அதிமுக ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துவிட்டபோதும்… அவருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார்.
பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு, ஓபிஎஸ் நீக்கம், பொருளாளர் நானே என ஓபிஎஸ் சின் கோரிக்கையை வங்கிகள் நிராகரிப்பு, அதிமுக தலைமை அலுவலகத்தை உயர் நீதிமன்றம் தன்னிடம் ஒப்படைத்தல் என கடந்த சில நாட்களில் அதிமுக என்ற கட்சி ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான அம்சங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
அதேநேரம் ஒப்பந்ததாரர் செய்யாதுரை, முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நண்பர் வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார் போன்றோருக்கு நெருக்கமானவர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டுகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதலில் டெல்லி யார் பக்கம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இருவரில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்விக்கான பதில் இருக்கிறது.
இருவருமே தேர்தல் ஆணையத்தை நாடியிருக்கும் நிலையில் அதிமுகவின் சின்னம் யாருக்கு என்பதில் தேர்தல் ஆணையத்தின் முடிவே முக்கியமானது.
இந்தப் பின்னணியில்தான் நாளை (ஜூலை 22) எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக அவரது வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.
வரும் 24ம் தேதியுடன் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சி, மறுநாள் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க எடப்பாடி தீவிரமான முயற்சியில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
எடப்பாடி பழனிசாமியை குடியரசுத் தலைவர் பிரிவுபசார நிகழ்ச்சி, புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதே டெல்லியில் அவருக்குள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் அவரது வட்டாரத்தினர்.
அதேநேரம் பன்னீரின் மகனும், மக்களவை அதிமுக ஒரே உறுப்பினருமான (நீக்கப்பட்ட) ஓ.பி.ரவீந்திரகுமாரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளலாம் என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில்.
ஓ.பன்னீர் கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்பதால் அவர் டெல்லி செல்லக் கூடுமா என்பது பற்றி அவரது வட்டாரத்தில் உறுதியான தகவல் இல்லை.
டெல்லி பயணத்தில் எடப்பாடிக்கு கிடைக்கும் ரெஸ்பான்சை பொறுத்தே பன்னீரை பாஜக கைவிடுகிறதா என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கும்.
கிறிஸ்டோபர் ஜெமா