திரைப்படம் மூலம் அரசியல் : மாரி செல்வராஜ் பேச்சு!

Published On:

| By Kavi

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராமிடம் உதவியாளராக பணியாற்றி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ் .

பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய வெற்றிமாறன் இயக்கும் படங்களில் அரசு எந்திரம், அவற்றின் அடக்குமுறைகளை கதைகளமாக்கப்பட்டிருக்கும். ராம் குடும்ப உறவுகளை, தனி மனித உறவுகளை கதை களமாக்கி படமாக்க கூடியவர். பாலா பாணி இவர்களிடம் இருந்து வேறுபட்டது.

சீனுராமசாமி மென்மையான குடும்ப உறவுகள் சம்பந்தபட்ட படங்களை இயக்கி வருகிறார். இவர்களின் எந்த சாயலும் இல்லாமல் படங்களை இயக்க கூடியவராக உள்ளார் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் பரியேறும் பெருமாள்.

அப்படத்தில் கதாநாயகன் கேரக்டர் எதிர்கொள்ளும் அனைத்து காட்சிகளும் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடைபெற்றது என கூறப்பட்டது. அதனால் தான் அவரது படைப்புகளில் ஜாதிய அடக்குமுறை சம்பந்தமான அரசியல் தீவிரமாக இருக்கிறது என கூறப்பட்டது.

இரண்டாவது படமான கர்ணன் பரியேறும் பெருமாள் பாணியிலான சாதி அரசியல் அதனை அதிகார வர்க்கம் கையாளும் அணுகுமுறையை பதிவு செய்த படம்.

அவரது இயக்கத்தில் ஜூலை 29 அன்று வெளியான மாமன்னன் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றதை அறிவிக்கும் வகையில் சென்னையில் ஜூலை 8 மாலை பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
அந்த நிகழ்வில் பேசிய மாரி செல்வராஜ், தனது அரசியலை திரைப்படங்கள் மூலமாக தொடர்ந்து பேசுவேன் என்பதை அழுத்தமாகவே பதிவு செய்தார்.

தொடர்ந்து மாரி செல்வராஜ் பேசுகையில், “மூன்று வெற்றிகள், மூன்று படங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்னும் பதற்றம் குறையவில்லை. இந்தப் பதற்றம் குறையும் நாளில் நான் மனநிம்மதி அடைந்துவிடுவேன்.

இந்தப்படம் ஒரு கூட்டு முயற்சி. இப்படத்தில் நான் என்ன நினைக்கிறேன், என் வலி என்ன, என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொண்டு அனைத்து கலைஞர்களும் ஒத்துழைத்து ஒரு சிறப்பான படைப்பைத் தந்தனர்.

எல்லோரும் அவர்கள் ஜெயிக்க வேண்டும் அவர்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மாரி ஜெயிக்க வேண்டும், மாரியின் கருத்து ஜெயிக்க வேண்டும் என வேலை பார்த்தார்கள். அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.

மாமன்னன் ஒரு நாவலாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த படைப்பு, இதை படம் எடுக்க முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தால் இது சாத்தியமாயிற்று. உதயநிதி சார் கூப்பிட்ட போது இவர் செய்யும் படங்கள் வேறு வகை நாம் செய்யும் படங்கள் வேறு வகை எப்படி ஒத்து வரும் எனும் பயம் இருந்தது. என்னைச் சந்தித்த போதே அந்த தயக்கத்தை அவர் உடைத்து விட்டார்.

இந்தப்படத்தில் நடித்த கலைஞர்கள் சிலருக்கு டயலாக் இல்லை ஆனாலும் என் மீதான அன்பிற்காக மட்டுமே செய்தார்கள். இந்தப்படத்தின் இடைவேளை காட்சி தான் இந்த படத்தின் மையப்புள்ளி. அதிலிருந்து தான் இந்தப் படம் தொடங்கியது. வடிவேலு சார் என்னை நம்பி நான் சொன்னதை உள்வாங்கி நடித்தார். பகத் சார் இன்னும் இன்னும் காட்சியை மெருகேற்றுவார்.

அவர் எப்போதும் கேரளாவில் என் வீடு உனக்காக திறந்திருக்கும் என்று சொன்னார். உதய் சார் என் மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. என்றென்றைக்கும் அவருடனான உறவு தொடரும். திரைப்படங்கள் தான் என் அரசியல், என் வலி, என் வரலாறு அதைத் தொடர்ந்து என் திரைப்படங்களில் பேசிக்கொண்டே இருப்பேன். படத்தின் மீது சில சர்ச்சைகள் இருந்தது, ஆனால் மக்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள். முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் என் மூன்று படங்களையும் பார்த்துப் பாராட்டினார்கள்.
நான் பேசியதைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு தந்த கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என்றார்.

இராமானுஜம்

பாளையங்கோட்டை சிறை நிரப்பும் போராட்டம் : 500 பேர் கைது!

டிஜிட்டல் திண்ணை:  ஆட்சியே போனாலும்… ஆளுநருக்கு எதிரான 19 பக்க புகார்:  ஸ்டாலின்  பேச்சு, கடிதப் பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share