சண்டே ஸ்பெஷல்: உப்பு, புளி, காரம் அதிகமாயிடுச்சா… கவலைப்படாதீர்கள்!

Published On:

| By Kavi

How to fix over salty spicy and tamarind

சமையலில் சில நேரங்களில் உப்பு, புளி, காரம் போன்றவை அதிகமாகிவிடும். அதனால் அந்த உணவின் ருசியே மாறி, சாப்பிட முடியாமல் வீணாகும் நிலையும் ஏற்படலாம். அதற்காக கவலைப்படாதீர்கள்… ரெசிப்பிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தயார்செய்துவிட்டு, சமையலைத் தொடங்கினால் பெரும்பாலும் இந்தப் பிரச்சினை ஏற்படாது. அவசர கதியில் சமைக்கும்போது அளவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை வெட்டிச் சேர்க்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், டிரை ரெசிப்பிகளுக்கு இப்படிச் செய்ய முடியாது. சில நேரங்களில் காரத்தன்மையை சற்று அதிகரித்தால் உப்பின் அளவு சமன்படும். காரம், புளிப்புத்தன்மை அதிகமுள்ள உணவுகளில் உப்பு அதிகரித்துவிட்டால் ‘லெமன் சால்ட்’ என்ற சிட்ரிக் அமிலத்தை ஒரு சிட்டிகை சேர்க்கலாம். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் லெமன் சால்ட் கிடைக்கும். காரமில்லாத உணவில் இதைச் சேர்த்தால் சுவை மாறி விடும் என்பதால் தவிர்த்து விடவும். இதை அடிக்கடி உணவில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். லெமன் சால்ட்டுக்கு பதில் சில துளிகள் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

பாஸ்தா போன்ற கான்டினென்ட்டல் உணவுகளைச் சமைக்கும்போது உப்பு அதிகரித்து விட்டால் ஃப்ரெஷ் க்ரீம், வொயிட் சாஸ் அல்லது சில துளி ஆரஞ்சுச்சாறு சேர்க்கலாம். ஆரஞ்சுச்சாறு, எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். நீண்ட நேரம் சமைத்தால் சுவை மாறிவிடும்.

சாம்பாரில் காரம் அதிகமாகி விட்டால் சிறிது பருப்பை வேகவைத்துச் சேர்க்கலாம். சாம்பார், காரக்குழம்பில் சற்று வெல்லம் சேர்த்தாலும் காரம் குறையும். வெல்லம் சேர்க்கும்போது காரம் சமன்படுவதோடு சுவையும் அதிகரிக்கும். காரக்குழம்பில் உப்பு, காரம், புளிப்பு என எது அதிகமானாலும் அரைத்த தேங்காய் விழுது இரண்டு டீஸ்பூன் சேர்க்கலாம்.

குருமாவில் காரம் அதிகமாகிவிட்டால் தேங்காய் விழுது அல்லது சில முந்திரிகளை அரைத்துச் சேர்க்கலாம். தேங்காய் பிடிக்காதவர்கள் இறுதியாக குழம்பை இறக்கும்போது கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்தாலும் காரம் மட்டுப்படும். சாம்பார் சாதம், வத்தக்குழம்பு, சட்னி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது நல்லெண்ணெயை சூடுபடுத்திச் சேர்க்கலாம்.

சாம்பார் தாளிக்கும்போது வெந்தயம் அதிகரித்துவிட்டாலோ, கருகி விட்டாலோ கசப்பு சுவை தெரியும். சாம்பாரில் சிட்டிகை வெல்லம் சேர்த்தால் சுவை சமன்படும். அதேபோல பாகற்காயைச் சமைக்கும்போது எண்ணெயில் நன்றாக வதக்கிவிட்டு அதன்பிறகு மசாலா சேர்த்துச் சமைத்தால் கசப்பு தெரியாது.

உப்பு, புளி, காரம் என எந்தச் சுவையாக இருந்தாலும் 5 முதல் 10 சதவிகிதம் அளவு அதிகரித்துவிட்டால் இந்த டிப்ஸ் பலனளிக்கும். ஒரு கப் தேங்காய் சட்னியில் உப்பு அதிகமாகி வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு கரிக்கிறது என்று வைத்துக் கொள் வோம். மீண்டும் ஒரு கப் அளவுக்கு தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் அரைத்து அதனுடன் சேர்த்து சட்னியின் அளவை இரு மடங்காக ஆக்கினால் உப்பு சமன்படும். இதற்கு பதில் சட்னியில் தண்ணீரை அதிகரித்தால் அதன் பதமும், சுவையும் மாறிவிடும்.

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை… மட்டன் வறுவல் போன்ற டிரையான அசைவ உணவுகளில் உப்பு அதிகரித்தால் காரத்தை சற்று அதிகரிக்கலாம். சமைத்து முடித்த பிறகு உப்பு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தால் காரத்தை அதிகரிக்க மிளகுத்தூள் சேர்க்கலாம்.

கிரேவி, குழம்பு வகைகளில் உப்பு அதிகரித்தால் காரத்தை சற்று அதிகரித்து விட்டு, அதனுடன் தேங்காய் அல்லது முந்திரியை விழுதாக அரைத்துச் சேர்க்கும்போது உப்பு சமன்படும். மீன் குழம்பில் உப்பு அதிகரித்தால் காரத்துடன் சிறிது புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் உப்பின் அளவு சீராகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கம்பு இடியாப்பம்!

கிச்சன் கீர்த்தனா : சிவப்பு அரிசி இடியாப்பம்!

கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு

கேன்ஸ் விழாவில் கலக்கும் ஐஸ்வர்யாராய்