கொத்தவால்சாவடி முதல் கோடம்பாக்கம் வரை… சிவசங்கரின் பயணம்!

entertainment

இந்திய சினிமாவில் 10 மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சிவசங்கர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

நடன இயக்குநர் சிவசங்கர் 1948 டிசம்பர் 7 அன்று சென்னை பாரிஸில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்த கல்யாண சுந்தரம் – கோமளம் அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை கொத்தவால்சாவடியில் மொத்த பழ விற்பனையாளராக இருந்தார். ஒரு விபத்தின் காரணமாக சிவசங்கர் இளம் வயதிலேயே முதுகெலும்பு முறிவுக்கு ஆளானார். அதற்காக இவர் எட்டு வயது வரை தனது அத்தைகளால் பராமரிக்கப்பட்டார்.

வீட்டிலேயே பயின்றார். பிற்காலத்தில் சௌகார்பேட்டை பிரம்ம ஞானசபை இந்து மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். குடும்பத்தில் பெண்களாலேயே பெரும்பாலும் இவர் கவனித்து வளர்க்கப்பட்டதால் வெளி உலக தொடர்பு இல்லாமல் வளர்ந்தார். இதுவே தனது பெண்மை சாயல் கொண்ட நடத்தைக்கு காரணம் என்று அண்மையில் குறிப்பிட்டார்.

இவர் தந்தை கர்நாடக இசை, ஜோதிடம் போன்றவற்றில் அளப்பரிய அறிவு திறனுள்ளவராக இருந்தார். ஆனால், தனது குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். அதிர்ஷ்டவசமாக, அவர் தந்தை கர்நாடக இசை விழாவில் கலந்துகொண்டபோது, இவரை பிரதிநிதியாக நாடகம் மற்றும் நடன விழாக்களுக்குச் செல்லுமாறு சிவசங்கரிடம் கேட்கப்பட்டது.

இது இவர் நடனத்தைக் கற்றுக்கொள்ள ஊக்கமளிப்பதாக அமைந்தது. மயிலாப்பூரில் உள்ள நட்ராஜ் மற்றும் சகுந்தலாவிடம் நடனத்தில் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். பின்னர், இவர் 1974இல் நடன அமைப்பாளர் சலீமின் உதவியாளராகச் சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த பாட்டும் பரதமும் படத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். 1980ஆம் ஆண்டு பி.மாதவன் இயக்கிய குருவிக்கூடு படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார்.

1980 முதல் 2021 வரை இவர் தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும், நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் 1996ஆம் ஆண்டு பூவே உனக்காக, 2004இல் விஷ்வ துளசி, 2006 வரலாறு, 2008 உளியின் ஓசை படங்களில் பணியாற்றியதற்காக சிறந்த நடன இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

2011 மகதீரா தெலுங்கு படத்தில் நடன இயக்குநருக்கான தேசிய விருதும் இவருக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சிவசங்கர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, தில்லுக்கு துட்டு, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவர் மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சிவசங்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடன இயக்குநர் சிவசங்கர் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *