தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேரளாவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா படம் வெளியாவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு ஏற்காமல் மறுக்கப்பட்டதோடு கேரள உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மே 5 ஆம் தேதி படம் வெளியானது. தமிழகத்தில் இந்தி வெர்சனில் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வெளியான இப்படம் 2 நாட்களில் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
அதற்கு மறுநாள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேரளா ஸ்டோரி படத்திற்கு மாநிலத்தில் தடை விதித்தார்.
தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதை நிறுத்தியதற்கும் மேற்கு வங்கத்தில் படத்திற்கு தடை விதித்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பட தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா கடந்த மே 10 ஆம் தேதியன்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று (மே 15) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ”தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாட்டின் பிற பகுதிகளில் வெளியிடப்பட்ட போது மேற்கு வங்கம் வேறுபட்டதல்ல என்று கூறியது.
இது தொடர்பாக விளக்கமளிக்க தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிற 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ”தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால் திரையரங்குகளே படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளன.
படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு மட்டும் தான் அளிக்கப்பட்டதே தவிர தடை விதிக்கவில்லை.
திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்துவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்” விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
மதத் தலைவர்கள் வெளியிட்ட “பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்” போஸ்டர்!
மெத்தனாலுக்கு தமிழ்நாட்டில் தடையா?: மா.சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு!
