“நான் ராஜினாமா செய்ய வேண்டுமா” : செந்தில் பாலாஜி பதில்!

Published On:

| By Kavi

என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்சார மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மத்திய குற்றப் பிரிவு விசாரணை தொடர வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த வழக்கில் அமைச்சர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்” என்றும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும் என்றும் உத்தரவில் கூறியுள்ளது.
மேலும், “அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழங்கிய சம்மன் செல்லுபடியாகும். அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் தனது விசாரணையைத் தொடரலாம்” என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து இன்று (மே 17) சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி,
“யார் புகார் தெரிவித்தார்களோ, யார் மீது புகார் கொடுத்தார்களோ அவர்களுக்குள் ஒரு சமரசம் ஏற்பட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. புகார் தெரிவிக்கும் போது அதில் என் பெயர் இல்லை. வழக்குப் பதிவு செய்யும் போது அதில் என் பெயர் இல்லை. பின்னர் அரசியல் காரணங்களுக்காக என் பெயர் சேர்க்கப்பட்டது.
அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மிக தெளிவாக முடித்து வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு சென்றவர்கள் இந்த வழக்கில் புகார் கொடுத்தவர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ என யாரும் செல்லவில்லை. அதை முதல் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது நபர்கள் உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். வழக்கை இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. வழக்கு விரைவாக முடிவுக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்றார்.
ஒரு அமைச்சராக போலீஸ் விசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “குட்கா வழக்கில் சிக்கியவர்கள் மந்திரியாகவும், டிஜிபியாகவும் இருந்தனர். அவர்களிடமெல்லாம் இந்த கேள்வியை கேட்காமல். இப்போது என்னிடம் கேட்கிறீர்கள். அவர்களிடம் கேட்டுவிட்டு என்னிடம் கேளுங்கள் பதில் சொல்கிறேன். இந்த வழக்கை பொறுத்தவரை முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்றார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் உங்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்களே, “குட்கா வழக்கில் மாட்டினவர்களை ஏன் அப்போது நீக்கவில்லை. கொடநாடு விவகாரத்தில் தன் மீதான வழக்கில் ஏன் தடையாணை பெற்றுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது முதல்வராக இருந்த அவர் அப்போது ராஜினாமா செய்திருக்கலாமே.
ஆனால் நான் இப்போது அப்படி சொல்லவில்லை. எப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை என்கிறேன். வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று கூறினார் செந்தில் பாலாஜி.
பிரியா

சிசோடியா போல செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம்: பத்திரிகையாளர் ஷ்யாம்

திருமண தேதியை அறிவித்த சர்வானந்த் குடும்பத்தினர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share