தமிழகத்தில் மார்ச் 29-ஆம் தேதி 11 படங்கள் வெளியானது. வழக்கமாக படம் வெளியான முதல் நாள் அல்லது மூன்றாவது நாள் படம் வெற்றி பெற்றதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்று.
இது போன்ற நிகழ்ச்சிகள் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்ததால் கடந்த சில மாதங்களாக போலியான சக்ஸஸ் மீட்கள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் “ஹாட்ஸ்பாட்” திரைப்பட குழுவினர் வணிக ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் படைப்புக்கு கிடைத்த விமர்சனங்கள், பாராட்டுகள், திரையரங்குக்கு சாராசரி பார்வையாளர்கள் வருகையின் மூலம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என உண்மையை உடைத்து பேசியுள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவை பற்றி இதுவரை தமிழ் சினிமாவில் பேசாத பக்கங்களைப் பற்றி பேசும் படமாக தயாரித்து வெளியான திரைப்படம் ஹாட் ஸ்பாட்.
இப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பின்பு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
மார்ச் 29 ஆம் தேதி படம் வெளியான பின்பு அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற நிலையில் இப்படத்தின் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில், சிக்ஸர் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்களில் ஒருவரான தினேஷ் கண்ணன் பேசும்போது,
“இது தேங்ஸ் மீட், மக்களிடம் இந்தப்படம் பேசப்படக் காரணமே பத்திரிக்கையாளர்கள் தான். கடந்த வாரம் 11 படங்களுள் ஒன்றாக வெளியானது. அது மிகப்பெரிய பிரஷரைத் தந்தது, சில திரையரங்குகளில் ஒரு காட்சி ஒதுக்கீடு பெறவே போராட வேண்டியிருந்தது.
மக்கள் எங்கள் படத்தை அரவணைத்துக் கொள்ள தொடங்கிய பின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு இரண்டாவது வாரமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.
இது போன்ற சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தந்தால், எங்களை மாதிரி நிறையப் பேர் படம் எடுப்பார்கள். இந்தப்படத்தின் நடிகர்களுக்கு நிறையத் தைரியம் இருக்க வேண்டும். இப்படி கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் வந்ததில்லை.
விக்னேஷ் எப்படி நடிகர்களை ஒத்துக்கொள்ள வைத்தார் எனத் தெரியவில்லை, இப்படம் டிரெய்லர் வந்த போது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் படம் வந்த பிறகு அனைவரும் பாராட்டினார்கள்
வணிக ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஆனால், படைப்புக்கு கிடைத்த விமர்சனங்கள், பாராட்டுகள், திரையரங்குக்கு சாராசரி பார்வையாளர்கள் வருகையின் மூலம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்சம் பாராட்டினால் இந்த வாரமும் இந்தப்படம் ஓடும்” என்று தெரிவித்தார்.
படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசும்போது, “படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைக்க மிக முக்கிய காரணம் நீங்கள் தான். பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிட்டி பரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப்பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமானது.
இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. வாரத்தின் கடைசி நாட்களில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல். அதனால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள். அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 படத்தோடு, உங்களைச் சந்திக்கிறோம்.
ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான அட்வான்சிற்கான காசோலை தயாரிப்பாளர்கள் தரப்பில் இயக்குநருக்கு வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பார்த்திபனின் ‘டீன்ஸ்’: இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் உலக சாதனை!
துரைமுருகன் உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு: ரூ.7.5 லட்சம் பறிமுதல்!
பியூட்டி டிப்ஸ்: கோடைக்காலமும் நகைப் பராமரிப்பும்!
பிடிபடாத சிறுத்தை: மோப்ப நாய்கள் மூலம் தேடும் பணி தீவிரம்!