தன் முகம் ததும்பிய புன்னகையால் வைரலாகி, தமிழக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களில் மீண்டும், மீண்டும் இடம்பிடித்து வந்த வேலம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 27) இரவு உயிர் இழந்தார்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு, 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்னும் பாட்டியை குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி என்பவர் எடுத்த புகைபடம் வைரல் ஆனது. இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் பேமஸ் ஆனார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்தப் புகைப்படத்தை இந்த ஏழைத்தாயின் சிரிப்பே… நம் ஆட்சியின் சிறப்பு எனத் தன் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு செய்தார்.
கடந்த ஆண்டு மழைபாதிப்பினைப் பார்வையிட குமரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த வேலம்மாள் பாட்டி, தான் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் அஞ்சுகிராமம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. அதற்கு கட்டவேண்டிய குறைந்தபட்ச தொகையையும் திமுக நிர்வாகியான பூதலிங்கம்பிள்ளை என்பவரே செலுத்தி இருந்தார்.
தற்போது நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வசித்துவந்த வேலம்மாள் பாட்டி, கடந்த சில தினங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தவித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு வயது முதிர்வால் உயிர் இழந்தார்.
வைரல் பாட்டி வேலம்மாள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதிவாசிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சரவணன்
கால்வாய் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திய என்.எல்.சி!
தேடப்படும் குற்றவாளி… கையில் துப்பாக்கியுடன் தனுஷ்: மிரட்டும் கேப்டன் மில்லர் டீசர்!