Our Self-Reliance Social Change Liberation

இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ் Our Self-Reliance Social Change Liberation

உலகப் பொருள் உற்பத்தி மாறுகிறது. மனிதர்கள் உருவாகி இயங்க பொருள்கள் வேண்டும். பொருள்கள் உருவாகி அவர்களோடு இயங்க வேண்டும். இதுவரையிலும் பொருள்கள் இரும்பினால் உருவாகி எண்ணெய், மின்சாரத்தால் நம்முடன் சேர்ந்து இயங்கி வருகின்றன. இப்போது அது இரும்பு சிலிக்கானினால் உருவாகி மரபான மற்றும் மரபுசாரா எரிபொருள், மின்சாரம், மின்கலத்தின் மூலம் இயங்குவதோடு இணையத்தின் வழியாக “இணைந்தியங்கும்” பொருள்கள் என்பதாக பொருள் உற்பத்தி மாறிக் கொண்டிருக்கிறது (Transitioning).

உற்பத்தி மாற்றம் உலக முரணை ஏற்படுத்துகிறது

இந்தப் புதிய உற்பத்தித் தொழில்நுட்பங்களை மேற்கு மட்டுமல்ல… கிழக்கின் சீனாவும் கைப்பற்றியதைத் தொடர்ந்து உலகின் மீதான மேற்கின் ஆதிக்கம் உடைகிறது. ஆதிக்கத்தைத் தக்கவைக்க மேற்கும் அதிலிருந்து விடுபட கிழக்கு முயற்சி செய்வதும் உலக முரணாக வெடித்திருக்கிறது.

முரண்கள் போரிலும் புதிய உலக உருவாக்கத்திலும் முடிகிறது

டாலரில் எண்ணெய் எரிவாயுவை விற்க மறுத்த ரஷ்யாவைப் பணியவைக்க ஏற்பட்ட உக்ரைனியப் போர் டாலர் மைய வணிகத்தை உடைத்து, பல நாடுகளும் பல நாணயங்களில் வணிகம் செய்யும் பல்துருவ உலகை உருவாக்கி இருக்கிறது. இந்திய, சவுதி, ஐரோப்பிய நாடுகளைக் கிழக்கிடம் இருந்து பிரிக்க செய்த முயற்சி, பாலஸ்தீனப் போராக வெடித்து யூரேஷிய பகுதியை இணைத்து தங்களுக்குள் நிலவழியாக சொந்த நாணயத்தில் வணிகம் செய்வதை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.

உற்பத்தியைக் குவிக்க பார்ப்பனிய வடக்கு முனைகிறது.இது உலக நாடுகளின் மீதான டாலர் ஆதிக்கப் பிடியைத் தளர்த்தி வருகிறது. இந்த முரணான உலக சூழலைப் பயன்படுத்தி பழைய இரும்பு, சிமென்ட், எண்ணெய் சுத்திகரிப்பு நுட்பங்களைக் கைப்பற்றியதைப் போன்று புதிய உற்பத்தி தொழில்நுட்பங்களையும் தன்னிடம் குவித்து இந்தியாவின் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் இயங்கி வருகிறது பார்ப்பனியம்.

திராவிடத் தெற்கு ஆதிக்கத்தை ஏற்க மறுத்து முரண்படுகிறது

நிலவுடைமை கால வடக்கின் மூவர்ண ஆதிக்க அரசியலுக்கு அடிபணியாமல் தொழில்துறை காலத்தில் சமத்துவ சமூகநீதி அரசியலால் எழுந்த தென்னகம், ஆதிக்கத்தை வலுப்படுத்தி வரும் வடக்கை எதிர்த்து நின்று முரண்படுகிறது. புதிய உற்பத்தியைக் கைப்பற்ற பொருந்தாத பழைய இந்துத்துவ சாதிய ஒழுங்கு இஸ்லாமிய வெறுப்பு அரசியலையும் கைகொள்ளும் பார்ப்பனியம் அகத்திலும் புறத்திலும் அரசியல் ஒருங்கிணைவை எட்ட முடியாமல் இருபக்கமும் முரண்படுகிறது.

ஒரு வரலாற்று வாய்ப்பு தென்னகத்தின் முன் நிற்கிறது

இஸ்லாமியர்களுடன் இணக்கம் காண முடியாத பார்ப்பனியம் யூரேஷியா இணைவின்போதெல்லாம் வீழ்ச்சியைச் சந்தித்ததை வரலாறு பதிவு செய்கிறது. நிலவழி யூரேஷிய இணைவின்போதெல்லாம் கடல்வழி வணிகம் செய்து எழுந்த தென்னகத்தின் முன் இப்போதும் அப்படியான வரலாற்று வாய்ப்பு வந்து நிற்கிறது.

Our Self-Reliance Social Change Liberation

தெற்கின் பொருத்தமான அரசியல் பொருளாதார அடித்தளமற்றது

பார்ப்பனியத்தின் ஒரு சிலரின் பொருளாதார ஓர்மையை நிலைநாட்டும் ஒற்றை அடையாள இந்து தேசிய சாதிய மத வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக எல்லோரின் நலனையும் முன்னெடுக்கும் பன்மைத்துவத்துக்கான தனது சமத்துவ சமூகநீதி அரசியலை மொத்த இந்தியாவுக்குமான தீர்வாக முன்வைக்கிறது தென்னகம். ஆனால், அந்த அரசியல் மூலம் எல்லோருக்கும் பகிர்ந்தளித்துக் கொடுப்பதற்கான பொருளாதாரத் திட்டமும் அதனை மையப்படுத்திய அரசியல் முழக்கமும் இல்லாமல் பின்னடைவைச் சந்திக்கிறது.

கடல்வழி வணிக மேற்கின் தேவை

உக்ரைன் போரின் வழியான அமெரிக்காவின் எரிவாயு ஆதிக்க அரசியல் மற்றும் பாலஸ்தீனப் போரைத் தொடர்ந்து வேகமெடுக்கும் யூரேஷிய இணைவு ஆகியவற்றால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் மேற்கு ஐரோப்பா, மாற்று உற்பத்தித் தொழில்நுட்பம் மற்றும் ஆசியாவுடனான கடல்வழி வணிகத்தை வலுவாக்கி மீள வேண்டிய தேவையில் இருக்கிறது.

நிலவழி கிழக்கின் முனைப்பு

யூரேஷிய இணைவில் விடுபட்டிருக்கும் ஆசியாவின் மற்றுமொரு முக்கியமான மையமான இந்தியாவைத் தன்னுடன் இணைத்து வலுப்படுத்தி அமெரிக்க ஆதிக்கத்தை உடைக்கும் முனைப்பில் இருக்கிறது ரஷ்ய-சீன நாடுகளை உள்ளடக்கிய கிழக்கு.

தேவை இணைப்பு Our Self-Reliance Social Change Liberation

இந்த இருவரையும் தென்னகம் தன்னோடு இணைத்துக் கொண்டு மரபான எண்ணெய் சார்ந்த உற்பத்தியின் வழியாகத் தன்மீது நிலைநாட்டப் பட்டிருக்கும் வடக்கின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட அவசியமான புதிய மாற்று மரபுசாரா மின்னணு உற்பத்தி தொழில்நுட்ப தற்சார்பை அடைவது எப்படி? என்ற கேள்விக்கான விடையில் இருக்கிறது தெற்கின் சமூகநீதி அரசியலுக்கான பொருளாதார அடித்தளம்.

இன்றைய பிரச்சினைகள்: ஊட்டச்சத்து குறைபாடு, முறையான வேலையின்மை

பெரும்பாலானோர் சிந்திக்கும் திறனற்று சாதியக் குறுங்குழுவாத கும்பல் மனநிலையில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக மலிவான மாவுச்சத்து மிகுந்த உணவை உண்டு நோயுற்று (நீரிழிவு, ரத்த அழுத்தம்) சத்தான உணவின்றியும் அவற்றை வாங்குவதற்கான திறனின்றியும் அந்தத் திறனை வளர்க்கும் கல்வியின்றியும் அந்தக் கல்விக்கேற்ற “முறையான” வேலையின்றியும் உழல்கிறார்கள்.

ஊட்டச்சத்துக்கு விவசாயக் கூட்டுறவும் இயந்திரமயமாக்கமும் வேண்டும்

அதிகமான மனிதர்களின் உழைப்பில் குறைவான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும் மரபான விவசாயத்தைப் புதிய நுட்பங்களையும் இயந்திரங்களையும் கொண்டு அளவிலும் மதிப்பிலும் அதிக உணவு உற்பத்தியைக் கூட்ட இந்தியாவும் தமிழகமும் தவறிவிட்டன. இப்போது சில ஏக்கர் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளால் அதிகமாக முதலிட்டு, இயந்திரமயமாக்கி உற்பத்தியைக் கூட்ட முடியாது. இயந்திரமயமாகாமல் உணவு உற்பத்தியைப் பெருக்கி மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்க முடியாது என்ற நிலையில் மூலதன பொருள்களை பகிர்ந்து கொள்ளும் கூட்டுறவு சார்ந்த இயந்திரமயமாக்கம் இங்கே இன்றியமையாததாகிறது.

முறையான வேலைக்குத் திறனும் போட்டியும் கூட வேண்டும்

நிலவுடைமை காலத்தில் சாதியாகப் பிரிக்கப்பட்டு சந்தையில் இருந்து விலக்கப்பட்டு திறன் குன்றி வரலாற்றில் தேங்கியது சாதிய அடுக்கில் மேலிருந்து கீழாக படிப்படியாக உடைந்து வருகிறதே ஒழிய, ஒட்டுமொத்தமாக உடைத்து நொறுக்கப்படவில்லை. அதனால் ஒவ்வொருவரும் படித்து திறனை வளர்த்து போட்டிப்போட்டுக் கொண்டு பொருளை உற்பத்தி செய்யும் உண்மையான தொழில்மயமாக்கம் ஏற்படவில்லை. மாறாக மிகச் சிலர் படித்து உண்டான குறைவான திறனைக் கொண்டு பகுதியளவே இது நடந்திருக்கிறது. இது முழுமை பெற எல்லா சாதிய மட்டத்திலும் திறன்கூடி நுட்பம் பெருகி சந்தையில் போட்டி கூட வேண்டும். அதுவே முறையான வேலைவாய்ப்பைப் பெருக்கவுமான வழியுமாகும்.

சமூக மாற்றத்துக்கு விவசாயமும் தொழிற்துறையும் வளர வேண்டும்

Our Self-Reliance Social Change Liberation

வரலாற்றில் தேங்கிய நமது விவசாய வளர்ச்சியை முழுமையாக்கி, அதனூடாக தொழிலாளர்கள் ஊட்டச்சத்தான உணவு, கல்வி, திறன் வளர்ச்சி பெற்று தொழில்மயமாகி, இந்தச் சாதிய சமூக ஒழுங்கை உடைப்பது நாம் கடுமையான போராட்டத்தின் மூலம் கடக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டம். அதனை வேகமாக கடக்க முயற்சி செய்யலாமே ஒழிய குரங்கைப்போல ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவ முயற்சி செய்யக் கூடாது.

அதேசமயம் தொழில்துறை வளர்ந்து ஓரிடத்தில் ஏகாதிபத்தியமாக குவிந்துவிட்ட இந்தக் காலத்தில் விவசாய புரட்சி செய்கிறேன் என்று கிளம்பவும் முடியாது. எனவே விவசாய வளர்ச்சியும் தொழில்மயமாக்கமும் இணைந்த புதிய பொருளாதாரப் பாதையைக் கண்டடைய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

விடுதலைக்குத் தொழில்நுட்பங்களில் தற்சார்பை எட்ட வேண்டும்

பழைய பொருள் உற்பத்திக்கான இரும்பு, சிமென்ட் பொருள்களின் இயக்கத்துக்கான எண்ணெயைக் கைப்பற்றி அதன் வழியாக நமது உழைப்பின் பலன்களை அறுவடை செய்துவரும் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் புதிய பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களையும் கைப்பற்றி அந்தச் சுரண்டலைத் தொடர முனைகின்றன.

இவர்களின் இந்த ஆதிக்க சுரண்டலில் இருந்து விடுபட இவர்களைச் சார்ந்த பழைய உற்பத்தியில் இருந்து விலகி மாறும் புதிய உற்பத்திக்கான “சிலிக்கான், மரபுசாரா எரிபொருள், மின்கலங்கள், இணையம், உயிரித் தொழில்நுட்பங்களில்” நாம் தற்சார்பை அடையும் இலக்கை நோக்கி நகராமல் இவர்களிடம் இருந்து விடுதலை பெறுவதோ இந்தச் சாதிய சமூகத்தை மாற்றியமைப்பதோ சாத்தியமில்லை.

எதில் தற்சார்பு? எப்படி அடைவது? அது எப்படி நமது இன்றைய பிரச்சினைகளைத் தீர்த்து நமது சமூகத்தை மாற்றும்?

அடுத்த கட்டுரையில் காணலாம்…

கட்டுரையாளர் குறிப்பு

Our Self-Reliance Social Change Liberation Against Global India by Baskar Selvaraj article in Tamil

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உக்ரைன் – பாலஸ்தீனப் போர்கள்..நொறுங்கும் அமெரிக்க ஆதிக்கம்..இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1

உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு – பகுதி 1

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்! – பகுதி 2

இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3

Our Self-Reliance Social Change Liberation

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *