சினிமா என்பது என்றுமே தனி நபரின் வெற்றியாக அமைந்ததில்லை. அது ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு. அப்படிப்பட்ட சினிமா , பெருந்தொற்றின் காரணமாக முடங்கிக்கிடக்கிறது. இந்த சமயத்தில் அதனால் வளம்பெற்றவர்கள் கஷ்டப்படுபவர்களுக்கு கைகொடுத்து தூக்கி நிற்கவைப்பதற்காக பல்வேறு வகையில் நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு திரைக்கலைஞர்களின் வரிசையில் நடிகை காஜல் அகர்வாலின் பங்கும் இடம்பெற்றிருக்கிறது.
நடிகை காஜல் அகர்வால் கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கியிருக்கிறார். அத்துடன், கொரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கு 2 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்டிரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.
மும்பையை பிறப்பிடமாகக் கொண்ட காஜல் அகர்வால், தான் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கும் வேலையில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்து, உணவளிக்கும் உதவியையும் செய்து வருகிறார் நடிகை காஜல். இதற்காக ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜலுக்கு நன்றி தெரிவித்தபோது, ‘நடிகையாக நான் வந்தபோது இந்த சமூகம் எனக்கு சிலவற்றைக் கொடுத்தது. இப்போது அவர்களுக்கு தேவை இருக்கும்போது அதனை நான் திரும்பக் கொடுக்கிறேன். இது ஒருவித நன்றிக்கடன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
**-சிவா**
�,