டேனியல் பாலாஜி மறைவு : கமல், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

Published On:

| By Minn Login2

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு, திரையுலகின் மூத்த நடிகர்களான கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரையில் சித்தி தொடர் மூலம் நடிகராக அறிமுகமாகி, பின்னர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48).

அதனைத்தொடர்ந்து பொல்லாதவன், காக்க காக்க, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜியின் மறைவையடுத்து, அவருக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது உடலுக்கு இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், கெளதம் வாசுதேவ், அருண் மாதேஸ்வரன், நடிகர்கள் விஜய்சேதுபதி, அதர்வா, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் உள்ளிட்ட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சமூகவலைதளங்களிலும் அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பின்னும் அவர் வாழ்வார்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என பதிவிட்டிருந்தார்.

மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுள்ளார்!

நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ”தமிழில் சித்தி நெடுந்தொடர் வாயிலாக நடிகராக அறிமுகமாகி, டேனியல் என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் காரணமாக டேனியல் பாலாஜி என அன்புடன் அழைக்கப்படும் சகோதரர், தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனாக பார்க்கப்படுபவர் திடீர் மாரடைப்பால் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இளம் வயதில் மறைந்து மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்ற டேனியல் பாலாஜி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தார்க்கும், தமிழ்த் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

 

நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தம்பி’ என குறிப்பிட்டு தன்னுடைய இரங்கலை பதிவிட்டுள்ளார்.

பாலாஜி சித்தப்பா – அதர்வா

நடிகர் அதர்வா தனது எக்ஸ் பக்கத்தில், ”நேரம் மற்றும் வாழ்க்கையின் மூலம் நம்மைத் தாக்கும் நபர்களே மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளும் நாட்களில் இதுவும் ஒன்றாகும். நாங்கள் உங்களுடன் ஒன்றாக அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது வெறும் கனவாகவே போனது. நிம்மதியாக இருங்கள் பாலாஜி சித்தப்பா.” என அதர்வா பதிவிட்டுள்ளார்.

-மாணவ நிருபர் கவின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ்நாடு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டு: வைகோ வலியுறுத்தல்!

சித்தார்த் அடுத்த படத்தின் இயக்குநர் இவரா..?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share