வைஃபை ஆன் செய்ததும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு பிரத்யேக வீடியோ வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 4, 5 தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அரசு ஆய்வுக் கூட்டங்கள், இளைஞரணி மாநாட்டுக்கு ஆயத்தப்படுத்தும் செயல்வீரர்கள் கூட்டங்கள் என அரசு, அரசியல் பயணமாகவே இதை அமைத்துக் கொண்டார் உதயநிதி.
தூத்துக்குடியில் தெற்கு, வடக்கு என இரு மாவட்டக் கழகங்களும் அதாவது அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் என இருவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி வரும்போது வழக்கமாக இருக்கும் பெருங்கூட்டம் இல்லை. அதனால் அப்செட் ஆனவர் தான் மட்டுமே பேசி விரைவாக நிகழ்ச்சியை முடிக்கத் திட்டமிட்டார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நூற்றுக்கணக்கான நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. ‘ரெண்டு அமைச்சர்கள் சேர்ந்து இவ்வளவுதான் கூட்டமா?’ என்று உதயநிதி கோபப்பட்டிருக்கிறார்.
இதனால் உதயநிதிக்கு ஏற்பட்ட கோபம் அவரது தென்காசி பயணத்திலும் எதிரொலித்தது. செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட உதயநிதி ஆலங்குளம் வழியாக தென்காசி சென்றார். ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவரை வரவேற்க தென்காசி தெற்கு திமுகவினர் திரண்டிருந்தனர். அங்கே காரை நிறுத்தி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக உதயநிதி தரப்பிடம் சொல்லியிருந்தனர். ஆனால் காரை நிறுத்தாமல் வேகமாக தென்காசி சென்றுவிட்டார் உதயநிதி.
தென்காசியில் சர்க்யூட் ஹவுஸில் தங்கிய உதயநிதி மறுநாள் செப்டம்பர் 5 ஆம் தேதி காலை திடீரென தென்காசி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். அதன் பின் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்காட்சி திறந்து வைத்தல்,துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் ஆகியவற்றை முடித்துவிட்டு மதியம் இரண்டு மணியளவில் உணவு அருந்துவதற்காக மீண்டும் சர்க்யூட் ஹவுஸ் புறப்பட்டார். போகும் வழியில் தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகே தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சுரண்டை ஜெயபால் தான் புதிதாக அமைத்திருக்கும் மாவட்ட திமுக அலுவலகத்துக்கு உதயநிதியை திறந்து வைக்க அழைத்திருந்தார்.
அந்த அலுவலகத்தின் வாசலில் இறங்கிய உதயநிதி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பிறந்தநாளுக்காக அவரது படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு… வாசலில் நிறுவப்பட்ட திமுக கொடிக் கம்பத்தில் கொடியேற்றி வைத்துவிட்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறக்காமல் காரேறி சென்றுவிட்டார். இதனால் மாவட்டப் பொறுப்பாளர் சுரண்டை ஜெயபால் அதிர்ச்சி அடைந்தார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ஆரிடம் இதுகுறித்து அவர் கூறியபோது, ‘விடுய்யா… நானே திறந்து வைச்சுர்றேன்’ என்று சொன்னாராம் பொறுப்பு அமைச்சர்.
மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்த உதயநிதி தென்காசியில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவற்றை அடுத்தடுத்து உடனடியாக முடித்து தென்காசியில் இருந்து புறப்பட்டார். போகும்போது சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ராஜா அமைத்துள்ள தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைக்க கோரிக்கை வைத்திருந்தார். அதையும் நிறைவேற்றாமல் சென்றுவிட்டார் உதயநிதி.
தூத்துக்குடி கூட்டத்தில் ஏற்பட்ட டென்ஷன் தென்காசியிலும் உதயநிதியிடம் எதிரொலித்தது. அதுமட்டுமல்ல… உதயநிதி மாவட்ட அலுவலகங்களைத் திறக்காமல் சென்றதன் மூலம், இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய சீரமைப்புகள் இருக்கலாமோ என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் தென்காசி திமுகவினர்.
தூத்துக்குடி, தென்காசி சுற்றுப் பயணம் குறித்து தனது அதிருப்தியை கட்சித் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் தூத்துக்குடி மாசெக்களான கீதாஜீவன்-அனிதா ராதாகிருஷ்ணன் பற்றிய தனது அதிருப்தியை உதயநிதி கொட்டியிருப்பதாகவும் திமுக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கேபினட்டில் சனாதன விவகாரம்: மோடி போட்ட உத்தரவு!
“இந்தியா என்றால் அடிமை” : கங்கனா ரணாவத்