புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சிகள், பொது சமூகத்தில் இருந்து கண்டனங்களும், போராட்டங்களும் தினசரி நிகழ்வாக மாறி வருகிறது. இந்தநிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் இதுகுறித்து வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜெ பேபி’ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித் சிறுமி கொலை குறித்து, “பதற்றமாக இருந்தது. பயமாகவும் இருக்கிறது. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தச் செய்தி என்னை தொந்தரவு செய்துவிட்டது.
அது தொடர்பாக வீட்டில் பேசவில்லை. அந்த அளவுக்கான பதற்றத்தை உருவாக்கிவிட்டது. பெரிய பயம் உள்ளது. அந்த பயம் ஒரு குற்றத்தை மையப்படுத்தியது மட்டுமல்ல. இங்கே நிறைய பிரச்சினைகள் உள்ளன. நம் கல்வி நிலையங்கள் சரியான கல்வியை சொல்லிக்கொடுக்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகிறது.
போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் இது போன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை. குற்றம் செய்தவர் இன்று மாட்டிக்கொண்டார்கள். ஆனால், இதில் சிக்கிக்கொள்ளாத அப்பாக்கள், தாத்தாக்கள், மாமன்கள் இன்னும் உலாவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த ஒட்டுமொத்த சமூகமும் தான் இதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் எல்லோருமே தான் இதற்கு காரணம். அடிப்படையாக கல்வியும், பகுத்தறிவற்ற தன்மையும் தான் நம்மை இப்படியான மோசமான இடத்துக்கு கொண்டு செல்கிறது. இது ஒவ்வொரு தனிமனிதருக்குமான பொறுப்பு,” என்றார்.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…ராகுல் காந்தி தரும் 5 வாக்குறுதிகள்!
IPL 2024: புதிய மற்றும் பழைய கேப்டன்களின்… லேட்டஸ்ட் ‘சம்பளம்’ இதுதான்!