RCB vs CSK: ‘6 அபார வெற்றிகள்’… பிளே-ஆஃப்-க்கு சென்ற பெங்களூரு!
RCB vs CSK: 2024 ஐபிஎல் தொடரில், 14 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது இடத்தில் இருந்தது. 12 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7வது இடத்தில் இருந்தது.
இந்த தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள 1 இடத்திற்காக இந்த 2 அணிகள் தங்கள் கடைசி லீக் போட்டியில் மோதிக்கொண்டன.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணி இந்த போட்டியில் வென்றாலே போதும் என்ற நிலையில் இருந்த நிலையில், பெங்களூரு அணி 18 அல்லது அதற்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
அதற்கு ஏற்ப, விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் பெங்களூரு அணிக்கு ஒரு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். கோலி 47 (29) ரன்களுக்கு ஆட்டமிழக்க, டு பிளசிஸ் அரைசதம் கடந்தார். அவர் 54 (39) ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
அடுத்து வந்த ரஜத் படிதார் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும், இந்த முக்கியமான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். படிதார் 41 (23) ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் இருந்த கேமரூன் கிரீன் 38* (17) ரன்கள் விளாசினார்.
இதன் காரணமாக, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்தது. 4 ஓவர்களில் 61 ரன்கள் வழங்கிய ஷர்துல் தாகூர், 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பின், வெற்றிக்கு 219 ரன்கள் தேவை, பிளே-ஆஃப் செல்ல 201 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ருதுராஜ் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த டெரில் மிட்சல், யஷ் தயாள் பந்து வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜின்கியா ரஹானே, 3வது விக்கெட்டிற்கு 66 ரன்கள் சேர்த்தபோது, ரஹானே 33 (22) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ரச்சின் ரவீந்திரா 61 (37) ரன்கள் சேர்த்திருந்தபோது ரன்-அவுட் ஆனார். பின், ஷிவம் துபே & மிட்சல் சான்டனர் சொற்ப ரன்களுக்கு வெளியேறி பெரும் அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்து வந்த ஜடேஜா மற்றும் தோனி, கடைசி வரை போராடிய போதும், சென்னை அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம், 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, 4வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு
தவெக-வுடன் கூட்டணியா? – விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!
2025 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை: காரணம் என்ன?
MI: இதுதான் மும்பைக்காக ரோகித் சர்மா விளையாடும் கடைசி போட்டியா?