How to deal with divorce?

விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

விவாகரத்து மோசமான ஒரு விஷயமா? விவாகரத்தை எப்படி கண்ணியமாக கடந்து செல்வது? விவாகரத்துக்குப் பின்பு, மறுமணம் செய்துகொள்வது சரியா? மறுமணத்தினால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? இத்தனை கேள்விகளுடன், இந்தப் பதிவில், விவாகரத்தின் எல்லாக் கோணங்களையும் உள்ளடக்கியுள்ள சுவாரஸ்யமான மேலும் பல அம்சங்களுக்கு சத்குரு பதில் தருகிறார்.

விவாகரத்துக்கான காரணங்கள்

கேள்வியாளர் : திருமணம், சோர்வை ஏற்படுத்தும் ஒரு யுத்தகளமாகும் போது, விவாகரத்து செய்துகொள்வது மேலானதுதானே?

பதில்

நம்மால் மற்றொரு நபருடன் சண்டையிடாமல் வாழமுடிந்தால், அப்போது விவாகரத்து என்ற கேள்வியே எழாது. நீங்கள் வீதியில் செல்லும் யாரோ ஒருவருடன் சண்டையிடவில்லை, ஒரு காலத்தில் அற்புதமானவர் என்று யாரை நீங்கள் நினைத்தீர்களோ அவருடன் சண்டையிடுகிறீர்கள். இந்த சண்டையானது, அந்த நபர் திடீரென்று அசிங்கமானவர் ஆகிவிட்டார் என்ற காரணத்தினால் அல்ல. இந்த சண்டை ஏன் எழுந்துள்ளது என்றால், நாம் வளர்ந்து வரும் நிலையில், நமக்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

இரண்டு நபர்கள், இரண்டு திசைகளில் வளர்வது சரியானதுதான். இணைந்திருப்பதற்கு ஒரே விதமாக நாம் இருக்கவேண்டியது இல்லை. இருவரும் ஒரே விஷயங்களை விரும்பவேண்டும், ஒரே விஷயங்களைச் செய்யவேண்டும் அல்லது ஒரே விதமாக உணரவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் வெவ்வேறு வழிகளில் வித்தியாசமாக இருந்துகொண்டும், இணைந்து வாழமுடியும்.

உங்களுடன் இணைந்திருப்பதற்கு, மற்றவரும் உங்களைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஒருவிதமான முதிர்ச்சியின்மை இருக்கிறது. உலகில் எங்குமே, இரண்டு தனிமனிதர்கள் அச்சு அசலாக ஒரே விதமாக இல்லை. இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில், வாழ்வின் சில அம்சங்களில் சில வித்தியாசங்கள் இருக்கும்.

ராபர்ட் ஒவன் என்ற அமெரிக்க நூலாசிரியர் கூறினார்,” உலகத்தில் இருக்கும் அனைவரும் வினோதமானவர்களாகவே இருக்கின்றனர், என்னையும் உங்களையும் தவிர. ஆனால் நீங்களும்கூட சிறிது வினோதமானவர்தான்” தயவுசெய்து உங்கள் மனதை உற்றுப்பாருங்கள். உங்கள் காரண அறிவின் பாதையில் நீங்கள் சென்றால், உலகத்தில் ஒருவரும் சரியானவர் இல்லை. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் அன்பான நபரை சற்று நெருங்கிச் சென்று, அந்த நபருடன் உங்களுக்கு எத்தனை அடுக்குகள் எதிர்ப்பு இருக்கிறது என்று சோதனை செய்து பாருங்களேன்.

வீதியில் செல்லும் மனிதரை மறந்துவிடுங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெருங்கிய நபரிடம்கூட உங்களுக்கு பல அடுக்குகளில் எதிர்ப்பு இருக்கிறதல்லவா? ஆகவே, அதன் பொருள் என்னவென்றால், உலகில் ஒருவரும் உங்களுக்கு சரியானவர் இல்லை. ஒருவரும் சரியில்லை என்றால், இதில் சரி அல்லது சரியில்லை என்பதெல்லாம் கிடையாது. அது என்னவென்றால் நீங்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அதை நோக்கி நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துள்ளது போல் தோன்றுகிறது. அந்த நோக்கில் நீங்கள் மேலும் முன்னேறினால், அது மேலும் பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்.

இரண்டு வெவ்வேறு நபர்கள், இரண்டு வித்தியாசமான புரிதல்களுடன் செயல்படுவதில் தொந்தரவு எதுவும் இல்லை. அடிநாதமான காதல் உணர்ச்சிதான் இருவரையும் இணைத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட, நீங்கள் இருவரும் பரஸ்பரம் மற்றவரின் நல்வாழ்வுக்கான தேடுதலில் இணைந்தீர்கள். நாம் இதைப் புரிந்துகொள்வோம்.

காதல் என்று இப்போது வழக்கத்தில் இருப்பதெல்லாம் பொதுவாகவே பரஸ்பர இலாப திட்டமாகத்தான் இருக்கிறது. உங்களுக்கென்று சில தேவைகள் உள்ளன, மற்றொரு நபருக்கும் சில தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இருவரும் இணைகின்றீர்கள். அந்தத் தேவைகள் உடலியல், உளவியல், உணர்ச்சி, சமூகம் அல்லது பொருளாதாரம் என்று பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடும். உங்களது ஏதோ ஒரு தேவை சரிவர நிறைவேறாமல் போகும் அந்தக் கணமே, அது முடிந்துவிடுகிறது.

அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உறவு நிலையில் அங்கே வேறெதுவும் இருப்பதில்லை. இன்னொரு நபரிடமிருந்து நீங்கள் மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், மற்றொரு நபரும் உங்களிடமிருந்து மிகச் சிறந்ததைப் பிழிந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார். இது ஒரு யுத்தம்தானே தவிர, காதல் உறவு அல்ல.

காதல் என்பது உங்களைப் பற்றியது

நீங்கள் எதனைக் காதல் என்று அழைக்கிறீர்களோ, அது யாரோ ஒருவரைப் பற்றிய விஷயம் அல்ல, அது உங்களைப் பற்றியது, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. உங்கள் உடல் இனிமையாக இருந்தால், இதை நாம் ஆரோக்கியம் மற்றும் இன்பம் என்று அழைக்கிறோம். உங்கள் மனம் இனிமையாக இருந்தால், இதை நாம் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் என்கிறோம். உங்களுடைய உணர்ச்சிகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் அன்பு அல்லது நேசம் என்று அழைக்கிறோம். உங்கள் சக்தி நிலைகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் பரவசம் என்று அழைக்கிறோம்.

இவைகள் உங்களுக்குள் நீங்கள் எப்படி இருப்பது என்பதற்கான சில வழிகள். இதற்கு வேறு எவருடனும் எதுவும் செய்வதற்கில்லை, ஆனால் நீங்கள் இதை யாரோ ஒருவருடன் தொடர்புபடுத்துகிறீர்கள். யாரோ ஒருவர் உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமைப்படுத்த வேண்டும் என்று இருந்தால், நீண்ட காலத்திற்கு இது நிகழப்போவதில்லை. எந்த மனிதரும் அதை என்றென்றும் ஒரே நிலையில் தொடர்ந்து வைத்திருக்கமுடியாது. ஒருவேளை அவர்கள் உங்களைச் சந்தித்த புதிதில், மூன்று நாட்களுக்கு, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பதற்கு எல்லாவற்றையும் செய்வார்கள், ஆனால் அதையே ஒருவராலும் நீடித்திருக்கச் செய்யமுடியாது. அது எந்த மனிதருக்கும் சாத்தியமே இல்லை.

ஆகவே, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது உணர்ச்சிகள் இனிமையின் வழியில் இருந்தால், நீங்கள் உங்கள் இயல்பிலேயே அன்பாக இருப்பதுடன், வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், எல்லாம் சரியாக இருக்கிறது. அது இல்லையென்றால், ஒவ்வொரு சிறு வித்தியாசமும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உங்களுக்குள் ஒருவிதமான இனிமை இருக்கும்போதுதான், மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமான வட்டத்தில் இருக்கமுடியும்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024 CSK Vs SRH: மார்க்ரம் அதிரடி… சென்னை அணியை வீழ்த்திய ஹைதராபாத்

சாய் பல்லவிக்கு ‘ராவணனாக’ மாறிய கேஜிஎஃப் ஹீரோ!

ஹெல்த் டிப்ஸ்: வெயிலால் சிவக்கும் கண்கள்… தடுப்பது எப்படி?

ராகுல் காந்தி ரூ.8 கோடிக்கு எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார்?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *