‘தளபதி66’, ‘பொன்னியின் செல்வன்’ : மனம் திறந்த சரத்குமார்

entertainment

நடிகர் சரத்குமார் ‘தளபதி66’, ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

நடிகர் சரத்குமார் தற்போது தன்னுடைய கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்கள் மற்றும் ஓடிடி தொடரில் நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்து இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் நடிகர் விஜய்யின் 66வது படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் இந்த படங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், ‘இந்த மாதம் ‘தளபதி66’ பட ஷூட்டிங்கில் நான் இணைய உள்ளேன். மே மாதம் ஆரம்பித்து ஆகஸ்ட் வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். மிகவும் வலுவான கதை இது. மேலும் என்னுடைய கதாப்பாத்திரம் இந்த படத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். ரசிகர்களுக்கும் பிடிக்கும். விஜய்யுடன் வேலை பார்ப்பதில் மகிழ்ச்சி.

இந்த படத்திற்கான பூஜையில் விஜய்யை சந்தித்த போது, ‘சூரியவம்சம்’ படத்தின் 250வது நாளுக்காக கமலா தியேட்டரில் சந்தித்ததை நினைவு கூர்ந்தோம். அதில் நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியிருந்தேன். நான் சரியாக தான் கணித்திருந்தேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி’ என கூறியுள்ளார்.

மேலும் இயக்குநர் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பட அனுபவத்தையும் அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். ’இந்த படத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நிச்சயம் இந்த படம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். தயாரிப்பு, இயக்கம் என மணிரத்தினம் இந்த படத்தை மிக அருமையாக நகர்த்தி இருக்கிறார். இந்த கதையை நாம் புத்தகங்களில் படித்து அறிந்திருக்கிறோம்.

அதனால், புத்தகத்தின் கதையை படமாக்கப்பட்ட விதத்துடன் நிச்சயம் ஒப்பிடுவார்கள் என்பதுதான் இதில் மணிரத்தினம் சந்திக்க கூடிய சவாலாக இருக்கும். நிறைய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் உழைத்திருக்கிறார்கள். எங்கள் மேக்கப்பிற்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்திருக்கிறோம். ’வானம் கொட்டட்டும்’ படம் சமயத்தில் தான் மணிரத்தினம் என்னை ‘பெரிய பழுவேட்டையர்’ கதாப்பாத்திரத்திற்கு நடிக்கச் சொல்லி கேட்டார். அவர் கேட்டதும் உடனே மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களில் என்னுடைய பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்தது’ என்கிறார் சரத்குமார்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.