பாஸ்கர் செல்வராஜ்
உக்ரைன் – ரஷ்யப் போரின் முடிவில் தமிழர்கள் செய்ய வேண்டிய நகர்வு!
உக்ரைன் போர், பாலஸ்தீனப் போர் ஆகிய இரண்டிலும் ஒரு பொதுவான போக்கைக் காண முடிந்தது. இரண்டிலும் அமெரிக்க அணி நாடுகள் ஒருபுறமாகவும் மற்ற உலக நாடுகள் மறுபுறமாகவும் பிரிந்து நின்றார்கள். இதில் விதிவிலக்காக இந்தியா முதல் போரில் அமெரிக்க அணிக்கு எதிராகவும் அடுத்த போரில் ஆதரவாகவும் நின்றது. மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டு ஒன்றிய பாஜக அரசு முரணான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை இந்துத்துவ – சியோனிச மதவெறி அரசியலின் ஒற்றுமையாகப் பார்ப்பது தவறான புரிதலை நோக்கி இட்டுச் சென்றுவிடும். மாறாக இந்தப் போர்களின் அரசியல் பொருளாதாரத்தில் இந்தியாவின் முன்னிருந்த, தெரிவது என்ன என்று பார்ப்பதே சரியானதாக இருக்கும்.
போருக்கு முந்தைய டாலர் மைய மாற்றம்
குறிப்பாக இரண்டாயிரத்து எட்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகான இந்தியாவின் மூலதனம், பாதுகாப்பு, வங்கி, நிதி, காப்பீடு, வர்த்தகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்சார்பு நிலைப்பாடு இன்றி படிப்படியாக அந்நிய மூலதனம் மற்றும் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு அகல திறந்துவிட்டதும் இந்தியாவில் எஞ்சியிருந்த அரச முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் அடித்து நொறுக்கப்பட்டு முற்று முழுதான தரகு முதலாளித்துவ ஜனநாயகமாக (Vassal state) மாற்றியமைக்க முயன்றதன் தொடர்ச்சியில் வைத்து இதைப் பார்ப்பதும் அவசியமானது.
இதற்கு முந்தைய இந்தியாவின் முறைசாரா பொருளாதாரம் ரூபாயை மையமாகக் கொண்டும் மற்றவை ரூபாய், டாலர் ஆகிய இரண்டையும் கொண்டும் இயங்கியது. பின்பான மாற்றங்கள் நமது வங்கி, நிதி நிறுவனங்கள் படிப்படியாக டாலர் முதலீட்டின் கீழும் முறைசாரா பொருளாதாரம் இந்த நிதி நிறுவனங்களின் கீழும் கொண்டுவரப்பட்டு இந்தியப் பொருளாதாரம் டாலர் மைய பொருளாதாரமாக மாற்றப்பட்டு வந்தது. இதற்கு நேரெதிராக உலகளவிலான டாலர் மைய பொருளாதாரமோ படிப்படியாக உடைக்கப்பட்டு வந்தது.
டாலரை ஈர்த்த இந்தியா விலக்கிய உலகம்
உச்சமாக உக்ரைன் போர் தெளிவாக, அமெரிக்க டாலர் மைய ஒற்றைத்துருவ உலகை மீண்டும் திரும்ப முடியாத, பல நாணயங்களில் வர்த்தகம் நடக்கும் பல்துருவ உலகமாக உடைப்பதில் முடிந்து கொண்டிருக்கிறது. அதை அடுத்த ஹமாசின் இஸ்ரேல் மீதான தாக்குதல் பெட்ரோ டாலருக்கு அவசியமான இஸ்லாமிய மேற்காசிய நாடுகளை மாற்று நாணய வர்த்தக அணியான ஈரான் – ரஷ்ய – சீனாவுக்கு நெருக்கமாக்கி இஸ்ரேல் – அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளை உலகின் மற்ற நாடுகளிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு இவை இருவேறு கண்டங்களில் இருவேறு தேசிய இனங்கள், இருவேறு அரசியல் காரணங்களுக்காகப் போரிடுவதைப்போல தோன்றினாலும் அடிப்படையில் இவை அமெரிக்க மைய பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரானவை.
இந்த உலக டாலர் மைய ஆதிக்க உடைப்பும், இந்தியாவின் ரூபாய் மையத்தில் இருந்து டாலர் மையத்துக்கான மாற்றமும் எதிரெதிரான திசையில் சென்ற நிலையில் ரஷ்ய – உக்ரைனியப் போர் நமது ரஷ்ய ஆயுத இறக்குமதி சார்பையும், விலையைத் தீர்மானிக்கும் சரக்கான எண்ணெய் இறக்குமதியை டாலரில் மட்டுமே செய்வதையும் கோரியது. சுருக்கமாக முற்று முழுதான அமெரிக்க அணியாக மாற வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளியது. அப்படியான முடிவு பகுதி அளவு காலனியாக இருக்கும் இந்தியா முழுமையான அமெரிக்கக் காலனியாக மாறுவதும் இந்திய ஆளும்வர்க்கம் முன்பு இங்கிலாந்துக்கு முற்று முழுதான தரகு வேலை செய்ததைப்போல அமெரிக்காவுக்கும் அதன் ஆளுகைக்குள்ளும் செல்வதில் முடியும் என்பதால் வேறு வழியின்றி அமெரிக்க எதிர்நிலைப்பாடு எடுத்தது ஒன்றியம்.
