தெருக்கூத்துக் கலையையே தனது சுவாசமாகக் கொண்ட இராமலிங்க வாத்தியார், இன்று அதிகாலை காலமானார். இக்கலைஞனின் மறைவு தெருக்கூத்துக் கலையுலகிற்கு ஒரு பேரிழப்பு.
நம் தமிழ் நிலத்தின் தொன்மைக் கலையான தெருக்கூத்திற்கு நீண்ட நெடிய மரபும் வரலாறும் உண்டு. எளியோருக்கான கலையாக போற்றப்படும் இந்த தெருக்கூத்து மரபில் வந்த நாராயண வாத்தியார் மகனான இராமலிங்கம் வாத்தியார்(62) இன்று(மே 26) அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால், இருங்கூர் – தட்டச்சேரி என்னும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.
1940 முதல் கூத்துக் குழு அமைத்துத் தெருக்கூத்துக் கலையில் தனக்கு நிகர் தானே என்று மதிக்கப்பட்டிருந்த நாராயணன் வாத்தியார், தனது மாமாவிடம் இந்தக் கலையை மாணவனாக இருந்து கற்றார். அதன் பின்னர் தொடர்ச்சியாக தெருக்கூத்து, நாடகம் உள்ளிட்டவற்றை பார்த்துப் பயின்று வந்த இவர், தான் கூத்து பார்க்கச்செல்லும் போதெல்லாம் சைக்கிளில் தன் மகனையும்(இராமலிங்கம் வாத்தியார்) அழைத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர். சைக்கிளை மிதித்தபடி கிராமம் கிராமமாக கூத்து பார்க்கச் செல்லும் தந்தை, சைக்கிள் பாரில் மகனை அமர்த்தி கூத்து குறித்த அடிப்படை பாடங்களை கற்றுக்கொடுத்தபடியே சைக்கிளை அழுத்திச் செல்வார். கூத்து முடிந்து திரும்பி வரும் போதும், கூத்துப்பாடல்களை பாடிக்காட்டி பசுமரத்தாணி போல கலையை மகனுக்கு பயிற்றுவித்திருக்கிறார் இந்த ஆசான். அப்படி தந்தை மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தும் கடமையை செவ்வனச் செய்து வந்தவர் இராமலிங்கம் வாத்தியார்.
இவரது தந்தை நாராயணன் வாத்தியார் மிகக்காத்திரமான கலைஞராக அவரது காலத்தில் வலம் வந்துள்ளார். இரணியனாக அவர் மேடையில் தோன்றினாலே இரணியகசிபுவை கண்முன்கொண்டு வந்துவிடும் நடிப்பாற்றல் கொண்டவர் இவர். அவரது நடிப்பாற்றலுக்கான உதாரணமாக தெருக்கூத்து உலகில் இப்போதும் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவர். ஒரு முறை கிராமம் ஒன்றில் இரணிய விலாசக் கூத்தில், இரணியனாக மேடையில் தோன்றி ஆக்ரோஷமாக நடித்து கொண்டிருக்கிறார் நாராயணன் வாத்தியார். அப்போது நடிப்பின் உச்சத்தில் துடியேறிய இவரது உடலையும் குரலையும் கண்டு பார்வையாளர்களுள் அமர்ந்திருந்த ஒரு பெண்ணுக்கு கர்ப்பமே கலைந்துள்ளது எனக்கூறுவர். எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்தை கண்முன்னே தத்ரூபமாய் கொண்டுவருவதில் கூத்துக்கலைஞர்களுக்கு நிகர் அவர்கள் மட்டுமே.
