மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் சாக்ஷி மாலிக்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.
அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
இதற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்து ஹரித்வார் சென்றனர்.
அப்போது, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை மேற்கொள்வோம் என மல்யுத்த வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், ”பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்’ என கூறியிருந்தார்
இதனை ஏற்று கொண்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக்,
மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை இன்று (ஜூன் 7 )அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது , அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது.
மல்யுத்த அமைப்பிற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தங்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் ஆகிய ஐந்து முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இன்னும் ரயில் விபத்துக்கள் நடக்கும்: ஹெச்.ராஜா திடுக்!
”தரமில்லாத பொருட்களை வாங்கினால்…” -அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு