ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர்களைப் பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு 45 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 375 கோடியே 16 லட்சத்து 70,250) நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு, ஆயில் போன்றவை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே, இந்த நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர்களைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவின் நீதிமன்றத்தில் 22 வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஆறு குழந்தைகளின் தாயான தெரசா கார்சியா, 2020-ல் அஸ்பெஸ்டாஸ்டுடன் தொடர்புடைய ஒரு வகை புற்றுநோயான மீசோதெலியோமாவால் உயிரிழந்திருக்கிறார்.
டால்கம் அடிப்படையிலான பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை அறிந்து விற்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
தெரசா கார்சியா மரணத்திற்கு, கென்வியூ ( ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திலிருந்து பிரிந்து உருவான நிறுவனம்) 70 சதவிகிதமும், மீதமுள்ள 30 சதவிகித காரணம் ஜான்சன் அண்டு ஜான்சன் மற்றும் அதன் பிரிவுகளில் ஒன்று பொறுப்பு என்று குழு கண்டறிந்தது.
எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 45 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக கென்வியூ, ஜான்சன் அண்டு ஜான்சன் வழக்கு விசாரணையின் தலைவர் எரிக் ஹாஸ், “நிறுவனம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும்.
சட்டம், அறிவியலில் எந்த அடிப்படையும் இல்லாத, விசாரணை நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை வழக்கமாக எதிர்கொள்வதைப் போல எதிர்கொள்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சீஸ் – சேமியா ரோல்ஸ்
GTvsPBKS : சாய் கிஷோர் பந்துவீச்சில் பணிந்தது பஞ்சாப்!
இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!