kஸ்டேட்டஸ்கள் எங்கும் கௌதம் மேனன் வாசனை!

Published On:

| By Balaji

என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் தர்புகா சிவா இசையமைக்கும் தகவலை வெளியிடாமல் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற பெயருடன் முதல் இரண்டு பாடல்களை கௌதம் மேனன் ரிலீஸ் செய்தார். மறுவார்த்தை பேசாதே பாடல் ஒலிக்காத எலெக்ட்ரானிக் டிவைஸே இல்லை எனுமளவுக்கு அந்தப் பாடல் புகழ் பெற்றதன் பிறகு தர்புகா சிவாவை அறிமுகப்படுத்தினார். இது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அடுத்து இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜோஷ்வா – இமை போல் காக்க’ திரைப்படத்தில் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். நல்ல பாடகராக அறியப்பட்ட கார்த்திக்கின் இசை எப்படி இருக்கும் என்பது தெரியாமல் ரசிகர்கள் காத்திருக்க அத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஹேய் ஜோஷ்வா’ பாடலை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

கௌதம் மேனன் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர்களில் ஒருவர். ஃபேவரிட் இயக்குநர்கள் பட்டியலில் கௌதம் மேனன் பெயர் இடம்பெறாத சினிமா ரசிகர்கள் மிகக்குறைவு என்றே சொல்லலாம். இந்த இடத்தைப் பிடிக்க கௌதம் மேனன் தன்னை ஒரு படைப்பாளியாகவும், ஒரு ரசிகனாகவும் சேர்த்து வெளிக்காட்டிக்கொண்டதைச் சொல்லலாம். அந்த ரசிகன் என்ற பாணியில் ஆண், பெண், காதல், இசை, தமிழ் என கௌதம் மேனனின் ஆர்வம் பல திசைகளில் ஒரே படத்தில் பயணிப்பது மேலும் சிறப்பானது. இதில் முக்கியமானது கௌதம் மேனனின் இசை ரசனை. படம் எப்படி சொதப்பினாலும் பாடல்களில் ஹிட் அடித்துவிடுவார் என்று கௌதம் மேனனின் ரசிகர்கள் எப்போதும் ஒரு கர்வத்துடனும் இருப்பார்கள். இத்தனை சிறப்புகளைக் கொண்ட கௌதம் மேனன் சமீப காலமாக சில பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அப்படிப்பட்ட முயற்சியாகவே கார்த்திக்கை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதும் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது ரிலீஸாகியிருக்கும் பாடலின் மூலம், கார்த்திக் நல்ல பாடல்களைக் கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகவே தெரிகிறது.

கார்த்திக் இசையில் விக்னேஷ் ஷிவன் எழுதிய வரிகளை ஷாஷா பாடியிருக்கிறார். ஆங்கிலமும், தமிழும் கலந்து காணப்படும் இந்தப் பாடலின் வரிகள் ஏற்கனவே மில்லினியல் கிட்ஸ்களின் பிளேலிஸ்டில் இடம்பெற்றுவிட்டது. துள்ளலான காதல் பாடல்களை எழுதுவதில் பெயர்பெற்ற விக்னேஷ் ஷிவன் சில நல்ல வரிகளை இந்தப்பாடலில் எழுதியிருக்கிறார். அது தான் இப்போது பலரது வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் இடம்பெற்று எங்கெங்கும் கௌதம் மேனனின் வாசனையை வீசவைத்திருக்கிறது. அந்த வரிகள் இவை தான்.

“என் சட்டைமேல் உந்தன் வாசனை

அதைப்பற்றியே எந்தன் யோசனை

அவ்வாசனை எப்போதும் வீச வை

நல்ல தமிழிலே என்னைப் பேச வை”

“கண்கள்போல் நான் என்றும் உனக்கு

இமைபோல நீ என்றும் எனக்கு

இடையே இடைவெளிகளும் உனக்கு

வேறேதும் தேவையா நமக்கு”

**-சிவா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share