மசோதாவை முறியடிக்க முடியும். கூட்டாட்சிக்கு விரோதமான ஆட்சியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாஜகவை வீழ்த்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அவசரச் சட்டத்தை எதிர்த்து வென்றால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அரையிறுதியில் வென்றது போல் இருக்கும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறேன். காங்கிரஸ் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று பேசினார்.
மோனிஷா
திமுக நிச்சயம் எதிர்க்கும் : கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் ஆதரவு!
மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு!
