Aadujeevitham: பிருத்விராஜ் படம் ரசிகர்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்!

சினிமா

வாழ்வே இருளாக மாறும்போது, சிறு துளி வெளிச்சத்தைத் தேடி அலையும் அனுபவம் ரொம்பவே கொடூரமானதாக இருக்கும். அதனைக் கடந்து வந்தால் தென்படும் ஒளி பெரும் கடலெனத் தெரியும். அந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே ஒருவர் மேற்கொள்ளும் பயணம், வாழ்வின் மீதான நம்பிக்கையின் பலத்தைக் காட்டும்.

பென்யாமின் மலையாளத்தில் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ எனும் அவரது சுயசரிதை, அப்படிப்பட்டதொரு அனுபவத்தை அங்குள்ள வாசகர்களுக்குத் தந்தது. அதில் விரிந்த உலகத்துக்குத் திரையில் உருவம் தர முனைந்தார் இயக்குனர் பிளெஸ்ஸி.

அப்படித்தான் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் உருவாகத் தொடங்கியது. அந்த எண்ணம் இயக்குனரின் மனதில் உதித்த ஆண்டு 2008. சுமார் 16 ஆண்டுகள் கழித்து அவரது விருப்பம் திரையில் மலர்ந்திருக்கிறது. இயக்குனர் பிளெஸ்ஸியின் பதினாறு ஆண்டு கால உழைப்புக்குத் தக்க பலன் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கிறதா ‘ஆடு ஜீவிதம்’?

விரக்தியின் உச்சியில்

ஆற்றங்கரையோரத்தில் மீன் பிடிப்பதும் மணல் அள்ளுவதுமாகத் தனது வாழ்வைக் கழிப்பவர் நஜீப் முகம்மது (பிருத்விராஜ் சுகுமாரன்). தாய் (ஷோபா மோகன்), மனைவி சைனு (அமலா பால்) உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

மச்சினர்கள் இருவரும் அமீரக நகரங்களில் பணி செய்வதைக் கண்டு, தானும் அவர்களைப் போல வேலை செய்து கை நிறைய சம்பாதிக்க வேண்டுமென்று எண்ணுகிறார் நஜீப். தெரிந்த ஏஜெண்ட் மூலமாக மும்பை சென்று, அங்கிருந்து சவுதி அரேபியாவுக்குப் போகிறார். உறவினரான ஹக்கீம் (கே.ஆர்.கோகுல்) என்ற இளம் வாலிபரும் அவருடன் பயணிக்கிறார்.

அங்குள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்துச் செல்ல வருகிறார் ஒரு நபர். வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனத்தை அவர் எடுத்து வருகிறார். அதனைக் கண்டு துணுக்குற்றாலும், ’கம்பெனி வேலைக்கு வந்திருக்கிறோம்’ என்ற எண்ணம் அவர்களை ஆற்றுப்படுத்துகிறது.

ஆனால், அவர்கள் மனதின் ஓரத்தில் இருந்த பயம் விஸ்வரூபம் எடுக்கும் அளவுக்கு அடுத்தடுத்த நிகழ்வுகள் அமைகின்றன. பாலைவனத்தின் ஓரிடத்தில் ஹக்கீமை இறக்கிவிடும் அந்த நபர், வெகுதொலைவில் இருக்கும் ஒரு கூடாரத்திற்கு நஜீப்பை அழைத்துச் செல்கிறார். அங்கு ஒட்டகங்கள், செம்மறி ஆடுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

அரபி மொழி தெரியாமல், அவர்களோடு பேசத் திணறுகிறார் நஜீப். சாப்பாடு, தூங்குவதற்கு நல்லதொரு இடம், குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் என்று அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகிறார். அது போதாதென்று வேலை செய்யச்சொல்லி துன்புறுத்தல்கள் வேறு.

மெல்ல, மெல்லத் தான் ஒரு அடிமையாக அங்கு வந்திருப்பதைப் புரிந்துகொள்கிறார் நஜீப். அவரது தப்பித்தல் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன. அந்த தருணங்களில் கால் எலும்பு முறியும் அளவுக்கு அடி வெளுத்தெடுக்கிறார் அந்த முதலாளி.

என்ன செய்தாலும் அங்கிருந்து வெளியேற முடியாது என்ற நிலையில் ஆடுகளோடும், ஒட்டகங்களோடும் சேர்ந்து ஒரு விலங்கைப் போலவே வாழத் தொடங்குகிறார் நஜீப். ஒருநாள் மீண்டும் ஹக்கீமைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது.

அப்போது, தன்னுடன் பணியாற்றும் இப்ராகிம் காதிரிக்கு (ஜிம்மி ஜீன் – லூயிஸ்) இந்த பாலைவனத்தில் அனைத்து வழிகளும் தெரியும் என்கிறார் ஹக்கீம். அவர் உதவியோடு நாம் இருவரும் தப்பித்துச் செல்ல முடியும் என்று சொல்கிறார். ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை என்று நஜீப்புக்குத் தெரியும்.

அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு ஏற்றவாறு ஒரு நாள் அவர்களது வாழ்க்கையில் வருகிறது. முதலாளியின் வீட்டில் திருமணம் நடைபெறுவதால், பாலைவனத்தில் இருக்கும் பல கூடாரங்கள் பாதுகாவலர்கள் இன்றிக் கிடக்கின்றன. அன்றைய தினம் வாழ்வின் ஒளியைக் காண ஹக்கீம், இப்ராகிம் காதிரி உடன் சேர்ந்து பயணிக்கிறார் நஜீப்.

அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதோடு படம் முடிவடைகிறது. படத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அந்தக் கணத்தை எதிர்பார்த்து கிட்டத்தட்ட விரக்தியின் உச்சிக்கே செல்லுமளவுக்குப் படம் முழுக்கச் சோகம் நிரம்பி வழிகிறது. அதுவே ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

பிரமிக்கத்தக்க உழைப்பு

பாலைவனம் போன்ற வறட்சியான நிலப்பரப்பில் ஆடு மேய்ப்பதைக் காட்டும் வழக்கம் உலக சினிமாவில் உண்டு. அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து முடிக்கையில், நமக்கே அப்படியொரு வாழ்வனுபவத்தைக் கடந்து வந்த உணர்வு எழும். அதே போன்றதொரு பிரமிக்கத்தக்க உழைப்பைக் கொண்டிருக்கிறது ‘ஆடு ஜீவிதம்’.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, விஎஃப்எக்ஸ், ஒப்பனை போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஒரு மலையாளத் திரைப்படத்தில் இந்த அளவுக்குத்தான் இருக்கும் என்று ஒரு ரசிகன் கருதும் வகையிலேயே பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. மிகச்சில படங்கள் மட்டுமே அந்த வரையறையை உடைத்து ‘உலக சினிமா’ உயரத்தை எட்டியிருக்கின்றன.

முதல் சில நிமிடங்களிலேயே அப்படியொரு நிலையை அடைந்துவிட்ட உணர்வைத் தருகிறது ‘ஆடு ஜீவிதம்’. அதற்கேற்றவாறு சுனில் கே.எஸ்ஸின் ஒளிப்பதிவு திகட்டத் திகட்டப் பாலைவனத்தின் அழகை அள்ளிப் பருகத் தருகிறது. நீருக்கடியில் அமலா பாலும், பிருத்விராஜும் ரொமான்ஸ் செய்யும் விஷுவல்களும் ஈர்க்கும் வகையில் உள்ளன.

ஃபின் ஜார்ஜ் வர்கீஸ் மற்றும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பானது ஒரு மனிதனின் வாழ்வை நேரடியாகப் பார்க்கும் அனுபவத்தைத் தர முனைந்திருக்கிறது.

கலை இயக்குனர் பிரசாந்த் மாதவ், ரெஞ்சித் அம்பாடியின் ஒப்பனை, ஸ்டெபி சேவியரின் ஆடை வடிவமைப்பு மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ், எஸ்எஃப்எக்ஸ் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் உழைப்பு ஆகியன ஒன்றிணைந்து இப்படத்திற்குப் பிரமிக்கத்தக்க தோற்றத்தைத் தந்திருக்கின்றன.

‘பத்திக்காத தீயாய் எனைச் சூழ்ந்தாய்’ பாடல் காதலை இழைய விடுகிறது என்றால், ‘பெரியோனே’ உள்ளிட்ட இதர பாடல்கள் அந்தக் காதலையே புறந்தள்ளும் அளவுக்கு ஒளியின் தரிசனம் வேண்டி ஓடும் வாழ்வனுபவத்திற்கு இசை வடிவம் தந்திருக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையோடு பொருந்தும் அளவுக்குக் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறாரே என்று இயக்குனர் பிளெஸ்ஸியை வியக்கக் காரணமாகின்றன பாடல்கள். அதேநேரத்தில், இதர காட்சிகளின் தாக்கம் முழுமையாகப் பார்வையாளர்களை அடையும் வகையில் பின்னணி இசையைத் தந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

மிகச்சில இடங்களில் காட்சியில் நிறைந்திருக்கும் ஓரிரு கதாபாத்திரங்களைப் போல ஒன்றிரண்டு இசைக்கருவிகளே ஒலிக்கின்றன. ஆனால், அந்த இசை நம்மைத் திரையுடன் பிணைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இயக்குனர் பிளெஸ்ஸி இப்படத்திற்குத் தந்திருக்கும் உழைப்பு அளப்பரியது. பென்யாமின் புத்தகத்தின் வழியே தான் உணர்ந்த உலகுக்கு அவர் உருவம் தர முயன்றதும், அதற்கு நெடுங்காலத்தைச் செலவழித்ததும் ஈடிணை சொல்ல முடியாத விஷயங்கள்.

