மோடி- புதின் – ட்ரம்ப்
கட்டுரை 13: இதுவரை – முரளி சண்முகவேலன்
இந்தத் தொடரின் அறிமுகத்தில் “டொனல்டு ட்ரம்பின் வெற்றி எந்தவிதமான அரசியலை முன்வைக்கிறது?” என்ற கேள்வியை எழுப்பினோம்.
இந்தக் கேள்வியை சிறிது திருத்திக் கூறவேண்டுமானால், எந்தவிதமான சமூக அரசியல் சூழ்நிலை டொனால்டு ட்ரம்ப்பை (அல்லது நரேந்திர மோடி, ரஷியாவின் புட்டின்) மக்கள் ஆட்சியின் தலைவராக உருவாக்குகிறது? எந்தவிதமான அரசியல் சூழ்நிலையால் மியான்மரின் அமைதிச் சீமாட்டியென உலகெங்கும் புகழப்பட்ட ஆங் சான் சூ கியி (Aung san suu kyi) அந்நாட்டு சிறுபான்மை ரோஹிங்க்யா முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு எதிராகப் பேச மறுக்கிறார்? அல்லது எந்தவிதமான சமூக அரசியல் சூழ்நிலை ப்ரெக்ஸிட் நடக்க வழி செய்கிறது?
நான் இத்தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல இந்த மினி தொடரின் நோக்கம் இதற்கான உரையாடலைத் தொடங்குவதே. எல்லாவற்றுக்கும் ஒற்றை வரியில் பதில் தேட முடியாது. வலதுசாரிகளின் உலகளாவிய எழுச்சி பற்றிய உரையாடல்கள் தற்போது தொடக்க நிலையிலேயே இருக்கிறது. உலகெங்கும் நடைபெறும் இந்த வலதுசாரிகளின் எழுச்சி குறித்த அரசியல் பற்றிய ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சியே இந்த மினி தொடரின் நோக்கம். இந்தத் தொடரில் வெளிவந்த பல கட்டுரைகளை மோடியின் அரசாங்கத்துக்கும் இந்திய ஊடகங்களுக்கும்கூட பொருத்திப் பார்க்க முடியும். குறிப்பாக, பிரதமர் மோடியின் மெய்யறு அரசியலின்தன்மைகளை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
இதுபற்றி நான் எழுதியவற்றை பலரும் மறுக்கலாம். இத்தொடர் பற்றி சிலர் என்னிடம் உரையாடியிருக்கின்றனர் மற்றும் சிலர் தங்களது குழுக்களுக்குள்ளும் உரையாடி வருவதாக நான் அறிகிறேன்… மகிழ்ச்சிதான். மொத்தத்தில் வலதுசாரிகளின் எழுச்சி குறித்த உரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நிகழுமானால் அதுவே இத்தொடருக்கான அங்கீகாரம். இந்த உரையாடல்கள் நம்மிடமிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும்.
எனது அறிமுகக் கட்டுரையில் ட்ரம்பின் ‘அதிர்ச்சி வெற்றி’ குறித்து தாராளவாத ஊடகங்களும், ஆய்வாளர்களும், சமூகப் பண்டிதர்களும் எழுதிக் குவித்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டேன். இந்த அதிர்ச்சியே இத்தொடரின் வழியான உரையாடலுக்கு ஆரம்பம். என்னைச் சுற்றி இருக்கிற தாராளவாத நண்பர்கள் அனைவரும் ப்ரெக்ஸிட் தோற்கும் (அதாவது, ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பாவுடன் சேர்ந்தே இருக்கும்) என்றும் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெறுவார் என்றும் தங்களின் அரசியல் விருப்பத்தையே கருத்துக்கணிப்பாக முன்வைத்தும் எனக்கு இந்த ஆரூடங்களில் நம்பிக்கை வரவில்லை.
நான், ட்ரம்ப் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று சொன்னபோதெல்லாம், எனது நண்பர்கள் அதிருப்தியுற்றனர். சிலரோ, நான் வலதுசாரிகளுக்கு ஆதரவாகிவிட்டேனோ என்று உண்மையிலேயே கவலைப்பட்டனர். நான் ட்ரம்புக்கு ஆதரவாகப் பேசுவதாகவும், அப்படிப்பட்ட பேச்சுக்கு இங்கு இடமில்லை என்று, என் வீட்டிலேயே எனக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. ஜெயரஞ்சன் லண்டன் வந்திருந்தபோது இப்படி நான் கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சியுற்றார்.
ப்ரெக்ஸிட் கருத்துக்கணிப்பு நடந்து முடிந்த சில நாள்களில் சிகை திருத்தம் செய்ய லண்டனில் தாராளவாதிகள் அதிகம் புழங்கும் இடமான சோஹோவுக்குச் சென்றிருந்தேன். அங்கே ப்ரெக்ஸிட் குறித்து பேச்சு வந்தது. எனக்கு சிகை திருத்தும் நண்பர் ஜாக் அப்போது சொன்னார்: “நான் ப்ரெக்ஸிட்டுக்கு எதிர்ப்பாளன். ஆனால் நேற்று எனது சொந்தக்காரரைப் பார்க்க கோர்ன்வேல் சென்றிருந்தேன். அப்போது அவரிடம் பேசியபோது நான் தெரிந்துகொண்டது என்னவெனில், லண்டன் ஒரு தீவு. லண்டனை விட்டுத் தாண்டி இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்குச் சென்றால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தகர்ந்திருப்பதைக் காணமுடியும். வேலையே இல்லை. விவசாயம் படுபயங்கரமாக நலிந்திருக்கிறது. இடுபொருள் விலை, விவசாயிகளின் கூலி (காரணம், உறுதியான பவுண்ட்) எக்கச்சக்கம். எனவே, உள்ளூரில் விளையும் வெள்ளரி, வெளிநாட்டிலிருந்து தினசரி விமானம் வழியாக கொண்டு வரப்படும் வெள்ளரியைவிட விலை அதிகமாக இருக்கிறது. லண்டன்வாசியான எனக்கோ, இதுபற்றிய எந்த ஒரு அனுபவமும் இல்லை. அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்போது ஏன், ப்ரெக்ஸிட் வெற்றி பெற்றது என்று புரிந்துகொள்ள முடிகிறது” என்று தயங்கித் தயங்கி சொன்னார்.
லண்டனுக்கு வெளியில் இருப்பவர்கள், தலைநகரில் உள்ள சோஷலிச, தாராளவாதிகளை எல்லாம் பொருளாதாரமயமாக்கலால் பயனடைந்தவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது (படிக்க: கட்டுரை 3, 4).
அதாவது, பெருநகர தாராளவாத அரசியல்(வாதிகள்), சமூகம் (மக்கள்), ஊடக நிறுவனங்கள் (பண்டிதர்கள்) என அனைத்தும் (அனைவரும்) உலகமயமாக்கலின், தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் உற்பத்திகளாகிவிட்டனர். இதை, எனது முந்தைய கட்டுரைகளில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
உதாரணமாக, ஹிலாரி கிளிண்டனின் அரசியல் நிலைப்பாடு போலியானது என நலிந்த மக்கள் நினைத்தனர். எனவேதான், ஒபாமாவுக்கு இருந்த கறுப்பின மக்களின் ஆதரவு ஹிலாரிக்கு இல்லை. குறிப்பாக, கறுப்பு இளைஞர்கள் ஹிலாரியை நம்ப மறுத்துவிட்டனர்.
அதுமட்டுமல்ல, அவரை ஆதரித்தோரின் பட்டியல் இன்னும் சுவாரசியமானது: மடோனா, ஜொர்ஜ் க்ளூனி, கேடி பெர்ரி, மாட் டேமன் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் முதலீட்டியத்தாலும், ஊடக நுகர்வாலும் பிரபலத்தன்மையை அடைந்தவர்கள். அவர்களுக்கும் வலதுசாரி அரசியல் கருத்தாக்கங்களுக்கும் காத தூரம் என்பது சாமானியனுக்கு நன்றாக விளங்கியிருந்தது. இது, ஹிலாரியின் பிரசாரத்துக்கு எதிரானதாக அமைந்தது என்றால் மிகையல்ல.
செல்வாக்குள்ள பெருமளவு பொது ஊடகங்கள் ஹிலாரியின் புகழ்பற்றிப் பேச, பிரபலங்களின் ஆதரவு உதவியதே தவிர, பெரு நகரங்களுக்கு வெளியே அங்கிருக்கும் படித்த / படிக்காத வெள்ளை இனப்பெண்கள் அவரை நம்ப மறுத்தனர். ஆக, ட்ரம்புக்கு எதிராகப் பேசும் தாராளவாதிகள் சாமானியர்களின் மத்தியில் முற்றிலுமாக நம்பிக்கை இழந்தனர். இது இந்தியாவுக்கும் பொருந்தும்.
இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராகப் பேசும் உயர் சாதி, பிராமண தாராளவாதிகளை இந்த ரகத்தில் நாம் சேர்க்கலாம். உதாரணமாக, இவர்களில் பலர் பசுவதை தடைச் சட்டத்தை எதிர்த்து முற்போக்குக் குரல் கொடுக்கின்றனர். பசுவதை தடைச் சட்டம் ஏற்படுத்தும் வன்முறை பற்றி கவலையும் தெரிவிக்கின்றனர். மகிழ்ச்சி. ஆனால் இவர்கள் பசுவதை எதிர்ப்பின் மூலமான சமூக, கலாசார, பழக்கங்களுக்கு எதிராக எந்தவிதமான எதிர்வினையும் இன்றி செயல்படுவதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
அரசியல்ரீதியாக பசுவதை தடைச் சட்டம் காங்கிரஸ் கட்சியிடமிருந்துதான் தொடங்கியது. காங்கிரஸின் தலைவர்களான கோவிந்த வல்லப பந்த் 1930களிலேயே பசுவதைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கிவிட்டார். மற்றொரு தலைவர் ராஜேந்திர பிரசாத் பசுவதைக்கு எதிரானவர். உத்தரப்பிரதேசத்தில் நேருவின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் அரசின்கீழ் பசுவதை தடைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்துக்கே இப்போது பல் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, மதமாற்ற தடைச் சட்டத்தை தொடங்கியதும் காங்கிரஸே. எனவே, மதவாதிகளின் வலதுசாரிக் கொள்கைகள் ‘மதச்சார்பின்மை சக்திகளாலேயே’ வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த வன்முறையாளர்கள் இருக்கும் வரை, மோடியை மட்டும் சாதி, மத வெறியராகச் சித்திரிப்பது ஒரு சாமானியரிடம் செல்லுபடியாகாமல் போகிறது.
அதேபோல, தினந்தோறும் ‘பிராமணர்களுக்கு (அல்லது வெஜிடேரியன்) மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற அரசியல் சாசனத்துக்கு எதிரான வரி விளம்பரங்கள் முற்போக்கான தினசரிகளில் வரும் வரையில் அனைவருக்கும் வீடு வாடகைக்குவிட வேண்டும் என்ற முற்போக்கு ஆதரவுக் குரல்கள் சந்தேகத்துடனேயே பார்க்கப்படும்.
முற்போக்காளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அறிவுஜீவிகள்; அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள்; அந்நிறுவனங்களின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புகள்; அவை வெளிப்படுத்தும் முரணான அரசியல் கருத்தாக்கங்கள் நலிந்தோருக்கு எதிராகச் செயல்படும்போது, நிற இன சாதி பேத அடையாளங்களை வைத்து அரசியல் செய்யும் வலதுசாரிகளின்மீது சாமானியருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறுதான் அமெரிக்க படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடின்றி பெரும்பான்மையான வெள்ளை இனத்தினர் ட்ரம்புக்கு வாக்களித்தனர். ஆனால் உழைக்கும் வெள்ளை வர்க்கம் மட்டுமே ட்ரம்புக்கு வாக்களித்ததாக தாராளவாதிகள் பொய் (செய்திகள்) பரப்பி வருகின்றனர்.
வலதுசாரிகளின் அரசியல் நிலைப்பாடு பாரபட்சமுள்ளதாக இருக்கிறது. அந்த பாரபட்சம் மத, நிற, இன, சாதி அடிப்படையில் மிகவும் தெளிவாக வரையறுக்கப்படுகிறது. இவ்வாறு இயங்கும்போது சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் குழுக்கள் தங்களுக்குத் தோதான வலதுசாரி அமைப்புகளை நோக்கி நகர்கின்றனர். சுருங்கக்கூறினால், தாராளவாதிகளின் முற்போக்கு முகமூடி கிழியும்போது மக்கள் வலதுசாரி யதேச்சதிகாரத்தை நோக்கி பயணப்படுகிறார்கள்.
**போலி முற்போக்குவாதிகளின் சுயநலம் கலந்த இரட்டைநிலைப்பாடே வலதுசாரிகளின் பாசிச எழுச்சிக்கான முக்கியமான வித்தாகும்.** இது அமெரிக்காவுக்கும் பொருந்தும். ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் பொருந்தும். குடிமக்களின் நலன் காக்கும் அரசுகளெனெ அறியப்பட்ட ஸ்காண்டிநேவிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கும் இது பொருந்தும்.
உலகமயமாக்கலின் விளைவாக நாட்டின் உற்பத்தி பெருகும்; அதன் விளைவாக வருவாய் பெருகும்; பின்னர் அரசுக்கு வரிவசூல் அதிகமாகும்; அதைக் கொண்டு மக்கள் நல அரசின் அடிப்படைக் கொள்கைகளை (மருத்துவம், நலிந்தோருக்கு உதவி) தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்று மேற்குலகில் உள்ள தாராளவாதிகள் நம்பினர்.
இதன் விளைவே, ஐக்கிய ராஜ்ஜியத்தின் லேபர் கட்சியின் ஆட்சியில் அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. இன்றைய சூழ்நிலையில்கூட லேபர் கட்சியின் கொள்கை உலகமயமாக்கலுக்கு எதிரானது அல்ல; அக்கொள்கையை அக்கட்சி முற்றிலும் ஏற்றுக் கொள்கிறது. மக்கள் நல சேவை (National Health Service) என்றழைக்கப்படும் பொது மருத்துவச் சேவைகளின் பல பகுதிகள் உள்பட, பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் லேபர் கட்சியின் ஆட்சியில் தனியார்மயமாக்கப்பட்டன.
ஆனால், உலகமயமாக்கல் கனவு கலைய ஆரம்பித்திருக்கிறது. சந்தைப் பொருளாதாரத்தை நம்பிய ஐரோப்பிய முற்போக்குவாத அரசியல் தோற்றுப்போனதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.
ஆப்பிள், கூகிள், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் உலகமயமாக்கல், தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மூலம் மூன்றாம் உலக நாடுகளில் (சீனா, இந்தியா, வங்காள தேசம், வியட்நாம், தாய்லாந்து) தொழிற்சாலைகளை அமைத்தன. ஆனால் அயர்லாந்தில் வரி கட்டின (அல்லது கட்டியதாகச் சொல்லப்பட்டது). முதலாளிகளோ கலிஃபோர்னியாவில் சொர்க்கத்தை அனுபவித்தனர். தகவல் தொடர்பின் மூலம் உற்பத்தி ஓரிடம், வரி செலுத்துவது வேறொரு இடம், அனுபவிப்பது மற்றுமோரிடம் என அனைத்து நடவடிக்கைகளையும் இருந்த இடத்திலிருந்தே செய்து முடித்து அதிகச் செலவில்லாமல் பெரும் லாபம் ஈட்ட முடிந்தது.
விளைவு: உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் மேற்குலகில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராகவும் திரும்பியது.
உலக வறுமையை ஒழிக்கக் கிளம்பிய பில் கேட்ஸ், உலகெங்கும் இணையத்தைக் கொண்டுவர சபதமெடுத்த ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கெர்பெக் ஆகிய தகவல்தொடர்பு முதலீட்டிய செல்வந்தர்கள் தங்களது முற்போக்குக் கொள்கைகளுக்கான நிதியை இப்படியாகவே திரட்டினர்.
ஊடகப் பிரபலங்களும் இந்த வழியைப் பின்பற்ற ஆரம்பித்தனர். உதாரணமாக, வறுமை கண்டு வீறுகொண்டு எழும் ராக் பாடகர் போனோ, தொடர்ந்து வரி கட்டாமல் ஏய்த்தார். சாமானியர்கள் இதுபோன்ற முற்போக்குவாதிகள் பற்றியும் நிபுணர்களின்மீதான நம்பிக்கையை இழந்தது தற்செயலானது அல்ல.
மேற்குலகில் நடைபெறும் இன்றைய வலதுசாரிகளின் எழுச்சிக்குப் பின் தாராள/முற்போக்குவாதிகளின் பல ஆண்டு துரோகம் உரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகவே அகதிகளின் பிரச்னைகள், நிற, மதப் பிரச்னைகள் எல்லாம் வலதுசாரிகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டன.
உலகமயமாக்கலை உந்தித் தள்ளியதில் தகவல் தொடர்பு முதலீட்டியத்துக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் இத்தொடரில் நான் தரவுகளுடன் பதிவு செய்திருக்கிறேன். உலகளாவிய தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் முக்கிய விளைவுகள்:
தூரத்தின் இறப்பு (death of distance)
பிரிந்து கிடந்த நாடுகளின் நில எல்லைகள் மின்னணுக்களால் பிணைக்கப்பட்டது (தனியார் முதலீட்டியம் பெரும்பங்கு அளித்தது)
பொருளாதார அதிகாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் கையில் கொண்டுசேர்த்ததில் தகவல் தொடர்பு முதலீட்டியத்திற்கு தலையாயப் பங்கு.
தகவல் தொடர்பு தொழில்நுட்பமும், அவற்றின் முதலீட்டியமும் சமூகத்தின் எல்லாப் பொருள்களையும் (subjects) நுகர்வுப் பண்டமாக்கின.
இணையத்தின் வரவினால் ஊடகத்துக்கும் பயனர்களுக்கும் ஏற்பட்ட அரசியல், கலாச்சார தாக்கங்களும் அதிர்வுகளும்.
பன்மைத்தன்மை ‘பெருக்கெடுக்கும்’ இணையத்தில் வெள்ளமெனப் பாயும் பொய் செய்திகள்; தினசரி நிபுணர்கள்; நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவாக மெய்மையின் நிராகரிப்பு அல்லது மெய்யறு அரசியல்.
அதேசமயம், இணையத்தாலும் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தாலும் நல்விளைவுகள் ஏற்படாமலில்லை. ஆனால் இத்தொடரின் நோக்கம் சாதக பாதகங்களை நடுவுநிலையாக அலசுவதல்ல. நிராகரிக்கப்பட்ட, கண்டும் காணாமல் விடப்பட்ட பக்கங்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும். அதனடிப்படையிலேயே இணையத்தின் பயன்களை, இத்தொடர் தொடர்ந்து விமர்சனம் செய்திருக்கிறது.
இந்த மினி தொடர் அடுத்த வாரம் முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
கட்டுரை 7: பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?
கட்டுரை 8: நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை
கட்டுரை 9: பொய் செய்திகளின் மூலம்
கட்டுரை 10: இணையமும் பொய் செய்திகளும்