நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி வேண்டி தமுஎகச கோரிக்கை!

entertainment

ஊரடங்கு உத்தரவின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விற்பனை தவிர மற்று அனைத்துத் தொழில்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தினக்கூலிகளாக வேலை செய்துவந்த கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த அச்சத்தையும், உயிர் பயத்தையும் தாண்டிய அடுத்த வேளை உணவுக்கான போராட்டமே அவர்களைப் பெரிதும் வருத்துவதாக உள்ளது. இத்தகைய மக்களுக்கு உதவி செய்யும் விதமாக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏற்கனவே திரையரங்குகள் மூடப்பட்டு, சீரியல்-சினிமா ஷூட்டிங்குகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய பிரபல நடிகர்களும், இயக்குநர்களும் முன்வந்துள்ளனர். நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு அரிசி மூட்டைகளையும், பண உதவியையும் அளித்து வருகின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக திரைத்துறைக் கலைஞர்களைப் போலவே நாட்டுப்புறக் கலைஞர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக அளவில் நடைபெறும். அத்தகைய விழாக்களை மட்டுமே நம்பி தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் காத்திருந்த பெரும்பாலான மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அத்தகைய தொழிலாளர்களுக்கும் அரசு உதவ வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “**தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள்.அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில்,அவர்களும் கவலையின்றி பசியாறுவர்**” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று தமிழ்நாடு முற்போக்கு எமுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பிலும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும், மண்சார்மரபுக் கலைஞர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று அறிவிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்களுக்கான ஊரடங்கு 25.03.2020 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால். அடுத்துவரும் நாட்களில் நடக்கவிருந்த கலை இலக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. வழக்கமாக கோடையில் நடக்கின்ற ஊர் திருவிழாக்கள், கோயில் கொடை போன்றவையும் ஊரடங்கால் இவ்வாண்டு நடப்பதற்கான வாய்ப்பு தடைபட்டுள்ளது.

இந்தப் பொதுநிகழ்வுகளில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அதன்மூலமான வருவாயினால் கண்ணியமான வாழ்வை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களும் மண்சார் மரபுக்கலைஞர்களும் இப்போது வாழ்வாதாரத்தை இழந்து வீட்டோடு முடங்கிக் கிடக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுப்புறக் கலைஞர்களையும் மண்சார்மரபுக் கலைஞர்களையும் பாதுகாப்பதன் வழியாகவே தமிழ்ச்சமூகத்தின் தொன்மையான கலைவடிவங்களைப் பேணி பாதுகாக்க முடியும். எனவே, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள இவர்களை பாதுகாக்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டுமென தமுஎகச வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தமுஎகச சார்பிலும் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் ஏற்கனெவே அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டல வாரியாகவோ நலவாரியத்தின் மூலமாகவோ அடையாள அட்டை பெற்றவர்கள், அடையாள அட்டையைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் பெறாதவர்கள் என்றுள்ள இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு நசிவுற்றுள்ள இவர்களுக்கான இழப்பீட்டை நேரடியாக வழங்குவதற்குரிய வழிமுறைகளை தமிழக அரசு தாமதமின்றி வகுக்கவேண்டும் எனவும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *