நா.மணி Can we get justice to include tribals in the current parliament itself?
சங்கிலி முருகன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து விட்டு, கல்லூரி சேர்க்கைக்கு எங்களிடம் வந்தார். அவருக்கு சாதி சான்றிதழ் ஏதும் இல்லை. சங்கிலி முருகனிடம் கேட்டால், நாங்க “பூம்பூம் மாட்டுக்காரங்க”என்கிறார்.
தமிழ் நாடு வருவாய் துறையோ “அப்படி ஒரு சாதி வரையறையே இல்லை” என்கிறது. இந்த நிலையில் தான், சங்கிலி முருகனுக்கு கல்லூரியில் இடம் கேட்டு வி.பி. குணசேகரன் எங்களை வந்து அணுகினார்.
சாதி சான்றிதழ் இல்லாமல் இட ஒதுக்கீட்டு பிரிவில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை. எப்படியோ பொதுப் பிரிவில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்தோம். சான்றிதழ் இல்லை என்று தெரிந்து கொண்ட முதல்வர் அவசியம் சான்றிதழ் வேண்டும் என்றார்.
“ஒரு வாரத்தில் சான்றிதழ் கிடைத்து விடும். சான்றிதழ் பெற்றுத் தர நான் உத்திரவாதம் அளிக்கிறேன் சீட்டு கொடுங்கள்” என்று அவரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டேன். ஒருவழியாக சங்கிலி முருகனுக்கு இடம் கிடைத்தது. இடம் கிடைத்த சில நாட்களில் முதல்வர் என்னை அழைத்தார். சங்கிலிமுருகன் சாதிச் சான்றிதழ் எங்கே என்றார்.
அவர் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் ஒரு பழங்குடி பிரிவை சேர்ந்தவர் என்றேன். பின்னர் ஏன் உத்திரவாதம் அளித்தீர்கள் என்று கேட்டார். அந்த மாணவனுக்கு இடம் பெற்றுத் தரவே அவ்வாறு குறிப்பிட்டேன் என்றேன். இது தவறு இல்லையா? என்றார். ஆம் தவறு தான். மன்னியுங்கள் என்றேன்.
இப்போது அவரது சாதி சான்றிதழுக்கு என்ன செய்வது என்றார். சங்கிலி முருகனை பொதுப் பிரிவில் தான் சேர்த்து உள்ளோம். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கே சாதி சான்றிதழ் அவசியம். இவருக்கு தேவையில்லை என்றேன். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு போலி உத்தரவாதம் அளித்தீர்கள் என்றார். நான் சிரித்தேன்.
இதனை ஒட்டி முதல்வரோடு மன வருத்தம் கூட ஏற்பட்டது. இப்படி நாங்கள் போராடி கல்லூரியில் சேர்த்து விட்ட சங்கிலி முருகனுக்கு நிரந்தரமான குடியிருப்பு இல்லை. தொடர்ந்து இடமாற்றம். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு கிடைக்கும் வேலை, வருமானம், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை பொருத்து அவரது கல்லூரி வருகை இருந்தது.
ஒருமுறை நீண்ட விடுப்பு எடுக்க வேண்டிய நிர்பந்தம். அந்த விடுப்புக்கு பிறகு அவர் கல்லூரியில் தொடர்ந்து படிக்க விரும்பினார். ஆனால் பல்கலைக்கழக விதிகள் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை. கனத்த இதயத்தோடு அவர் போய் வருகிறேன் என்றார்.
இவ்வளவு உதவி செய்தும் ஒரு சமூகப் பிரிவில் இருந்து முதல் முதலில் கல்லூரிக்கு படிக்க வந்த ஒருவர் அந்தப் படிப்பை முழுமையாக படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் விடை கொடுத்தோம். பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் போது ஒரு முறை சந்தித்தேன் . ஓடி வந்து பேசினார்.
பிறகு ஒரு முறை, ” சார் இவன் நல்லா படிப்பான் சார். என்ன மாதிரி கஷ்டம் அவனுக்கு இல்லை. எப்படியாவது அவனை கல்லூரியில் சேர்த்து விடுங்க” என்று ஒரு முறை கல்லூரிக்கு வந்தார். சில வருடங்களுக்கு பின்னர் கல்லூரிக்கு சங்கிலி முருகன் தேடிவந்தார்.
“என்ன முருகா! கல்யாணமா?” என்றேன். “சார் மன்னிச்சிடுங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கொழந்தைங்க கூட இருக்காங்க. வேலை கிடைச்சிருக்கு. உங்க கிட்ட சொல்லி விட்டு போகலாம் என்று வந்தேன்” என்றேன். “எப்படி முருகா? ஆச்சரியமாக இருக்கு. ஆனா, ரொம்ப சந்தோஷம். எப்படி வேல கெடைச்சுது?” என்றேன்.
“சார் உங்களுக்கு தெரியாதா? எங்களுக்கு எஸ் டி சர்டிபிகேட் கெடுச்சிருச்சு” என்றார் மகிழ்ச்சியோடு. “பூம்பூம் மாட்டுக்காரங்க அப்படின்னு சான்றிதழ் கெடுச்சிருக்கா முருகா”. “இல்லைங்க சார். ஆதியன்னு போட்டு கொடுத்திருக்காங்க” என்றார்.
இப்போது வனத்துறையில் வனக் காவலராக பணியாற்றி வருகிறார் சங்கிலி முருகன். ஆனால் இத்தனை ஆண்டுகள் அவர்கள் பழங்குடியினர் சான்றிதழ் இன்றி பட்ட கஷ்டங்கள்! இழந்த இழப்புகள்! பறிபோன கல்வி வாய்ப்புகள்! கிடைக்காமல் போன வேலைகள் எத்தனை? எத்தனை? எத்தனை?
நரிக்குறவருக்கு கிடைத்த பழங்குடிகள் சான்றிதழ்
இதே போன்று தான் பாஸ்கரன். நரிக்குறவர் சமூகத்தை சார்ந்தவர். ஈரோடு மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் ஏ. என். தியானேஸ்வரன். அவர் தலையீட்டின் பேரில் ஒரு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.
பழங்குடியினர் சான்றும் இல்லை. பொதுப் பரிவினரோடு போட்டி போடவும் முடியவில்லை. அவரும் நரிக்குறவர் செய்யும் தொழிலுக்கு வந்து விட்டார். எல்லோருக்கும் அவர் ஒரு மோசமான முன் உதாரணமாக காட்டப்பட்டார். மன விரக்தி. குடி. ஊரில் தகராறு. நாங்கள் அங்கு நாட்டு நலப்பணி முகாம் நடத்த ஓர் இரவு சென்றிருந்தோம்.
அன்று எங்கள் முகாம் நடக்க விடாமல் கொஞ்சம் ரகளையில் ஈடுபட்டார். நான் அருகில் சென்று, “பாஸ்கரன் இங்க வாங்க” என்று பெயர் சொல்லி அழைத்ததும், அப்படியே அமைதியாகிவிட்டார். “என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றார். “நானும் நீங்களும் ஒன்றாக கல்லூரியில் படித்தோம். ஞாபகம் இல்லையா?” என்றேன்.
அவருக்கு ஆச்சரியம். உண்மையில் அவர் படித்த கல்லூரியில் நான் படிக்கவில்லை. அருகாமையில் உள்ள கல்லூரியில் அதே காலகட்டத்தில் நானும் படித்துக் கொண்டிருந்தேன். அவருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் கல்லூரி சேர்க்கை கிடைத்ததால், அப்போது அது பெரிய செய்தியாக செய்தித் தாள்களில் வந்தது.
ஈரோட்டில் வாழ்ந்த நரிக்குறவர் மக்கள், அப்போது சாலை ஓரமாக நீண்ட காலம் குடியிடிருந்து வந்தனர். தியானேஸ்வரனுக்கு அடுத்து வந்த அடுத்த மாவட்ட ஆட்சியர் அருண் இராமநாதன். இவரது காலத்தில் தான் முதல்முதலாக நிரந்தர குடி மனை பட்டா எங்கள் கல்லூரிக்கு அருகில் கொடுத்து, வாழ வழி செய்தார். அது ஒரு ஓடைப் பள்ளத்தை ஒட்டிய புறம்போக்கு நிலம். பட்டா கொடுத்த இடத்தில் குடியிருந்து வந்தார்கள்.
ஆனால் தண்ணீர் வசதி அப்போது செய்து தரப்படவில்லை. ஓடை தண்ணீரையே எடுத்து பயன்படுத்தி வந்தனர். கோடைகாலத்தில் தண்ணீர் வற்ற வற்ற பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர். பின்னர் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் சிறிய குழி தோண்டி அதில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அதுவும் வற்றிப் போய் தண்ணீருக்கு திண்டாடி வந்தனர்.
அப்போது கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தேன். சில மாணவர்களை அழைத்துக் கொண்டு கடப்பாரை மண்வெட்டி ஆகியவற்றை சேகரித்து கொண்டு நேரடியாக களத்திற்கு சென்றோம். ஒருநாள் முழுவதும் எங்களுக்கு முடிந்த வரை அதனை ஆழப் படுத்தினோம். பெரிய அளவிற்கு அதில் தண்ணீர் வரவில்லை என்றாலும் முன்பு இருந்ததற்கு மோசம் இல்லை.
அவரை அப்போது சந்தித்து உரையாடி இருக்கிறோம். அவற்றையெல்லாம் நினைவூட்டினேன். எங்கள் உரையாடல் முடியும் போது பாஸ்கரன் கதறி அழத் தொடங்கினார். தனக்கு வேலை கிடைக்கவில்லை என்பதைக் காட்டிலும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்பதைக் காட்டி ஊருக்குள் உயர் கல்வி படிக்க குழந்தைகளை அனுப்ப மறுப்பது மிகுந்த வேதனை தருகிறது என அழுதார்.
இவையெல்லாம் எண்பதுகளின் இறுதியில். இன்று நாற்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடிகள் சான்றிதழ் கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டு பின்னடைவை அதன் பாதிப்புகளை எப்படி வர்ணிப்பது?
மலையாளி பழங்குடிகள் தொடரும் அவலம்:
இப்போது இன்னும் தீர்க்கப்படாத ஓர் சோகக் கதைக்கு வருவோம். மல்லியம் தூர்க்கம், மூலக் கடம்பூர், நடூர், ஏரியூர், கல்கடம்பூர், பூதிகாடு, கடைவீதி கடம்பூர், தொண்டூர், செங்காடு, ஜீவாநகர், கிலூர், பவளக்குட்டை, பரபட்டா, அத்தியூர், அட்டனை, கேர்மாளம், அத்தியூர் புதூர், கரளியம், வடக்கலா தொட்டி, எக்கத்தூர், கப்பேகான் தொட்டி, கெம்ப நாக்கினூர், திப்பா நாக்கினூர், கிட்டாம் பாளையம், மோடி கடவு, அனைக்காடு, சின்ன சாலட்டி, பெரிய சாலட்டி, திண்ணையூர், கிளத்தூர், இருட்டி பாளையம், கணபதி பாளையம் மற்றும் மொசல் மடுவு. இவையெல்லாம் எந்த ஊர்களின் பெயர்கள்?.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கடம்பூர் பகுதியில் உள்ள மலை மலையாளி மக்கள் வாழும் கிராமங்கள். இந்த 33 கிராமங்களில் 32000 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களைப் போன்று மலையாளி மக்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, வட ஆற்காடு, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு பழங்குடிகள் சான்றிதழ் கிடைத்து பல பத்தாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மேற்படி கிராமங்களில் வாழும் மலையாளி மக்களுக்கு இன்றுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை.
சமநீதி இன்மை
இதே மலைப் பகுதியில் வாழும் ஊராளி, சோளகர், இருளர் போன்ற வாழ்நிலை தான் மலையாளிகள் வாழ்நிலை. மலையாளிகள் பல கிராமங்களில் இதர பழங்குடிகளோடு சேர்ந்து தான் வாழ்கின்றனர்.
பழங்குடிகள் என்ற சான்றிதழோடு வாழும் பழங்குடியினருக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஒரேமாதிரியான வீடுகள். ஒரேமாதிரியான சமூக பொருளாதார வாழ்நிலை. நாங்கள் சோளகர், நாங்கள் ஊராளி நாங்கள் மலையாளிகள் என்று அவர்களாக சொன்னால் தான் உண்டு. நாம் இவர்களை பிரித்தரிய இயலாது. இருந்தபோதிலும் அவர்களுக்கு இன்று
வரை பழங்குடிகள் சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்படி கிடைக்காமையால் இதர பழங்குடிகள் போல் ஓரிருவர் கூட ஆங்காங்கே படித்து முன்னேறுவது போல் படித்து முன்னேற்றம் அடைய முடியவில்லை. இவர்களது பிள்ளைகள் சங்கிலி முருகன், பாஸ்கரன் போல் வதை பட்டே வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைகளில் வாழும் இம்மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் படி கிடைக்க வேண்டிய சலுகைகள் உரிமைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
இதர மாவட்டங்களில் பழங்குடிகள் என்ற சான்றிதழோடு வாழும் மலையாளிகளோடு திருமண உறவு இருக்கிறது. பழக்கவழக்கங்கள் திருமண சடங்குகள் பண்பாடு எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது. ஒருசில வேறுபாடுகள் இருக்கலாம். அது எல்லாம் சாதிகளிலும் இடத்திற்கு இடம் மாறுபடுவது தான்.
இவற்றையெல்லாம் அரசால் நியமனம் செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறையும் உதகையில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையமும் உறுதி செய்தது. பழங்குடி மக்கள் என்று சான்றிதழ் வழங்கலாம் என்கிறது. அதுவும் கூட பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. அப்போதும் கூட மலையாளி மக்களுக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் இதற்காக கடந்த பல பத்தாண்டுகளாக நடத்திய போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இந்தப் போராட்டங்களுக்கு ஒரு வழியாக பலன் கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்ட வருவாய்த் துறை தமிழ் நாடு அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் இதனைப் புரிந்து கொண்டது. ஒருவழியாக இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு சட்ட முன்வரைவை கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்ட முன்வரைவில் மலையாளி என்று குறிப்பதற்கு பதிலாக “மலையாளி கவுண்டர்” என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்பட்டு விட்டது. ஈரோடு மாவட்டத்தில் கவுண்டர் என்று குறிப்பிடப்படும் வேறு பல சமூகப் பிரிவினர் உள்ளனர். இது பெரும் குழப்பத்திற்கு வித்திட்டுவிடும். தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு. மேலும் மலையாளி என்ற பழங்குடி பிரிவை தவறான அடைமொழி அல்லது அடையாளத்தோடு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது என்று கருதி அந்த சட்ட முன்வரைவிற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த சட்ட முன்வரைவு கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக வேலைகள் நடந்து வருகிறது.
தற்போதைய நிலை
இந்தப் போராட்டத்திலும் தமிழ் நாடு பழங்குடி மக்கள் சங்கமும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் அவர்களும் பெரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தமிழ் நாடு அரசு உரிய முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. பழங்குடிகள் பட்டியல் வரிசை எண் 25ல் சேர்க்க பரிந்துரை செய்து அனுப்பி உள்ளது.
மத்திய அரசு, ஒரு சாதியை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க செய்ய வேண்டிய நடைமுறைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ள வேண்டும். அதனை தற்போதைய பாராளுமன்ற ஆயுள் முடிவதற்குள் செய்ய இயலாது என்கிறார்கள். மத்திய அரசு மனது வைத்தால் இந்த பாராளுமன்றம் நிறைவு எய்துவதற்குள் மலையாளி மக்கள் வரும் கல்வி ஆண்டில் பலன்களை அனுபவிக்க முடியும். இப்போது முடியாது என்பதை வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்.
அடுத்த பாராளுமன்றம் அமைந்தவுடன் இந்தப் பணிகளை கையில் எடுப்பார்களா? என்ற கேள்வி இயல்பாகவே எழும். அப்போது இன்னும் கொஞ்சம் காலதாமதம் என்றாலும் சில வருடங்கள் சென்று விடும். நாடு சுதந்திரம் அடைந்ததும் காத்திருக்கும் இம்மக்களின் இயல்பான நியாயமான கோரிக்கை இந்தப் பாராளுமன்றம் நிறைவை எய்துவதற்குள் மலையாளி பழங்குடிகள் தங்களுக்கு ஓர் சாதகமான பதிலை மத்திய அரசிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். Can we get justice to include tribals in the current parliament itself?
கட்டுரையாளர் குறிப்பு
நா.மணி பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
என்று தணியும் பழங்குடி விவசாயிகள் அவலம்?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.