டாலருடன் இணைவும் பிரிவும் ஏற்படுத்திய முரண்
இது நேட்டோ அணியின் டாலரை முழுமையாக ஏற்று இணையவும் முடியாமல் சீன – ரஷ்ய அணியின் நாணய வர்த்தகத்தில் இருந்து விலகவும் முடியாமல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எந்தத் திசையில் செல்வது என்ற தெளிவின்றி முரண்பட வைத்தது. இந்தியத் தற்சார்புக்கு இணக்கமான முரணற்ற வெளியுறவு நிலைப்பாடுகளை எடுக்கவிடாமல் முரண்களில் முட்டிக்கொள்ள வைத்தது. அது இந்தியாவுக்கு உள்ளும் புறமும் இந்துத்துவத்தை இருவேறு முரண்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியது.
இந்தப் பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே தமிழக மாற்றங்களும் இருப்பதால் நமது ஒன்றிய இந்துத்துவத்துடனான முரண்பாட்டை இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாகக் காண வேண்டுமே ஒழிய, தனியாகப் பார்ப்பது புரிதல் குறைபாட்டை ஏற்படுத்தி தவறான முடிவை எடுப்பதை நோக்கி நகர்த்தி விடும். சரியான புரிதல் ஏற்பட இந்தப் போர்களின் அரசியல் பொருளாதாரத்தையும் அது செல்லும் பாதையும் புரிந்துகொள்வது அவசியமானது. அது ஒன்றிய இந்துத்துவத்துடனான நமது முரணை தீர்த்துக் கொண்டு நமக்கான தற்சார்பை அடைய உதவும்.
போரில் ரஷ்யா பெற்ற பொருளாதார வெற்றி
உக்ரைன் போரைப் பொறுத்தவரை நேட்டோவின் நோக்கம் ரஷ்யாவை உருக்குலைத்து அதன் எரிவாயு கனிம வளங்களையும் அதற்கான ரஷ்யாவின் சந்தைகளையும் உலகமயவாதிகள் கைப்பற்றிக் கொள்ளும் பொருளாதார நோக்கம் கொண்டது. ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கம் அதைத் தடுத்து நிறுத்தி எதிரியின் டாலர் மைய வர்த்தகத்தை உடைத்துத் தனது பலத்தைப் பெருக்கிக் கொள்வது என்பதான “தற்காப்புத் தாக்குதல்” (Defensive Offence) தன்மையைக் கொண்டது.
இந்தப் போரின் மூலம் ரஷ்யாவின் ஐரோப்பிய எரிவாயுச் சந்தையைப் பகுதி அளவு கைப்பற்றுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும் ரஷ்யாவை உருக்குலைத்து அதன் வளங்களைக் கைப்பற்றும் நோக்கத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. ரஷ்யா தனது வளங்களைக் காத்து தனது நாட்டின் அரசியல் பொருளாதார நிலைத்தன்மையைக் காத்திருப்பதோடு ஐரோப்பியச் சந்தைக்குப் பதிலாக ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை உலகமயவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் உற்பத்தி மையங்களையும் சந்தைகளையும் உடைத்து ஓரளவு தன்பக்கம் கொண்டுவந்து டாலர் மைய வர்த்தகத்தில் சரிசெய்ய முடியாத உடைப்பை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.
பல்துருவ உலகத்தை உருவாக்கி அதில் தன்னைத் தவிர்க்க முடியாத ஒரு துருவமாக நிலைநிறுத்தி விட்டது. மேற்குலக ஆதிக்கத்தில் இருந்த தெற்குலக நாடுகள் இரண்டையும் ஏற்று, சமப்படுத்தி தங்களின் மீதான மேற்கின் ஆதிக்கத்தைக் குறைத்துக் கொண்டன. தோல்வியடைந்த நேட்டோ நாடுகள் பணவீக்கத்தையும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. போருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் எதிரான வலதுசாரிகளின் அரசியல் வலுப்பெற்று வருகிறது. ரஷ்யாவின் புதின் அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் நிலையிலும் அமெரிக்காவின் பைடன் தோல்வியடையும் நிலையிலும் இருக்கிறார்கள்.
நேட்டோ தோல்விக்குப் பிறகான நோக்கங்கள்
போருக்கான நோக்கத்தில் நேட்டோ தோல்வியடைந்து விட்ட நிலையில் தொடரும் இந்தப் போரினை இனி நேட்டோ இழைப்பைக் குறைக்கவும் ரஷ்யா பலனைக் கூட்டவுமான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் முக்கிய துறைமுகம் மற்றும் கனிம வளமிக்க பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி விட்ட நிலையில் எஞ்சி இருக்கும் துறைமுகப் பகுதிகளையும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளையும் கைப்பற்றி எதிர்த்துப் போராட எதிரிகளற்ற ஒரு நடுநிலை அரசை உருவாக்குவது ரஷ்யாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.
இப்போது தோல்வியடைந்தாலும் உக்ரைனை நேட்டோவில் இணைத்து எதிர்காலத்தில் ரஷ்யாவைத் தாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி அந்தப் பகுதியில் தனது இருப்பை நிலைநாட்டுவது அமெரிக்காவின் நோக்கம். இருவரும் ராணுவ பலத்தைக் காட்டி தத்தமது இலக்கை மற்றவரை ஏற்கவைத்துப் போரை இறுதிக்குக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். ஆனால், எதார்த்த நிலையோ இஸ்ரேல் – பாலஸ்தீன போரினால் உக்ரைன் போரிட போதுமான எறிகணை குண்டுகள்கூட கிடைக்கப் பெறாமலும் எந்தப் பலனுமற்ற இந்தப் போருக்கு எதற்குச் செலவிட வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள் மல்லுக்கட்டும் நிலைமை.
அப்படியே போரிட ஆயுதங்களும் பணமும் கிடைத்தாலும் உக்ரைனிடம் போரிடப் போதுமான ஆட்கள் இல்லை. இதுவரை ஐந்து லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்திருப்பதாகக் கணிக்கிறார்கள். ராணுவத்தில் சேர வயது வரம்பைத் தளர்த்தியும் போதுமான ஆட்கள் கிடைக்காததால் உக்ரைன் ராணுவம் வலுக்கட்டாயமாக இளைஞர்களை இழுத்துச் செல்லும் காணொலியே அதன் இன்றைய நிலையை எடுத்துச் சொல்ல போதுமானது.
மாறாக ரஷ்ய ராணுவத்துக்கோ போரிட ஆட்களைத் திரட்டுவதில் எந்த சிக்கலும் இல்லை. இப்படித் திரட்டியவர்களுக்கு பயிற்சி வழங்கி நான்கு லட்சத்துக்கும் அதிகமானவர்களை உக்ரைனில் நிறுத்தி வைத்திருக்கிறது. அதன் ராணுவ தளவாட உற்பத்தி முன்னிலும் அதிகமாகப் பெருகியிருப்பத்தோடு சீனா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட ராணுவ உற்பத்தி சங்கிலி கொண்ட நாடுகளுடனான ராணுவக் கூட்டையும் ஏற்படுத்திக் கொண்டு வலுவான நிலையில் இருக்கிறது.
நமது நகர்வு அவசியம்
இதை எல்லாம் மீறி நேட்டோ உதவியுடன் உக்ரைனின் கையோங்கினாலும் அமெரிக்கா இழந்த டாலர் மைய ஆதிக்கத்தை இனி திரும்பப் பெறுவது இயலாத காரியம். இழந்த ஆதிக்கத்தை மீட்க நேட்டோ ரஷ்யாவுடன் நேரடிப் போரில் இறங்கி அணு ஆயுதம் கொண்ட ரஷ்யாவை வீழ்த்துவதும் சாத்தியம் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும். எனவே பல்துருவ உலகமும் பல நாணய வர்த்தகமும் மாற்ற முடியாத உலக எதார்த்தம். அதைத் தமிழர்கள் உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு நமக்கான தற்சார்பை அடையும் நோக்கில் தமிழக அரசு சரியான நிலைப்பாட்டை எடுப்பதும் அரசியல் பொருளாதார நகர்வுகளைச் செய்வதும் அவசியமானது. அதுவல்லாமல் டாலர் முதலீடுகளை ஈர்ப்பதையே தாரக மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருப்பது நமது தற்சார்புக்கு எதிரானது மட்டுமல்ல; நமது நிலைத்தன்மைக்கு ஆபத்தானதும்கூட.
உக்ரைன் போர் நமக்கு பல்துருவ உலகம் பல நாணய வர்த்தகம் தொடர்பான நிலைப்பாடுகளை எடுக்க அவசியமானது என்றால் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரை எதன் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும்? அதன்மூலம் நாம் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்?
அடுத்த கட்டுரையில் காணலாம்…
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சாக்லேட் சேமியா
‘கழக’ தலைவர் விஜய்… அதிகாலை கூட்ட ரகசியம்!
’பவதாரிணி மறைவு… இசையுலகிற்கு இழப்பு’ : அரசியல் தலைவர்கள் இரங்கல்!
டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை நோக்கி பாயத் தயாராகும் ED