மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தனது சொந்த செலவில் 10 கழிப்பறைகளை கட்டிக் கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 2010-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 276 மாணவிகள் மற்றும் 180 மாணவர்கள் என மொத்தம் 456 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு இடைநிலை ஆசிரியராக ஆணி ரீட்டா என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்தப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் ஆசிரியைகளும், மாணவிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இப்பள்ளிக்கு கழிப்பிட வசதி செய்யப்பட்ட நிலையில், அதையும் இரவு நேரங்களில் ஊரில் உள்ள இளைஞர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியை ஆனிரீட்டா தனது சொந்த செலவில் கழிவறை ஏற்படுத்தித் தர நினைத்துள்ளார்.
இதை தொடர்ந்து தலைமை ஆசிரியரின் அனுமதியோடு பள்ளி வளாகத்தில் இடத்தை தேர்வு செய்தார்.
மாணவிகள் பாதுகாப்புடன் கழிப்பறைக்கு சென்று வரும் வகையில் கான்கிரீட் தளம் அமைத்து 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய 8 கழிப்பறைகள்,
ஆசிரியைகளுக்காக தனியாக இரண்டு கழிப்பறைகள் என 10 கழிப்பறைகளை ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டி முடித்துள்ளார்.
இந்த கழிவறைக்கு தேவையான பக்கெட், மக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர் ஆனிரீட்டா. அவரது இந்த முயற்சியையும், நல்ல எண்ணத்தையும் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கலை.ரா
“திமுக அரசு மக்களை வாட்டி வதைக்கிறது” – ஓபிஎஸ்
வரத்து குறைவு: எகிறிய மீன் விலை!