திரையில் ஒரு உலகப்படம் காணும் அனுபவத்தைத் தந்துவிட வேண்டும் என்று ரொம்பவே முயன்றிருக்கிறார் பிளெஸ்ஸி. அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. நிச்சயமாக சீரியஸ் சினிமா ரசிகர்கள் இதனைப் பாராட்டுவார்கள்.

ஆனால், ஒரு சராசரி சினிமா ரசிகனை ஆற்றுப்படுத்தும் விஷயங்கள் இதில் இல்லை. முக்கியமாக, இதில் நகைச்சுவை சுத்தமாக இல்லை. அதுவே, ரொம்பவே வறட்சியானதொரு கதையைப் பார்க்கும் எண்ணத்தை அதிகப்படுத்துகிறது.

அது மட்டுமல்லாமல், மையப்பாத்திரம் திரும்பத் திரும்பத் தோல்வியைச் சந்திக்கும்போது ரசிக மனது துவண்டு விடுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு சிலவற்றை மாற்றி அமைத்திருக்கலாம்.

பிளெஸ்ஸியின் உழைப்பும் அர்ப்பணிப்பும் எத்தகையது என்பதை உணர்ந்து தனது பங்களிப்பை இப்படத்திற்குத் தந்திருக்கிறார் நாயகன் பிருத்விராஜ். பல இடங்களில் அவரே அப்படியொரு வாழ்வை வாழ்ந்தாரோ என்று எண்ண வைத்திருக்கிறார். பாராட்டுகள்!

படம் முழுக்கப் பிருத்விராஜே வியாபித்திருப்பதால் ராகுல், ஜிம்மி ஜீன் லூயிஸ், ஷோபா மோகன், அமலா பால் போன்றவர்களின் உழைப்பைச் சிலாகிக்க முடியாமல் போகிறது. அதேநேரத்தில் அவர்களது பங்களிப்பு துளியளவு கூட நமக்கு அதிருப்தியைத் தரவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

திருப்தி தருமா

‘ஆடு ஜீவிதம்’ படத்தில் ஒவ்வொரு பிரேமையும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். குறிப்பாக, தொடக்கக் காட்சியில் பிரபஞ்சத்தின் அழகைத் தன் முன்னே இருக்கும் தண்ணீரில் கண்டவாறே அதனைப் பருகும் பிருத்விராஜின் முகம் நம் நெஞ்சில் நிறைந்து நிற்கும்.

முதன்முறையாக ஆலங்கட்டி மழை பெய்வது, ஹக்கீமைச் சந்திக்க மலை இடுக்கின் வழியே பாலைவனத்தின் இன்னொரு பக்கத்திற்குச் செல்வது, பாலைவனச் சோலையை நீண்ட நெடிய பயணத்தின் இடையே காண்பது, சோர்வுற்றிருக்கும் ஹக்கீம், நஜீப் உடலில் காதிரி மணலை அள்ளிப் பூசுவது என்று பல காட்சிகள் இதில் நம் மனதைத் தொடும்.

அதேநேரத்தில் அவற்றைப் பார்ப்பதற்காகச் சுமார் மூன்று மணி நேரம் வெறுமையைச் சுமக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் கொஞ்சம் அயர்ச்சியைத் தரும் அம்சம். அதனை எதிர்கொள்ளத் தயார் என்பவர்களுக்கு, ‘ஆடு ஜீவிதம்’ நிச்சயமாக ஒரு உலக சினிமா அனுபவத்தைத் தரும்.

அப்போது நம் மனதில் எழும் உணர்வெழுச்சியானது இயக்குனர் ப்ளெஸ்ஸியின் பதினாறு ஆண்டு கால உழைப்புக்கான பலனைக் கண்ணில் காட்டும். மொத்தத்தில் ஆடுஜீவிதம் – வாழ்வின் மீதான நம்பிக்கை ஒளி!

-உதய் பாடகலிங்கம் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெயில் சுட்டெரிக்கும்… இனி குடையில்லாம வெளியே போகாதீங்க!

கெஜ்ரிவால் கைது: ஐநா ரியாக்‌ஷன்!

பீகாரில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கிய லாலு!

“ரத்னம்” புது பாடல் : அக்கற காட்டும் விஷால்.. உருகும் பிரியா பவானி சங்கர்..!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *