‘‘இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று…பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்!’’
ரஜினியை வைத்து ‘ஜக்குபாய்’ என்ற படத்தை இயக்குவதற்கு, கே.எஸ்.ரவிக்குமார் பூஜை போட்டபோது, முதல் நாள் பேப்பர் விளம்பரத்தில் ‘தக் லைஃப்’ கமல் போல வித்தியாசமான ‘கெட்டப்’பில் ரஜினி படத்துடன் வெளியான ‘ப்ரமோ டயலாக்’ இது. அதற்குப் பின் அந்தப் படம் கைவிடப்பட்டு, அதே பெயரில் சரத்குமாரை வைத்து கே.எஸ்.ஆர்., அந்தப் படத்தை இயக்கி அது ஊத்திக் கொண்டதெல்லாம் சினிமாக்கதை…!
நாம் அரசியலுக்கு வருவோம்…
இப்போது இந்த வசனத்தையே வேண்டுதலாக்கி, அயோத்தி பாலராமரிடம் வைத்து வேண்டிக் கொண்டிருப்பது, வேறு யாருமில்லை; P.M. அண்ணாமலை தான்…(தமிழக பாரதிய ஜனதா தலைவரான அவர் எப்போது P.M. ஆனார் என்று கேட்க வேண்டாம்; P.M. என்றால் Press Meet அண்ணாமலையாம். இதுவும் அவருக்கு நண்பர்களாயிருக்கும் கட்சி நிர்வாகிகள் வைத்த பெயர் தான் என்று ஒரு பேச்சு)
தமிழ்நாடு மட்டுமல்ல…தேசமே திரும்பிப் பார்க்கும் தொகுதியாக கோவை நாடாளுமன்றத் தொகுதி மாறியிருக்கிறது. ஒரே காரணம், அண்ணாமலை. பாரதிய ஜனதா தலைமையைப் பொருத்தவரை, தமிழ்நாட்டிலிருந்து அட்லீஸ்ட் 5 தொகுதிகளையாவது ஜெயிக்க வேண்டுமென்று கணக்குப் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதிலும் அவர்கள் உறுதியிலும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கின்ற தொகுதி தான் கோவை. ஆனால் அங்கே ‘நிறுத்தப்பட்டுள்ள’ அண்ணாமலைக்கு, அந்த நம்பிக்கை துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் பயப்படுவது, திமுக கூட்டணி பலத்தைப் பார்த்தோ, கோவையில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பார்த்தோ இல்லை. சாட்சாத், சக ‘ஜி’க்களைப் பார்த்துத்தான்!
ராஜ்குமார்/ சிங்கை ராமச்சந்திரன்
கோவையில் இப்போது திமுக சார்பில் ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர், அண்ணாமலையுடன் மோதுகிறார்கள். ஒப்பீட்டளவில், அண்ணாமலையை விட, மற்ற இருவரும் மிகவும் சாதாரணமான வேட்பாளர்கள் தான். திமுக வேட்பாளருக்காவது, கோவை மாநகராட்சி மேயராக இருந்த ஓர் அறிமுகம் இருக்கிறது. அதிமுக வேட்பாளருக்கு அதுவும் இல்லை.
ஆனால் அவர்கள் இருவருக்குமான பலம், அவர்கள் கூட்டணி மற்றும் கட்சிக்கு இருக்கும் வாக்குவங்கி. அண்ணாமலைக்கும் அதுவும் பலம் தான். இருப்பினும் மற்ற இருவருக்கும் இருக்கும் கட்சிக்கட்டமைப்பு, உள்ளூர் நிர்வாகிகளின் ஒத்துழைப்பைக் கணக்கிட்டால், அண்ணாமலைக்கு அது தான் ஒட்டு மொத்த பலவீனமே. அப்புறம் ஏன் நிற்க வேண்டும்…அதுதான் அமித்ஷாவின் அன்புக் கட்டளை!
எல்லாருக்கும் வழிகாட்டி…எல்.முருகன்!
கோவையில் பாரதிய ஜனதா சார்பில் போட்டி போடுவதற்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வக்குமார் என இன்னும் பலரும் பல விதங்களில் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதற்கும் ஒரு காரணமுண்டு. இவர்கள் எல்லோருக்கும் இருந்த ஒரு நம்பிக்கை என்னவென்றால், இங்கே நின்று வென்றால் கோவை தொகுதிக்காக நமக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும்; ஒரு வேளை அதிக வாக்குகள் வாங்கி தோற்று விட்டாலும், எங்காவது மாநிலங்களவை உறுப்பினராக்கி, அமைச்சர் பதவியும் கொடுத்து விடுவார்கள் என்பது தான். இந்த நம்பிக்கை உபயம், மத்திய அமைச்சர் எல்.முருகன்.
தாராபுரத்தில் சட்டமன்றத் தேர்தலில் நின்று தோற்றுப் போன பின்பே, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புடன் மத்திய அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அந்தப் பதவிக்காலம் முடிவதற்குள் மீண்டும் அவரை மாநிலங்களைவை உறுப்பினராகத் தேர்வு செய்ததோடு, நீலகிரி தொகுதியின் வேட்பாளராகவும் பாரதிய ஜனதா தலைமை அறிவித்திருக்கிறது. ஆதரவாளர் பலம், சமுதாயத்தின் ஆதரவு, பேச்சுத்திறமை, ஆளுமைப்பண்பு என குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ப்ளஸ் எதுவுமே இல்லாத அவருக்கு அவ்வளவு செய்யும்போது, நமக்கு இவ்ளோ செய்ய மாட்டார்களா என்று கோவையில் வாய்ப்புக் கேட்ட சில பாரதிய ஜனதா நிர்வாகிகள் பகிரங்கமாகவே பேசிக் கொண்டதாகத் தகவல்.
ஆனால் இவர்கள் எல்லோருடைய பெயரையும் அழித்து விட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி போட விருப்பமே இல்லாமல் இருந்த அண்ணாமலையின் பெயரை, கோவை தொகுதி வேட்பாளராக அறிவித்ததன் காரணம் தான் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. அதைப் பற்றி பாரதிய ஜனதா வட்டாரங்களில் என்ன பேசப்படுகிறது என்பது பற்றி நம்மிடம் விரிவாக விளக்கினர் கோவையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சிலர்…
‘‘அண்ணாமலை தலைவரான பின்பு, கட்சிக்குள் இருந்த பல முக்கியத் தலைவர்களை காலி செய்து வெளியே அனுப்பி விட்டு, புதிது புதிதாக ஆட்களைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கட்சியில் சேர்த்து பொறுப்புக் கொடுத்துள்ள ஒவ்வொரு நபரைப் பற்றியும் அவர்களின் அரசியல் மற்றும் குற்றவியல் பின்னணிகள் குறித்தும் சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட ஆதாரங்களுடன் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அவர்களை வைத்து, காலம் காலமாகக் கட்சிக்கு உழைத்த தலைவர்கள், நிர்வாகிகளை அவர் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
‘அண்ணா…வேண்டாங்கண்ணா!
இதனால் அவர் மீது எல்லாத் தலைவர்களுமே கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். கோவையில் இருக்கும் வானதி, கனகசபாபதி, செல்வக்குமார் எல்லோரும், அண்ணாமலையும் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களுக்கும், அவருக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆகவில்லை. அவர் அடிக்கடி கோவைக்கு வருவதையே அவர்கள் யாரும் விரும்புவதில்லை. அப்படியிருக்கையில், அவர் இங்கு நின்று வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகிவிட்டால், கோவையில் அவருடைய செல்வாக்கு பல மடங்கு பெருகிவிடும். ஏற்கனவே கோவையிலும், திருப்பூரிலும் உள்ள பல முக்கியமான தொழிலதிபர்களும் அவரைக் கண் மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் இங்கேயே வந்து விட்டால், மற்ற யாருக்குமே மதிப்பிருக்காது. இதுதான் அவர்களின் அச்சம்.
இதே கோபமும், அச்சமும் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இருக்கிறது. செந்தில் பாலாஜி இப்போது உள்ளே இருப்பதற்கும், அவரை முடக்கியதற்கும் அண்ணாமலைதான் காரணம் என்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அண்ணாமலையை கோவையில் தோற்கடிக்க வேண்டுமென்பதில் கரூர் டீம் கடுமையாக வேலை பார்க்கப்போகிறது என்ற தகவல் வந்திருக்கிறது. செந்தில் பாலாஜியின் பரிந்துரையில் தான், ராஜ்குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மட்டுமில்லாமல், திமுக தலைமைக்கும் அண்ணாமலை மீது கடுமையான கோபம் இருப்பதால், அவரைத் தோற்கடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்க டிஆர்பி ராஜாவை களம் இறக்கி விட்டிருக்கிறது. அதற்காக எவ்வளவு செலவழிக்கவும் தயாராயிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளையும் கோட்டை விட்ட கோபமும் சேர, இந்தத் தேர்தலில் கோவையில் வென்றே தீர வேண்டுமென்று வெறியோடுதான் திமுக தலைமை உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.
வேலுமணிக்கு வேற கோபம்!
வேலுமணிக்கும் இது கெளரவப் பிரச்னை. கோவை, பொள்ளாச்சி, நீலகிரியில் அவர் சொன்ன வேட்பாளர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்காமல், எடப்பாடி பழனிசாமியே நேரடியாக வேட்பாளரை தேர்வு செய்து விட்டதால் இருவருக்கும் இடையில் ஒரு சங்கடம் இருப்பதாகத் தகவல் இருக்கிறது. கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வேலுமணி தேர்வு செய்து வைத்திருக்க, எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜூனன், அருண்குமார் இருவரும் சொன்னதால் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டதாக அவருக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் அதையும் கடந்து, தன் சொந்த ஊரில் அதிமுக வாக்கு வங்கியைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது. எல்லாவற்றையும் விட, இன்றைக்கு கோவையில் அரசியல் ஆளுமை என்றால் அது வேலுமணி தான் என்ற நிலை இருக்கிறது. அண்ணாமலை ஜெயித்து அமைச்சராகிவிட்டால், வேலுமணியின் கோட்டை தகர்க்கப்பட்டு விடும்.
இப்படி 3 கட்சியினரும் சேர்ந்து அவரைத் தோற்கடிக்க இப்போதே மறைமுகக் கூட்டணி அமைத்து, அதற்கான வேலைகளிலும் இறங்கி விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவரைத் தோற்கடித்து விட்டால், சட்டமன்றத் தேர்தலில் இந்தப் பக்கம் அவர் வரமாட்டார் என்று கோவையின் பாரதிய ஜனதா நிர்வாகிகள் நினைக்கிறார்கள். அதற்காகவே, அமித்ஷாவையும், நட்டாவையும் பார்த்து, அண்ணாமலையை கோவையில் நிறுத்த வலியுறுத்தி, இப்போது அவர் பலிகடா போல அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார். ரிசல்ட் வரும்போதுதான் இதெல்லாம் தலைமைக்குத் தெரியவரும்!’’
இப்படி விளக்கமாக விவரித்தார்கள் அந்த நிர்வாகிகள்.
வேட்புமனு தாக்கல், பிரசாரமே இன்னும் சூடு பிடிக்காத நிலையில், இப்போதைக்கு ஒரு கணக்கையும், திமுகவினர் போட்டு வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்தாலும் அண்ணாமலையின் அச்சத்துக்குக் காரணம் புரிகிறது. அவர்கள் சொல்லும் கணக்கு இதுதான்…
‘‘கோவையில் 21 லட்சம் வாக்குகள் இருக்கின்றன. மொத்தம் 15லிருந்து 16 லட்சம் வாக்குகள் பதிவாகலாம். சென்ற தேர்தலில் 14 லட்சம் வாக்குகளில் திமுக கூட்டணிக்கு 5.7 லட்சம் வாக்குகள் கிடைத்தன. இந்த முறை அது சற்று கூடுதலாகி குறைந்தபட்சம் 6 லட்சம் வாக்குகள் வாங்க வாய்ப்புள்ளது. மீதமுள்ள 9 லட்சம் வாக்குகளில் அதிமுக வாக்கு வங்கிக்கு 3 லிருந்து 4 லட்சம் வாக்குகள் வாங்கலாம். நாம் தமிழர் போன்ற மற்ற கட்சிகள் ஒரு லட்சம் வாக்குகளைப் பிரித்தாலும் மீதமுள்ள வாக்குகள்தான் அண்ணாமலைக்குக் கிடைக்கும்.
பாரதிய ஜனதா வாக்குவங்கி, மோடிக்கான ஆதரவு, அண்ணாமலைக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு அனைத்தையும் கூட்டினாலும் 4 லட்சம் வாக்குகளைத் தாண்டுவதே கடினம். தேர்தலில் பணம் அதிகமாக விளையாடினால் இது இன்னும் குறையும். ஆக அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு என்பது, சட்டென்று எட்டிப்பறிக்கிற கனியாக இருக்காது; கஷ்டப்பட்டாலும் கிடைக்குமென்ற உறுதியும் கிடையாது!’’
அண்ணாமலையின் அணியில் இருக்கும் பலரும் இதே கணக்கைப் போடுவதால், அவர் நிச்சயமாக இந்தத் தேர்தலில் நிற்கப் போகிறாரா அல்லது பிரதமர் வழியாக அமித்ஷாவையும், நட்டாவையும் சமாதானப்படுத்தி, வேட்பாளரை மாற்றப் போகிறாரா என்ற சந்தேகமும் பலருக்கு எழத்துவங்கியிருக்கிறது.
என் மண் என் மக்கள் என்று யாத்திரை போன அண்ணாமலைக்கு, இந்தத் தேர்தலில் கிடைக்கப் போகிற வெற்றியோ, தோல்வியோ, ‘என் கட்சி என் எதிரிகள்’ என்ற பெரும் அனுபவத்தைக் கொடுக்குமென்று நிச்சயமாக நம்பலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலசிங்கம்
பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார் கங்கணா
வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!
வீடுகளில் கறுப்புக் கொடி… தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் கிராமம்!
13,304 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி!