சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்

Published On:

| By Monisha

Siddharth Press Meet Issue

சினிமா உள்ளடக்கம், அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் இவற்றுக்கு எதிராக விமர்சனங்களையும், சில நேரங்களில் போராட்டங்களையும் இந்திய சினிமா அவ்வப்போது எதிர்கொண்டுவருகின்றது.

சித்தார்த் தயாரிப்பில் நேற்று (செப்டம்பர் 28) வெளியான சித்தா படத்தின் விளம்பர நிகழ்வுக்காக பெங்களூர் சென்ற நடிகர் சித்தார்த் அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்கள் மாநிலத்தில் காவிரி நீர் சம்பந்தமாக மாநில உரிமைக்கான போராட்டம் நடந்துகொண்டுள்ளது. இந்த நேரத்தில் சினிமா சம்பந்தமான நிகழ்வுகள் தேவையில்லாதது என பெங்களூரில் உள்ள தனியார் விடுதியின் அரங்கத்திற்குள் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர் கன்னட அமைப்பினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனது நிலையை கூறுவதற்கு கூட அனுமதிக்கவில்லை கன்னட அமைப்பினர்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக சித்தார்த் கலந்துகொண்டு வருகிறார். பொது நலம் சார்ந்த சித்தா படம் விமர்சகர்களாலும், திரைத்துறையினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சித்தா படத்தைப்பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோவில்,

“நான் இந்தப் படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு என்னதான் அம்மா சொல்லிக் கொடுத்தாலும், அவர்களின் மனதில் பதியும்படி இருக்க வேண்டுமென்றால் கதை சொல்ல வேண்டும். எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால், இறுதியில் அழுத்தத்துடன் வெளியே வராமல், இப்படியெல்லாம் நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.

பெண்குழந்தை, ஆண் குழந்தையெல்லாம் தாண்டி குழந்தைகளாகவே அவர்களை பார்க்க வேண்டும். இந்தப் படத்தில் இயக்குநருக்கு முக்கியமான பாராட்டு என்றால், விபத்தை விவரிக்கும்போதே மூளை எப்படி சிதறியது தெரியுமா என விவரிப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல், ஒரு கொலையை கேமராவை காட்டாமல் முதல் தகவல் அறிக்கையை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் ரசிகர்களின் மனதில் ஊன்றி நடக்க வேண்டும். ஊன்றிய இடத்தில் தடயம் பதியவேண்டும். அப்படி நிறைய தடங்கள் இருக்கிறது.

இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது பெரியவர்களுக்கான படம் மட்டுமல்ல. சிறுவர்களும் பார்க்க வேண்டும். படக்குழுவின் இன்ஸ்பிரேஷன் ‘மகாநதி’ என்றால் எனக்கு அதைவிட இது பிடித்திருக்கிறது.

வசூல் ரீதியாக படம் வெற்றிபெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என பேசியுள்ளார்.

இந்த நிலையில் சித்தார்த் கன்னட அமைப்பினரிடம் சமரசம் பேச முயன்றார். ஆனால் அதை ஏற்காத கன்னட அமைப்பினர் அவரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

இந்த நிகழ்விற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது x பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் “பல தசாப்தங்கள் பழமையான இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக…

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக…

சாமானியர்களையும், கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக .. கன்னடர்கள் சார்பாக.. மன்னிக்கவும் சித்தார்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

வாச்சாத்தி சம்பவத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை: பாலகிருஷ்ணன்

“வாச்சாத்தி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை” – வழக்கறிஞர் இளங்கோவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel