திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க மதுரை சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.
பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைத்து தரப்பு மக்களிடம் தேர்தல் குறித்த பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் மதுரையில் இன்று (மார்ச் 24) திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூரியை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள், அவரிடம் அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அவர், ”மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் என்னை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் உள்ளேன் என்பது அவருக்கு தெரியும்.
இது நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். நல்லதாகவே நடக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்தார்.
மேலும், ”முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல, அவர்கள் தங்களது கன்னி வாக்கை செலுத்த தயாராக உள்ளனர்.
அனைவரும் கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு சாதாரணமானது அல்ல. நாம் செலுத்தும் ஓவ்வொரு வாக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும்.
வாக்கை யாருக்கு செலுத்த வேண்டுமோ அதை கணித்து வாக்கை செலுத்த வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தனது படங்கள் குறித்து அவர் பேசுகையில், “கருடன் படப் பணிகள் முடிந்துவிட்டது. விடுதலை 2க்கு முன்பு கருடன் படம் வெளியாகும். விடுதலை மாதிரியே கருடனும் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று சூரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா