லைகா தமிழ்குமரன் வெற்றி : தயாரிப்பாளர்கள் சொல்வது என்ன?

சினிமா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

2023-2026  ஆண்டுகள் வரை பதவிகளுக்கான  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்  தேர்தல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர்.  சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,111 வாக்குகள் பதிவானது.           

இதன் படி “நலம் காக்கும் அணி” சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஜிகேஎம் தமிழ்குமரன் 651 வாக்குகளும், அர்ச்சனா கல்பாத்தி 588 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் 617 வாக்குகளும்,  ராதாகிருஷ்ணன் 503 வாக்குகளும், இவர்களை தொடர்ந்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் 535 வாக்குகளும்,  இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சௌந்தர் பாண்டியன் 511 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட லைகா நிறுவன தலைமை நிர்வாகி ஜி.கே. எம் தமிழ்குமரன் 651 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை நடைபெற்ற தேர்தலில் எந்த போட்டியாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இதுவாகும்.

நலம் காக்கும் அணி சார்பில்  போட்டியிட்ட   ‘தேனாண்டாள்’ முரளி  ராமசாமி 615 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவரை காட்டிலும் 36 வாக்குகள் கூடுதலாகவும், இவருடன் இணைந்து துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ச்சனா கல்பாத்தியை(588) காட்டிலும் 63 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் துணை தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று வரும் ராதாகிருஷ்ணன், இரண்டு முறை தலைவர், இரண்டு முறை செயலாளராக வெற்றி பெற்ற கதிரேசன் இருவருக்கும் நீண்ட கால தேர்தல் அனுபவம் இருந்தும் தமிழ் குமரனை காட்டிலும் அதிகமான வாக்குகளை பெற முடியவில்லை.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அதிகமான வாக்குகளை தமிழ்குமரன் பெற்றிருக்கிறார் என்பதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

“நடந்து முடிந்த தேர்தலில் முரளி ராமசாமி தலைமையில் நலம் காக்கும் அணி உருவாக்கப்பட்டது. முரளி ராமசாமி தலைவர்என்றாலும் உண்மையான தலைவர் தமிழ்குமரன்தான்.

தேர்தலுக்கான மொத்த செலவையும் தமிழ்குமரனின் லைகா நிறுவனமே செய்தது. தேர்தல் பிரச்சாரத்திற்கான விளம்பரங்களை சமூக ஊடகங்களில் கொண்டு செல்வதற்கான பணிகளை லைகா நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான ஜி.கே.மணியின் மகன்தான் தமிழ்குமரன். சினிமா பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இல்லாத தமிழ்குமரன் லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதே அரசியல் காரணத்திற்காகவே.

2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படம்தான் லைகா புரடெக்க்ஷன்ஸ் தயாரித்த முதல் படம். இலங்கை தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா மூலம் தமிழர்களை கொன்றுகுவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்ப பணம் தமிழ் சினிமாவில் முதலீடு செய்யப்படுகிறது என நாம் தமிழர் கட்சி சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ் இருவரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க மட்டோம் என்றனர்.

கத்தி படம் திரையிடப்பட இருந்த சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டதில் அத்திரையரங்கின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது. அதன் பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தைகளின் மூலம் லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக தமிழ்குமரன் நியமிக்கப்பட்டார்.

கத்தி பட வெளியீட்டுக்கு முன்பாக ஒருநாள் நள்ளிரவில் சென்னையில் உள்ள எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் சுபாஷ்கரனை சீமான் சந்தித்தபின் லைகா நிறுவனத்திற்கு எதிராக அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இவை அனைத்திற்கும் பின்னால் தமிழ்குமரன் மற்றும் அவரது தந்தையும், சட்டமன்ற உறுப்பினர் பாமக தலைவருமான ஜி.கே. மணி இருந்தார்.

அதனால்தான் இன்றுவரை சினிமா தயாரிப்பு, வியாபாரம் பற்றிய நுணுக்கங்களை தெரியாத, கற்றுக்கொள்ளாத தமிழ்குமரன் லைகாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர முடிகிறது” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

மேலும் அவர்கள், “தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், சர்வதேச அளவில் படங்களை திரையிடுவதில் முதல் இடத்தில் இருப்பது லைகா நிறுவனம் மட்டுமே.

ரெட் ஜெயண்ட் மூவீஸ், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் மட்டுமே. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தலை எதிர்கொள்ள சங்கமித்ரா பட தயாரிப்பில் ஏற்பட்ட இழப்பில் பொருளாதார ரீதியாக தனக்கு உதவிய லைகா நிறுவனத்தை நாடினார்கள் முரளி ராமசாமி அணியினர்.

துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்குமரன் தங்களுக்கு இணையாக இருக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தங்கள் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் அர்ச்சனா கல்பாத்தியை காட்டிலும் அதிகமான வாக்குகள் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதற்கான அடிப்படை வேலைகளை அரசியல்வாதிக்குரிய நுட்பங்களுடன் பண பலத்தால் சாதித்து அர்ச்சனா கல்பாத்தி மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோரையும், முரளி ராமசாமியை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

எதிர்காலத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் அவர்கள் நலனுக்காக மட்டுமே இயங்கும் அமைப்பாக மாறும் என்பதற்கு இதுபோன்ற வெற்றிகள் தான் முன்னோட்டம். அடுத்த தேர்தல் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக உருவெடுக்கும்” என்றனர்.

அம்பலவாணன்

பொதுநலன் கருதி உருவான “சமூக விரோதி”

இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6

Tamilkumaran got most votes
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *