மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

அதிமுக மீது அதிருப்தியில் தேமுதிக!

அதிமுக மீது அதிருப்தியில் தேமுதிக!

தேர்தல் முடிந்ததும் திமுக கூட்டணியில் இருக்கும் கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் போன்ற சக தலைவர்கள் கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வருகின்றனர்.

தேர்தல் நடந்த விதம் பற்றியும் அதில் கூட்டணியின் ஒத்துழைப்பு பற்றியும் விவாதித்தனர். சில இடங்களில் திமுகவினர் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த விஷயங்களைக்கூட ஸ்டாலினிடம் பேசினார்கள். அடுத்து வரும் நான்கு தொகுதி இடைத் தேர்தல்கள் பற்றியும் ஆலோசித்தனர்.

ஆனால், அதிமுக கூட்டணியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கவே இல்லை. தேர்தலுக்குப் பின் அதிமுக கூட்டணித் தலைவர்கள் சந்தித்துக் கொண்டதாகவோ, விவாதித்ததாகவோ தகவல்கள் வரவில்லை.

இந்த நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நால்வரையும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, தேர்தலுக்குப் பிறகு அழைத்துப் பேசியிருக்கிறார். கூடவே கட்சியின் நிர்வாகிகளும் இருந்துள்ளனர்.

அப்போது தேர்தலில் அதிமுகவின் ஒத்துழைப்பு பற்றி பிரேமலதா கேட்க, அனைவரும் தங்கள் உள்ளக்குமுறல்களைக் கொட்டிவிட்டனர். சுதீஷில் தொடங்கி, வடசென்னை அழகாபுரம் மோகன் ராஜ் வரைக்கும், ‘அதிமுக முழுமையான ஒத்துழைப்பு தரவே இல்லை. அவங்க அதிமுக போட்டியிடுற 20 தொகுதிகள், அப்புறம் 18 சட்டமன்றத் தொகுதிகள்லதான் தீவிர கவனம் செலுத்தினாங்க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளைக் குறைந்தபட்சம் கூட கவனிக்கல. இதே கூட்டணி தொடர்ந்தா நல்லாயிருக்குமானு நீங்கதான் முடிவு பண்ணனும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பு நடந்ததை வைத்து, வரும் நான்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தர வேண்டுமா என்றும், அந்த நான்கு தொகுதிகளில் தேமுதிக தனித்தே களமிறங்கினால் சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கணிசமான வாக்குகளை வாங்கலாம் என்றும் சமூக தளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர் தேமுதிகவிலேயே சிலர்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon