துரைமுருகன் உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு: ரூ.7.5 லட்சம் பறிமுதல்!
வேலூர் மாவட்டம் காங்குப்பத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் இருந்து ரூ.7.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஐடி, தேர்தல் பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக தொடர்புடைய அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி சோதனை நடத்தினர். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலை பார்க்கும் மூன்று பேர் ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு ரயிலில் கட்டுக்கட்டாக கொண்டு சென்ற ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை மற்றும் தாம்பரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், வேலூர் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனின் உறவினர் நடராஜன் வீட்டில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடராஜன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது வீடு பூட்டியிருந்ததால், அருகில் இருந்த வீட்டின் மாடி வழியாக நடராஜன் வீட்டின் மாடியில் போலீசார் தாவி குதித்தனர். அப்போது மாடியில் சிதறிக்கிடந்த ரூ.2.50 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
மொட்டை மாடியின் கதவை உடைத்து நடராஜன் வீட்டிற்குள் போலீசார் சென்றனர். இதனையடுத்து நடராஜனின் மனைவி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீடு முழுவதும் சோதனை செய்த அதிகாரிகள் பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மொத்தமாக நடராஜன் வீட்டில் இருந்து ரூ.7.5 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது சுமார் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதால், வருமான வரித்துறை புகாரின் பேரில் வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடைக்காலமும் நகைப் பராமரிப்பும்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!