Lபிரபல பாலிவுட் பாடகர் மரணம்!

entertainment

பிரபல பாலிவுட் பாடகர் பப்பி லஹிரி(69) உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தி, வங்காள மொழி படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானார். இந்திய சினிமாவில 1980 தொடக்கத்தில் டிஸ்கோ நடனத்தை அறிமுகம் செய்தவர். அதன் பின்னரே இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் டிஸ்கோ நடனமும், பாடல் காட்சிகளும் தவறாமல் இடம் பெறத் தொடங்கியது. அதற்கு காரணமாக இருந்தவர் பப்பி லஹரி.

சிறந்த இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்த பப்பி லஹரி, அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார். 2014ஆண்டில் இவர் பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் அவருக்கு, மேற்குவங்கத்தின் ஸ்ரீராம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு போட்டியிட்டார். ஆனால், அவர் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

கடைசியாக இந்தி பிக்பாஸ் சீசன் 15ல், நடிகர் சல்மான் கானுடன் பப்பி லஹரி கலந்து கொண்டார். கடந்த ஆண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பப்பி லஹரி, கொரோனாவில் இருந்து மீண்டாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டார்.

உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹிரி கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், அவரை மறுபடியும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உறக்கத்தில் மரணமடைந்ததாக, அவருக்கு சிகிச்சையளித்து வந்த டாக்டர் தீபக் தெரிவித்தார்.

பப்பி லஹிரி என்றாலே உடல் முழுவதும் தங்கச்செயின் அணிந்து கொண்டு, கருப்பு கிளாஸ் கண்ணாடி அணிந்து கொண்டு இருப்பது அவரது அடையாளமாக இருந்தது. இந்தியாவில் டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்தியவராக, அனைவராலும் அறியப்பட்ட பப்பி லஹிரி 1970, 80களில் பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு பாகி 3 படத்தில் பாடியிருக்கிறார். சொந்தமாகவும் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவரது இசையில் பாடும் வானம்பாடி, அபூர்வ சகோதரிகள், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா போன்ற படங்கள் வெளியாகின. இவற்றில் ஆனந்த் பாபு, ஜீவிதா நடிப்பில் வெளியான பாடும் வானம்பாடி படத்தில் ‘நானொரு டிஸ்கோ டான்ஸர்’ பாடல் ஹிட். அந்தப் பாடலில் ஆனந்த் பாபுவின் நடனமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பப்பி லஹிரியின் மரணத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பப்பி லஹிரி இணையற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர். இவரது பாடல்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தன. அவரது மறக்கமுடியாத பாடல்கள் நீண்ட காலமாக கேட்போரை மகிழ்விக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ பப்பி லஹிரியின் இசை அனைத்தும் உள்ளடக்கியதாகவும், பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக மக்கள் அவரது படைப்புகளை தொடர்புபடுத்த முடியும். அவருடைய கலகலப்பான இயல்பை அனைவரும் தவறவிடுவார்கள். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பப்பி லஹிரியின் மறைவுக்கு திரையுலகினர் சமூகவலைத்தளங்கள் மூலமாக தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *