சென்னை வந்த கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12841 ) இன்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டது.
மாலை 6.18 மணிக்கு ஒடிசா மாநிலம் பாலஷோர் மாவட்டம் பகாநாகபசார் பகுதி அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயில் மீது மோதியதில் கோரமண்டல் எஸ்பிரஸ் தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தில் ஏறத்தாழ 200 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதில் பலர் தடம் புரண்ட ரயிலுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த பகுதி காட்டுப்பகுதி ஆகும்.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ்கள், ஒடிசா பேரிடர் விரைவுப் படை விரைந்திருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை 132 பேர் படுகாயத்துடன் பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.
ரயிலுக்கு அடியில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்தசூழலில் ஹவுரா, காரக்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வே கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹவுரா- 033–26382217, காரக்பூர்- 8972073925, 9332392339, சென்னை-044-25330952, 044-25330953 & 044-25354771, பாலசோர்- 8249591559, ஷாலிமார் – 9903370746
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீட்பு பணிகள் குறித்து ஒடிசா முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.
தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என ஒடிசா முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார். அதுபோன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாளை காலை விமானம் மூலம் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரையவுள்ளனர். இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகள் கடும் சிரமத்திற்கு இடையே நடைபெற்று வருவதாக பாலசோர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரியா
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது!
கொலை: இரண்டே நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த போலீஸ்!