தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. அதன் பின்பு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “நான்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், சைத்தான் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அந்த படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து காட்டினார்.
தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் “ரோமியோ”. இப்படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் யூடியூபில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற பிரபலமான வெப் சீரிஸை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
நடிகர்கள் யோகி பாபு, VTV கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தற்போது ரோமியோ படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் போது, விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் ஹீரோயின் மிருணாளினி ரவியை எப்படி இம்ப்ரெஸ் செய்து ஹீரோ விஜய் ஆண்டனி காதலிக்க வைக்கிறார் என்பதே ஒன்லைன் என்று தெரிகிறது.
இதற்காக ஹீரோ விஜய் ஆண்டனி முன்னெடுக்கும் முயற்சிகளும் அதில் வரும் பிரச்சனைகளும், இறுதியாக இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தில் ரசிகர்களை கவரும் காட்சிகளாக இருக்கும்.
“என் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஒரு ஐடியா குடு மாமா”, “பொண்ணுங்க தாலி கட்டும் போது அழுவாங்க, அதுக்கப்புறம் ஆம்பளைங்க தான் அழப்போறாம்” என டிரைலரில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
“இனி பாஜக ஆட்சி அமைந்தால் இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது” : அகிலேஷ் யாதவ்