தமிழ் சினிமாவை மீட்டெடுப்போம்: கே.டி. குஞ்சுமோன்

entertainment

தமிழ்த் திரையுலகின் மூத்தத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவரான கே.டி.குஞ்சுமோன், தமிழ்த் திரையுலகம் கொரோனா பாதிப்பையும் தாண்டி வரும் காலக்கட்டங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிக்கை ஒன்றின் மூலமாக அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

அந்த அறிக்கையில் “நான் கடந்த 42 ஆண்டுகளாக சினிமா துறையில் இயங்கி கொண்டிருக்கிறேன். திரு.ஏவி. மெய்யப்ப செட்டியாரின் AVM, திரு. நாகிரெட்டியாரின் விஜயவாஹினி, திரு.R.M. வீரப்பனின் சத்யா மூவிஸ், திரு.K. பாலாஜியின் சுஜாதா பிலிம்ஸ், திரு. வாசனின் ஜெமினி பிச்சர்ஸ், தேவர் பிலிம்ஸ், சிவாஜி பிலிம்ஸ், சத்ய ஜோதி பிலிம்ஸ், இயக்குநர் K. பாலசந்தரின் கவிதாலயா, GV பிலிம்ஸ் போன்ற பட நிறுவனங்கள் தயாரித்த நூற்றுக்கணக்கான திரைப்படங்களை கேரளா, தமிழ்நாடு மற்ற மொழிகளிலும் வெளியிட்டுள்ளேன்.

‘வசந்த கால பறவை’, ‘சூரியன்’, ‘ஜென்டில்மேன்’, ‘சிந்துநதி-பூ’, ’காதலன்’, ‘சக்தி’, ‘காதல் தேசம்’, ’ரட்சகன்’, ‘நிலாவே வா’, ‘என்றென்றும் காதல்’, கோடீஸ்வரன்’ போன்ற படங்களைத் தயாரித்திருந்தாலும்.. என்னை நான் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொள்வதைவிட விநியோகஸ்தர் என்று சொல்லிக் கொள்வதைத்தான் நான் அதிகம் விரும்புவேன்.

பல மலையாள படங்களையும் தயாரித்துள்ளேன். ‘ஜென்டில்மேன்’ ஆடியோ கம்பெனி துவங்கி பல படங்களின் பாடல்களையும் வெளியிட்டுள்ளேன். ரசிகர்களுக்கு எது பிடிக்கும்.? எது பிடிக்காது.? ஏன் பிடிக்கிறது.? ஏன் பிடிக்காமல் போகிறது.? என்பதை ரசிகர்களோடு ரசிகனாக அமர்ந்து பல திரைப்படங்களை பார்த்துத் தெரிந்து கொண்டவன் நான்.

அப்பொழுதெல்லாம் ஒரு படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும், அதை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தருக்கும் லாபமா? நஷ்டமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. லாபத்தின் அளவு கூடுதலாகவோ, கொஞ்சம் குறைவாகவோ இருக்கும் அவ்வளவுதான். அன்று நான் பார்த்த திரைத்துறைக்கும் இன்று நான் பார்த்து கொண்டிருக்கும் திரைத்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் கண்ணுக்கு எதிராகத் தெரிகின்றன.

ஒரு படம் ரிலீசானால், அந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர், வெளியிட்ட விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள், மீடியேட்டர்கள் எல்லோரும் சம்பாதிக்க வேண்டும், ரசிகர்களால் படம் கொண்டாடப்பட வேண்டும். அந்த அளவுக்கு படம் தரமானதாகவும் இருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் வாரத்திற்கு பல படங்கள் ரிலீசாகிறது, வந்தது தெரியாமல் போய்விடுகிறது என்பதுதான் வருத்தம் அளிக்கிறது. டிஜிட்டலில் தயாரிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இப்போதும் வெளியிட முடியாமல் உள்ளது என்பதும் சங்கடமான உண்மை. அப்படியே வெளியிடப்பட்டாலும் போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல், தினமும் நான்கு காட்சிகள் திரையிடப்பட வேண்டிய படங்கள் ஒரு காட்சியோ, இரண்டு காட்சிகளோ தான் திரையிடுகிறார்கள். படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து போயுள்ளது.

எதனால் இப்படி ஆனது..? எப்படி இதை சரி செய்வது..? யார் இதை மாற்றுவது..? இது போன்ற பல கேள்விகள் நம் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன. இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது..? ஒரு திரைப்படம் யாரால் உருவாகிறது..? ஒரு தயாரிப்பாளரால் தான்… அதனால் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியா முழுக்க படத் தயாரிப்பில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள், All Film Chambers, All Producers Councils, Distributors, Exibutors அனைவரும் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து சரியான வழிமுறைகளை, ஒழுங்கு முறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, சினிமா துறை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும். எனது திரைப்படத் தொழில் அனுபவத்தை கொண்டு சில யோசனைகளை உங்கள் முன் கோரிக்கையாக வைக்கிறேன்.

எந்த காலத்திலும் ஒரு திரைப்படம் வெற்றிப் படமாக அமைய வேண்டுமானால், முதலில் அதற்கு தேவை சிறந்த கதை. எப்போதுமே கதைதான் ஹீரோ. கதை – அந்த கதைக்குரிய திரைக்கதை – அதில் இடம்பெறும் செண்டிமெண்ட், காமெடி, சண்டை காட்சிகள், பரவசமூட்டும் பாடல்கள், அர்த்தமுள்ள வசனங்கள், மயக்கும் இசை, அவற்றை நேர்த்தியாக படமாக்கும் இயக்குநர், தலைசிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அனைத்தும் அழகாக அருமையாக அமைய வேண்டும்.

அவை ஒவ்வொன்றிலும் ஒரு தயாரிப்பாளர் கவனம் செலுத்த வேண்டும். இயக்குநருடன் இணைந்து பணிபுரிபவர்கள் அனுபவம் நிறைந்த தொழில் நுட்பக் கலைஞர்களாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோர் புதியவர்களானால் அவர்கள் பிரபலமானவர்களிடம் உதவியாளர்களாக வேலை செய்த அனுபவமிக்கவர்களாக இருக்க வேண்டும். பிரபல நடிகர்களோ, புதுமுக நடிகர்களோ யாரை வைத்து படம் எடுத்தாலும் Cost Of Budget என்கிற தயாரிப்பு முதலீட்டை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் ஹீரோக்களின் சம்பளமே படத்தோட பட்ஜெட்டை மொத்தமா சாப்பிடுது. பிரபல நடிகர்களுக்கு வியாபார கேரண்டி உண்டு என்றாலும் அவர்களது ஊதியத்திற்கும் ஓர் அளவுகோல் வைக்க வேண்டும்.

Pre-Production, Shooting, Post Production, Artiste, Technician Salary, Censor வரை ஆகும் செலவு, விளம்பரம், முதலீடு செய்யப்படும் பணத்திற்குரிய வட்டி, வியாபாரம்வரை கவனத்தில் கொள்ளப்பட்டு Budget-ஐ கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். போட்ட Budget-ஐ விட Cost Of Production அதிகமாக ஆகிவிடும் படங்களே.. அந்த படத்தின் தயாரிப்பாளரை நஷ்டப்பட வைக்கிறது.

காட்சிகளை படமாக்க ஆகும் ஷூட்டிங் செலவை செய்தே ஆக வேண்டும். அப்போதுதான் ஒரு Commercial Cinema-வை Quality-ஆக கொண்டு வர முடியும். அதே சமயம் அனாவசிய செலவீனங்களை கட்டாயம் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.

யார் நடித்த படமாக இருந்தாலும் First Copy தயாராகி சென்சார் ஆன பிறகு, படத்தை பார்த்த பிறகே எந்த திரைப்படத்திற்கும் விநியோகஸ்தர்கள் விலை பேச வேண்டும். வியாபார போட்டியில் ஏலம் எடுப்பது போல விலையை ஒருவருக்கு ஒருவர் ஏத்திவிட்டு ரிலீஸ் செய்த பின் வசூலாகவில்லை என்று வருத்தப்படக் கூடாது. படத்தின் தரமே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி, மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் ஒரு படம் வெற்றி பெற்ற உடனேயே தங்களது சம்பளத்தை ஏற்றிக் கொண்டே போக கூடாது. ஐந்து ரூபாயை ஆறு ரூபாயாக ஆக்கலாம். ஆனால், ஆறு ரூபாயை அறுபது ரூபாயாக ஆக்கக் கூடாது. நியாமான ஊதியம் வாங்கினால் (Resonable Remuneration) நல்லது.

ஹீரோ, ஹீரோயின், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு பெரிய சம்பளம் கொடுக்காமல் இருந்தால் படத்தை தரமானதாக எடுக்க செலவு செய்ய முடியும்.

திரையரங்க உரிமையாளர்களும் பிரபலம் பார்க்காமல் ரிலீசாகும் எல்லா படங்களுக்கும் அரசு அனுமதி அளிக்கும் நான்கு / ஐந்து காட்சிகள் திரையிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். எந்த தொழில் செய்தாலும் அதன் மூலம் லாபம் பெற வேண்டும் என்பதே அதன் இலக்கு. சினிமாவும் ஒரு தொழில், சினிமாவின் தகுதியான தயாரிப்பாளர் ஒவ்வொருவரும் படம் எடுப்பதன் நோக்கம். பெயர், புகழ் பெறுவதற்காக மட்டுமல்ல வருமானம் ஈட்டவும் தான். எடுக்கப்படும் எல்லா சினிமாவும் சாதனை செய்யவும் வேண்டும். சம்பாதித்தும் தர வேண்டும். முதலீடு செய்ய ஒரு தயாரிப்பாளர் இல்லையென்றால் யாருடைய கதையாவது திரைப்படம் ஆகுமா? யாராவது இயக்குநராக முடியுமா? நடிகராக முடியுமா?

இன்று பிரபலமாக இருக்கும் எல்லா நட்சத்திரங்களுக்கும் அன்று வானமாய், வாழ்க்கையாய் ஒரு தயாரிப்பாளர்தான் இருந்திருப்பார் என்பதை யாராவது மறுக்க முடியுமா…? ஒரு படம் வெற்றி பெற்றால் ஒட்டு மொத்த யூனிட்டுக்கும் வாழ்வு வரும். தோல்வி அடைந்தால் அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கே முதல் பாதிப்பு, பணம் இழப்பு, தோல்வி படங்களால் சில தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் உயிரையே விட்டிருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.

தயாரிப்பாளர்களை அந்தக் கால முன்னணி நடிகர்களும், மூத்த கலைஞர்களும் ‘முதலாளி’ என்றே மரியாதையோடு அழைத்தனர். நான் எடுத்த படங்களில் நடித்த திரு.M.N.நம்பியார், திரு.வி.கே.ராமசாமி, திரு.நாகேஷ், திரு.S.P.பாலசுப்ரமணியம், திரு. கிரிஷ் கர்னாட், திரு. சிவக்குமார், திரு. ஜெய்சங்கர், கவிஞர் வாலி, கவிப் பேரரசு வைரமுத்து, திருமதி. மனோரமா, திருமதி. லதா போன்றவர்கள் என்னை ‘முதலாளி’ என்றே அழைத்தனர். நானும் அவர்களை பார்த்தால் வணங்கி ஆசி பெறுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

இதேபோல் இன்றைய சினிமாவில் நன்றியோடு நடந்து கொள்பவர்கள் எத்தனை பேர்? ஐந்து ரூபாய் தர வேண்டியவர்களுக்கு ஐம்பது ரூபாய் தந்தாலும் நன்றி இல்லை. தனக்கு முதன்முதலில் பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்களுக்கு அவரால் வளர்ந்த இயக்குநரும், ஹீரோவும் குறைந்தது ஐந்து படங்களாவது செய்து கொடுக்க வேண்டும்.

சினிமா ஷுட்டிங் நடக்குமிடங்களில் எதற்கு இத்தனை கேரவன்கள்..? ஒன்று போதாதா…? நட்சத்திரங்கள் உள்ளே நுழைந்தால் எப்போது வெளியே வருவார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். Call Sheet Time-மில் ஒவ்வொரு வினாடிக்கும் விலை உண்டு. அது தயாரிப்பாளரால் பணமாக தரப்படுகிறது என்பதைப் படப்பிடிப்பு தளத்தில் பணிபுரியும் 24 Craft கலைஞர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவரும் சிறப்பாக, பொறுப்பாக செயல்பட்டால் மட்டுமே பொருளாதார, நேர, வீண் விரயங்களை தடுக்க முடியும். தயாரிப்பாளரால் திட்டமிட்ட பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியும்.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ஒரு ரசிகன், பொது ஜனங்கள், நம்மால் நஷ்டப்படக் கூடாது. ஒரு முறை படம் பார்த்தால் மீண்டும் அந்த படத்தை பார்க்க வர வேண்டும். சினிமா தயாரிக்க பைனான்ஸ் செய்யும் பைனான்சியர்களும் தற்போது வாங்குவதை விட, நியாயமான வட்டி மட்டுமே வாங்க வேண்டும்.

படங்களுக்கு விளம்பரம் செய்வதை தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். அதற்கு அளவுகோல் வைக்கக் கூடாது. காரணம், விளம்பரம் செய்வது என்பது வியாபாரத்தின் அத்தியாவசிய தேவை, வித்தியாசமான முறையில் பெரிய அளவில் விளம்பரம் செய்தால்தான் எந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.

திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுவோர் மீது மத்திய, மாநில அரசுகளும், காவல் துறையும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடுகிற குதிரை மீது மட்டுமே பந்தயம் கட்டாமல்.. புதிய புதிய நடிகர்கள், டெக்னிஷீயன்களை உருவாக்கிவிட வேண்டும். அவர்களுக்குரிய நியாயமான ஊதியம் தரப்பட வேண்டும். நடிகர்கள் நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வர வேண்டும், ஆறு மாதங்களுக்குள் எந்த படத்தையும் எடுத்து முடித்து வெளியிட்டு விட வேண்டும்.

சென்சார் செய்யப்பட்ட வரிசைப்படியே படங்களை ரிலீஸ் செய்ய Producers Council அனுமதி வழங்க வேண்டும். எடுத்த படம் வெற்றி பெற்றால் படத்தில் சம்பந்தபட்ட அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர் ஊதியத்தோடு வெகுமதியையும் பெருந்தன்மையோடு தந்துவிட வேண்டும். அதற்கு பிறகு படத்தின் கதை, இசை போன்ற அனைத்து உரிமைகளும் அதன் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தமாகும்.

உதாரணமாக இசையை எடுத்து கொண்டால் அதில் Musicians, Engineers, Lyric Writers, Singers அனைவரது உழைப்பும் பங்களிப்பும் அடங்கி இருக்கிறது. ஷூட்டிங் என்றால் 24 Craft உறுப்பினர்களும் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.

அவர்களுக்குரிய ஊதியம் தயரிப்பாளரால் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதற்கு பிறகு அவர்கள் எப்படி உரிமம் கேட்க முடியும். அவர்களில் எவரேனும் தயாரிப்பாளராகி படம் எடுத்தால் அந்த படத்தின் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கே சொந்தமாகும். சம்பளத்திற்காக வீடு கட்டி தந்தவர்கள் அந்த வீட்டுக்கே உரிமை கொண்டாட முடியுமா.? Copy Right Act-படி தயாரிப்பாளருக்கே அனைத்து இசை சம்பந்தப்பட்ட உரிமைகளும் சொந்தமாகும்.

அரசியல் தனி, சினிமா தனி. நமக்கு தொழில் சினிமா. ’அதை‘ சரியா செய்யணும். ‘சினிமா’வில் இருந்து வந்த எம்.ஜி.ஆர், ‘தேவுடு’ என்று ஆந்திர மக்களே கொண்டாடிய என்.டி.ஆர், ஜெ.ஜெயலலிதா போன்றவர்களை மக்கள் அரசியலிலும் ஆதரித்தார்கள். முதலமைச்சர்களாக்கி அழகு பார்த்தார்கள்.

அவர்களைப் பார்த்து இன்று சில பிரபல நடிகர்களும், அரசியலில் நுழைய ஆசைப்பட்டு கொண்டு அலைகிறார்கள். இவர்களெல்லாம் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் என்ன நன்மை செய்து இருக்கிறார்கள்…? ஒரு மாநிலத்துக்கு எத்தனை பேர் முதலமைச்சராக வர முடியும்..? ரசிகர் மன்றத்தை கலைத்த பிரபலமும் உண்டு .ரசிகர்களை நம்பி ஆட்சியை பிடிக்க தயாராகிற பிரபலங்களும் உண்டு.

திடீரென தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகத்துக்கே பாடமானது. நாடே முடங்கியது. எல்லா தொழிலும் நின்று போனது. பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது. பிரதமரும், ஜனாதிபதியும், முக்கிய மந்திரிகளும் தங்களது மாதாந்திர ஊதியத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நடிகர்களும், இயக்குநர்களும் மற்ற டெக்னிஷீயன்களும் இதை கவனத்தில் கொண்டு தங்களது ஊதியத்தை குறைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *