விவசாய நிலங்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணிகளை இன்று (ஜூலை 28) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்.எல்.சி.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நெற்பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அதனை அழித்து நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்.எல்.சி மேற்கொண்டு வருகிறது.
என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து பரவனாற்றுக்கு உபரிநீரை வெளியேற்றுவதற்காக 10-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி வாகனங்களை கொண்டு விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணியை எம்.எல்.சி செய்து வருகிறது. ஒரு மாதம் அவகாசம் கொடுத்திருந்தால் நெற்பயிர்களை அறுவடை செய்திருப்போம் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
என்.எல்.சியின் இந்த செயல்பாடுகளுக்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் வளையமாதேவி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்.சி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே இன்று நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாமக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளுக்காக சென்றுள்ளனர்.
இதனால் என்.எல்.சி கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீஸ் அதிகாரிகள் இல்லாததால் தான் என்.எல்.சி விளைநிலங்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மோனிஷா
தேடப்படும் குற்றவாளி… கையில் துப்பாக்கியுடன் தனுஷ்: மிரட்டும் கேப்டன் மில்லர் டீசர்!
ஐரோப்பாவில் நிலவும் வெப்ப அலை: உலகில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்!