தந்தையைப் போலவே மாபெரும் கலைஞனாக வலம் வந்தவர் இராமலிங்கம் வாத்தியார். கலவை குமாரசாமி வாத்தியாரின் இரணிய விலாசக் கூத்துப் பிரதியையும், கிருஷ்ணன் தூது கூத்துப் பிரதியையும் ஒரு கலைஞன் மேடையேற்றினால் அவனுக்கு அது மிகப்பெரும் தைரியத்தையும் ஆளுமையையும் கொடுக்கும் என தெருக்கூத்தில் கூறுவதுண்டு. சுருள் அமைப்பான இந்த கூத்துப் பனுவலை அரங்கேற்றுவதில் இராமலிங்கம் வாத்தியார் கைதேர்ந்தவர். கூத்தில் இவர் பாடும் ஒவ்வொரு ராகத்திற்கேற்றபடியும் மக்கள் தன்னையறியாமல் தலையசைத்தும், கைகளை தட்டியும் ரசிப்பதுமே இவருக்கு அகமகிழ்வென உடனிருப்பவர்கள் கூறுகிறார்கள். தன் தந்தை தெருக்கூத்துக் கலையால் எடுத்த பெயரை சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டதில் பெருமை இராமலிங்க வாத்தியாருக்கு உண்டு.
இவருக்கென தனிப்பட்ட தெருக்கூத்து பார்வையாளர்களும் உண்டு. “இராமலிங்க வாத்தியார் வராருன்னா எங்கயிருந்தும் கூத்து பாக்க வந்திருவாங்க” என்கிறார் முனைவர் ஏழுமலை. அத்துடன் இவர் தந்தை இறந்தபின்பும் கூட, மக்களிடம் பணம் பொகிடித்தல்(சன்மானம்) பெறும் போது ‘நாராயண வாத்தியார்’ எனக் கூறியே பாரம்பரியத்தை கைவிடாமல் மக்கள் தங்களால் முடிந்த சன்மானத்தை வழங்குவர் என்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு இருப்பதை விட இரணியனாக, துரியோதனனாக, கண்ணனாக வேசம் கட்டும் கூத்துக் கலைஞர்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பும், மரியாதையும் அளவிடமுடியாதது என்பது வரலாறு. எந்த ஊடகத்தின் பின்புலமும், விளம்பரமும் இல்லாமல் மக்களிடம் நேரடித்தொடர்பில் இருந்து அவர்தம் பாடுகளை தங்கள் கலையின் வழி வெளிக்கொண்டு வந்தவர்கள் இந்தக் கலைஞர்கள். மண்ணையும் வேரையும் பிரிக்க முடியாதபடியான இந்தப் பிணைப்பு நவீன பார்வைக்குள் அடங்காதது.
இராமலிங்க வாத்தியார் இன்று கூத்துக்கலையில் இருக்கும் பலருக்கு ஆசானாக விளங்கியவர். இவரது மகன் பிரபாகரனும் தந்தை வழியில் கூத்துக்கலைக்கு பெருமை சேர்த்து வருகிறார். குறிப்பாக துரியோதனன் வேஷத்தில் இவரது நடிப்பு பாராட்டுப்பட்டு வருகின்றது.
கலை இலக்கிய வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் முனைவர் மு. ஏழுமலை இவருக்கு இரங்கல் தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “இருங்கூர் நாராயணன் வாத்தியார் என்றால் அறியாத தெருக்கூத்துக் கலைஞர்களோ, தெருக்கூத்து ஆர்வலர்களோ இல்லை. நாங்கள் வாழும் காலத்தில் துச்சாதனன், துரியோதனன், கர்ணன், தபசுமரம் ஏறும் களத்தில் அருச்சுனன், இரணியன், குறிப்பாக கண்ணன் முதலான மகாபாரத கதாப்பாத்திரங்களை கண்முன் காட்டும் மகா கலைஞன் இருங்கூர் இராமலிங்கம் ஐயாதான். இத்தகைய மகா கலைஞன் இன்று மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இருங்கூர் இராமலிங்கம்தான் இரணியனாகவும், கர்ணனாகவும், கண்ணனாகவும் வேடமிட வேண்டும் என்று அன்பாக கட்டாயப்படுத்தும் எம் போன்ற கலை பித்தன்களின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டதே. எத்தனை இலட்சம் மக்களின் கனவு நாயகனாக விளங்கிய கலைஞன். பல இலட்சம் தெருக்கூத்துக் கலை ஆர்வலர்களின் கனவுகளையும் நினைவுகளையும் ஒரு தெருக்கூத்துக் கலைஞனின் இறப்பு சுக்குநூறாகத் தகர்த்துவிட்டதே.
தெருக்கூத்துக் கலைஞன் பணம் பொருளுக்காக கலையை நிகழ்த்துவதில்லை . பார்வையாளனின் தலையசைப்பிற்கும் கைத்தட்டலுக்கும் மயங்கி கலையை நிகழ்த்தக்கூடியவன். ஒரேயொரு உதாரணத்தில் இருங்கூர் இராமலிங்கம் ஐயா அவர்கள் கலையின் மீது கொண்ட பக்தியை எடுத்துக்காட்டுகிறேன். ஒருமுறை சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கால் முட்டிவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது எங்கள் பேராசிரியர் இரா. சீனிவாசன் ஐயாவுடன் இராமலிங்கம் ஐயாவை பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்பொழுது அவருடன் கொண்ட அரைமணி நேர உரையாடல் முழுவதும் அவருடைய உடல் மீதான கவலை அவருக்கு இல்லை என்பதை உணர்த்தியது. கால் முட்டிவலியால் இரணியன், கர்ணன் முதலான வேடங்களை என்னால் இட முடியாவிட்டாலும் பரவாயில்லை. கண்ணனாகவாவது வாழ்நாளின் கடைசிவரை மக்களின் முன் நின்றால் போதும் என்ற வார்த்தை ஒரு தெருக்கூத்துக் கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் அரிதாரத்தை முகத்தில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக மக்கள் முன் இருப்பதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டவன் என்பதை உணர்த்துகிறது. இருங்கூர் இராமலிங்கம் ஐயா அவர்களின் ஆத்மா சொர்க்கத்தில் இளைப்பாறும். சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு தம் கலையால் புதியதொரு சொர்க்கத்தைக் காட்டுவார்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தெருக்கூத்து நடிகராகவும், டிரைவராகவும் பணிபுரியும் வி. இள. சுரேஷ், “திரு நா. இராமலிங்கம் அய்யாவின் இறப்பு கலையுலகிற்கு பெறும் பேரிழப்பு அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது அவருடைய ஆன்மா சாந்தி அடைய மற்றும் வைகுண்டர் பதவி அடைய நான் இறைவனிடம் வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இராமலிங்க வாத்தியார் தன் இரவா கூத்துக்கலைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். காஞ்சிபுரம் அமைப்பு சார்பில் “தெருக்கூத்துக் கலையின் பிதாமகன்” என்ற விருதும், கலை இலக்கிய வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், “கலவை குமாரசாமி தம்புரான்” விருதும், எழுத்தாளர் ஜெயமோகன் ஒருங்கிணைத்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் மூலம் “வாழ்நாள் சாதனையாளர்” விருதும் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.
2017ஆம் ஆண்டில் இராமலிங்க வாத்தியார் குறித்தும், கூத்துக்கலை வாத்தியார்கள் குறித்தும் நமது மின்னம்பலத்தில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
[சிறப்புக் கட்டுரை: கலையைக் காற்றில் கரைத்த கலைஞர் – 1](https://minnambalam.com/k/2017/10/29/1509215422)
[கூத்து வாத்தியார்கள் 3: குமாரசாமித் தம்பிரான் பகுதி 1](https://minnambalam.com/k/2017/11/20/1511116206)
[கூத்து வாத்தியார்கள் 3: குமாரசாமித் தம்பிரான் பகுதி 2](https://minnambalam.com/k/2017/11/20/1511162067)
[கூத்து வாத்தியார்கள் 3: குமாரசாமித் தம்பிரான் பகுதி 3](https://minnambalam.com/k/2017/11/20/1511183496)
*புகைப்படங்கள், தகவல்கள்: முனைவர் மு. ஏழுமலை*
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,”