rகொரோனா நிவாரணம்: கை கொடுக்கும் ஷாருக் கான்

Published On:

| By Balaji

உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தி கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வைரஸ் தொற்று குறித்த அச்சம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறத்தில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, போதிய உணவு பொருட்கள் இன்மை போன்ற காரணங்களால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கின்றனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நிலையில், ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட இக்கட்டான சூழலாலும் சிலர் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு நிதியுதவி வழங்க பல்வேறு பிரபலங்களும் முன்வந்துள்ளனர். அரசின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட பிற மக்களுக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் பலவிதமான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நாடு முழுவதும் பல்வேறு நிவாரண உதவிகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். அதன் முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று பெருநகரங்களிலும் நிவாரணப் பணிகளைத் துவங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அதன்படி ஏழு விதமான நிவாரணப் பணிகளில் ஷாருக்கானின் நிறுவனங்கள் ஈடுபட இருப்பதாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்குப் பண உதவி வழங்கப்படும். ஷாருக் கானும் அவரது மனைவி கவுரிகானும் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு பண உதவி வழங்கப்படும்.

மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும். மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்படும். இரண்டாயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கப்படும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி முதல்வரின் நிவாரண நிதிக்கு ஷாருக் கான் நிதியுதவி வழங்கியதற்கு நன்றி கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஷாருக் கான், ‘நீங்கள் டெல்லியின் காப்பாளர், நீங்கள் எனக்கு நன்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. என்ன வேண்டும் என்று எனக்குக் கட்டளை இடுங்கள். அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். ஷாருக் கான் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் சார்பாகவும் பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக ஷாருக்கான், தனக்கும் தனது மனைவிக்கும் சொந்தமான நான்கு மாடி அலுவலகத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான தனி இடமாகவும் மாற்றி அமைத்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களுக்குக் கை கொடுக்கும் ஷாருக் கானை பலரும் பாராட்டி வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share