வைரமுத்து – எஸ்.பி.பி கூட்டணியின் ‘முத்து பாடல்’ ரீமிக்ஸ்!

entertainment

வைரமுத்துவின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘இந்திய நாடே முதலாளி’ எனத்தொடங்கும் கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

உலக நாடுகளில் மட்டுமல்லாமல் நமது இந்தியாவில்கூட கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14) முடிவுறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனாவின் தீவிரம் காரணமாக அது இம்மாத இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நமது தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்வடைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பீதியில் ஆழ்ந்திருந்தாலும், வைரஸின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளாத சிலர் அலட்சியமாக நடந்து வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்திலும் பல்வேறு பிரபலங்களும் வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘சங்கீத சேது’ என்னும் ஆன்லைன் இசைக் கச்சேரி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்றது. இந்தியப் பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், உதித் நாராயணன், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, பங்கஜ் உதாஸ், அல்கா யாக்னிக், ஸோனு நிகாம், கைலாஷ் கேர், ஷான் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தங்கள் வீடுகளில் இருந்தபடியே அவர்கள் பாடல்களைப் பாடினர். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் ஒளிபரப்பப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலின் மெட்டில் ‘இந்திய நாடே முதலாளி’ என்னும் கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடினார். இந்தப் பாடலுக்கான வரிகளையும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துவே எழுதியுள்ளார்.

*இந்திய நாடே முதலாளி,*

*இந்தியர் எல்லாம் தொழிலாளி*

*விதியை நினைப்பவன் ஏமாளி,*

*அதை வென்று முடிப்பவன் அறிவாளி*

*வாழ விடாத வைரஸ் இருக்கு*

*வாழ வைக்க ஞானம் இருக்கு*

*கொள்ளை நோயா தொல்லை எதற்கு*

*விலகி இருந்தால் வெற்றி நமக்கு*

*விண்ணில் காணும் மீன்களைப் போலே*

*விலகி வாழ்வோம் பூமியின் மேலே*

*அன்னை கருவில் பிள்ளைகள் போலே,*

*அடங்கி வாழ்வோம் அரசின் பின்னாலே*

*மறைந்து தாக்குது கிருமியடா*

*அதை மறைந்து கொல்லுதல் தருமமடா*

என்பதாக அமைந்துள்ள பாடல் வரிகள், கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குகிறது.

*நாளை மீள்வோம், நன்மை காண்போம்*

*நலமே விளையும் நம்புகின்றோம்*

*நாடு காக்கும் நல்லவர்க்கெல்லாம்*

*நன்றி நன்றி சொல்கின்றோம்*

*கொரோனா தொடர்ந்து வாழாது*

*இந்திய நாடு வீழாது*

என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கொரோனா அச்சத்தால் துவண்டு போயிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பாடல் கவிஞர் வைரமுத்துவின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *