திருச்சி மாநாடு போஸ்டர்களில் சசிகலா? ஓபிஎஸ்  போட்ட உத்தரவு!

அரசியல்

வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அதிமுகவின் முப்பெரும் விழா மாநாட்டை திருச்சியில் நடத்தத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இன்னமும் தேர்தல் ஆணையப் பதிவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம். கடந்த  ஏப்ரல் 10 ஆம் தேதி இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு முழுதும் குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முப்பெரும் விழா மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டச் செயலாளர் ஒவ்வொருவரிடமும் எத்தனை வேன்களில் வருகிறீர்கள் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு  வருகிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம்  மாவட்டத்தில் போஸ்டர்கள் அடிப்பதற்காக நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினர் தர்மரை தொடர்புகொண்டு, ’நாம் ஒட்டும் போஸ்டர்களில் சசிகலா படம் போடலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் சிடம் தொடர்புகொண்டு கேட்ட தர்மர் எம்பி மீண்டும் தன்னிடம் கேட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, ‘இப்போதைக்கு அவங்க படமெல்லாம் போட வேண்டாம்.

ஒருங்கிணைப்பாளர் படத்தை மட்டும் நடுநாயகமாக போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படியே ஓபிஎஸ் சை மையமாக வைத்து போஸ்டர்கள் அடித்து ராமநாதபுரம் பகுதியில் நேற்று முதல் ஒட்டி வருகிறார்கள்.

முப்பெரும் விழாவுக்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டம்  ஏப்ரல் 10 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய  ஓ.பன்னீர் செல்வம், அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள், ‘நீங்கள் நடத்தும் மாநாட்டில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொள்வார்களா?’ என்று கேட்டார்கள். ‘அனைவருக்கும் அழைப்பு அனுப்புவோம்’ என்று பதிலளித்தார் பன்னீர்.

ஆனால் வெளிப்படையாக சசிகலா, தினகரன் ஆகியோரைக் குறிப்பிட்டு ஏதும் பதில் சொல்லவில்லை.  இந்த நிலையில்தான்  திருச்சி மாநாட்டுக்காக ஒட்டப்படும் போஸ்டர்களில் சசிகலா படம் இப்போதைக்கு தவிர்க்கப்பட்டிருக்கிறது. 

நேற்று (ஏப்ரல் 12) மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில்  ஓபிஎஸ்-சசிகலா-டிடிவி: சித்திரைக் கூட்டணிக்கு வைத்தி போடும் ஸ்கெட்ச்  என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  

அதில்,  ’சசிகலாவுக்கும்  பன்னீருக்கும், டிடிவி தினகரனுக்கும்  இடையே நிலவும் இடைவெளியை குறைக்க  முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். பன்னீர், சசிகலா, தினகரன் ஆகிய மூவருக்கும் அரசியல் பிடிமானம் இல்லாத இந்த நேரத்தில் இந்த மூன்று பேரும் திருச்சி மாநாட்டில் ஒற்றுமையாக மேடையேறுவது மூவருக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கூறியிருக்கிறார்.

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே இன்னும் சில பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்…. இந்த மூவரும் தங்களுக்கு இடையே இருக்கும் தடுப்பணைகளை உடைத்துவிட்டு திருச்சியில் சந்திக்க வேண்டும் என்பதில்  தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் வைத்திலிங்கம்” என்று  குறிப்பிட்டிருந்தோம்.

இந்தப் பின்னணியில்தான் போஸ்டர்களில் கூட இன்னமும் சசிகலா இடம்பெறாத நிலையில் திருச்சி முப்பெரும் விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. வைத்திலிங்கத்தின் சமரச முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்கள் அவரது வட்டாரத்தினர்.

வேந்தன்

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

ஜூனியர் என்.டி.ஆருடன் வெற்றிமாறன் பேச்சுவார்த்தை!

Sasikala in Trichy conference
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *