புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், கொடுத்து கொடுத்து சிவந்த கை, கொடை வள்ளல், வாத்தியார் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 24).
இந்த நாளில் அவர் குறித்த நினைவுகளையும், மறைந்து 36 ஆண்டுகள் கழித்தும் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் தீராத பாசத்தினையும் பற்றி நாம் இங்கே பார்க்கலாம்.
சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் உச்சம் தொட்டவர் எம்.ஜி.ஆர். இலங்கையின் கண்டி மாவட்டத்திலுள்ள நாவப்பிட்டி என்னும் கிராமத்தில் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி, கோபாலன் மேனன் – மருதூர் சத்தியபாமா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் எம்.ஜி.ஆர்.
உதவும் குணம்
ஆரம்ப நாட்களில் மருதூர் கோபாலன் மகன் ராமச்சந்திரன் என்னும் முழுப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். நாளடைவில் அது சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்று மாறியது. திரை வாழ்வில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவக்கூடிய குணம் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர்.
கண்ணீர் வெள்ளம்
தமிழக மக்களின் அபிமானத் தலைவராக திகழ்ந்த எம்.ஜி.ஆர் சிறுநீரக செயலிழப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். தமிழ்நாடு முழுவதும் அவர் நலம் பெற வேண்டும் என மக்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஆனால் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் இறப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையுமே கண்ணீரில் மூழ்கடித்தது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழக மக்கள் கலந்து கொண்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மெரினா கடற்கரை
அவரது ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வருடாவருடம் இந்த நாளை (டிசம்பர் 24) துக்க தினமாக அனுசரிக்கின்றனர். அதேபோல இந்த தினத்தில் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திரளாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.
அவருடைய 36-வது நினைவு தினமான இன்றும் அதுபோல காலை முதலே ஏராளமான மக்கள் அவரது நினைவிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களில் சிலரிடம் எம்.ஜி.ஆர் குறித்த அவர்களுடைய நினைவுகளை நம்முடைய மின்னம்பலம் சேனலுக்காக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம்.
உண்ணாவிரதம்
முதலில் ஆனந்த் குமார் என்பவர் நம்மிடம் பேசினார். அவரிடம் எம்.ஜி.ஆர் என்னும் பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது? என்று கேட்டோம். பதிலுக்கு அவர், ” தெய்வம்”, “எங்கள் வீட்டுப்பிள்ளை”, என்று கூறினார். மேலும் எம்.ஜி.ஆரின் கொள்கைகள் தத்துவங்கள் மிகவும் அற்புதமானவை.
அவருடைய படம் மக்களுக்கு ஒரு பாடம் . இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தமிழகத்திற்கு ரேஷன் அரிசி குறைந்த அளவில் விநியோகம் செய்வதற்கான உத்தரவை கொடுத்தார்.
மறுநாள் காலை எம்.ஜி.ஆர் உழைப்பாளர் சிலை அருகே வரும்போது தன்னுடைய காரை நிறுத்திவிட்டு சிலை முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். எங்களுக்கு தேவையானதை அரசு கட்டாயம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டணி கட்சியாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போதும் கூட தன்னுடைய எதிர்ப்பை வலுவாக தெரிவித்தவர் அவர். அதேபோல 1983-ம் ஆண்டு மிகப்பெரிய மழை, வெள்ளம் வந்தது. அந்த வெள்ளத்தின் போது கன்னிமாராவில் அவருக்கு மிகப்பெரிய ரூம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் அவர் அங்கு தங்காமல் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மக்களுக்காக வெள்ளத்தில் இறங்கி வேலை செய்தார். அதோடு வெள்ளம் முடிந்த அடுத்த நாளே ஒரு மூட்டை அரிசி மற்றும் பாமாயில் மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் அந்த பொருட்களை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம் ,” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
படிப்பு செலவு
அதேபோல ஷகீலா சரவணன் நம்மிடம் பேசும்போது, ”எம்.ஜி.ஆர் என்பவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன். அவர்தான் எங்களை படிக்க வைத்தார். என் அம்மா கட்சியின் கொள்கை பரப்பு பேச்சாளராக இருந்தார். நான் சிறுமியாக இருந்த போது ஒரு திருமண நிகழ்வில் என்னைப் பார்த்து விட்டு பள்ளிக்கூடம் போகவில்லையா? என்று எம்.ஜி.ஆர் கேட்டார்.
அதற்கு நான் அம்மா அனுப்பவில்லை என்று கூறினேன். உடனே என் அம்மாவை கூப்பிட்டு விசாரித்தார். பள்ளிக்கூடத்திற்கு கட்ட பணம் இல்லாததால் அனுப்பவில்லை என்று கூறியவுடன் எனக்கு மட்டுமல்லாது என்னுடைய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் படிப்பு செலவில் இருந்து அனைத்து செலவையும் பார்த்துப் பார்த்து செய்தவர் எம்.ஜி.ஆர்.
இன்று எங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு அவர் தான் காரணம். இந்த உயிர் உடம்பில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் புரட்சித்தலைவர் தான் என எந்த இடத்திலும் சொல்லுவேன்,” என கண்கள் கலங்கிட பேசினார்.
டிரைவர்
அதேபோல மோகன் என்பவர் பேசுகையில், ”16 வயதில் எம்.ஜி.ஆரை சந்திக்க வேண்டும் என்பதற்காக நேரில் சென்றேன். ‘ஒரு தாய் மக்கள்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் அவரை பார்த்தவுடன் என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். பத்தாம் வகுப்பு படிக்கிறேன் என்றேன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? என்றார்.
எம்.ஜி.ஆர் பள்ளியில் தான் படிக்கிறேன் என்று கூறியவுடன் எனது தோளில் தட்டிக் கொடுத்து நன்றாக படிக்க வேண்டும் என்று கூறிவிட்டு செல்லமாக மூக்கை கிள்ளி விட்டு சென்றார். அவர் மீது இருந்த பற்றால் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்பதற்காகவே ‘நம் நாடு’ படத்தை எடுத்த நாகிரெட்டி அவர்களிடம் டிரைவராக வேலைக்கு சேர்ந்து விட்டேன்.
அதன் பிறகு அடிக்கடி எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லா திரைப்பட நிகழ்ச்சிக்கும் அவர் வருவார். கடைசி வரை இருந்து தொழிலாளர்கள் அனைவரையும் வழியனுப்பி வைத்து விட்டுத்தான் செல்வார். அவரை பார்ப்பதற்காகவே அந்த வேலையில் சேர்ந்த நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான்,” என மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மக்கள் வெள்ளம்
கிருஷ்ணா என்பவர் நம்மிடம் பேசும்போது, ”நான் 1972-ம் ஆண்டில் அவருடைய படமொன்றின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. 7-வது பிளாட்பார்மில் அந்த ஷூட்டிங் நடந்த போது அவரை ரயில் நிலையத்தில் சந்தித்தேன்.
அவரை சந்தித்து கைகுலுக்கி விட்டு பின்னால் திரும்பும்போது ஐந்து நிமிடத்திற்குள் எங்கிருந்துதான் வந்தார்கள் என தெரியவில்லை மக்கள் வெள்ளமாய் திரண்டு அங்கு வந்து கொண்டிருந்தார்கள். நான் அத்தனை மக்களை ஒரே இடத்தில் பார்த்ததும் பிரமித்து விட்டேன்.
இன்றும் இந்த மெரினாவிற்கு அதே அளவு மக்கள் வெள்ளம் போல திரண்டு வருகிறார்கள் என்றால் அது அவர் மீது இருக்கும் பற்றினாலும், அவர் செய்துவிட்ட சென்ற கொடைகளினாலும் மட்டுமே,” என உணர்ச்சி ததும்ப கூறினார்.
இப்படி அவருடைய கொடையைப் பற்றியும் நல்ல குணத்தை பற்றியும் ஏராளமான மக்கள் நம்மிடம் உணர்ச்சி பொங்க அவர்கள் எம்.ஜி.ஆர் மீதான தங்கள் அன்பினையும், பாசத்தினையும் பகிர்ந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர் குறித்த தொண்டர்களின் நினைவலைகளை முழுமையாக பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேர்காணல் & தொகுப்பு: சண்முகப்பிரியா
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8