இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு… 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் கையேடு!

Published On:

| By Manjula

Tamil Nadu model question booklet for 10th 12th

வினா வங்கி புத்தகம், கணித பாடத்துக்கான தீர்வு புத்தகம் ஆகியவை 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தயாரித்து வழங்கப்படும் என தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Tamil Nadu model question booklet for 10th 12th

தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் கையேடு மற்றும் தீர்வு புத்தகம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தது. இது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயன் அளிப்பதாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகம் தயாரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (நவம்பர் 30) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், திமுக எம்.எல்.ஏ எழிலரசன், தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஜி.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சங்க செயலாளர் ஏஞ்சலோ இருதயசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ” கொரோனா தொற்றுக்கு பின்னர் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் கையேடு தயாரித்து வழங்கப்படவில்லை. இவற்றை மீண்டும் தயாரித்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சங்க செயலாளர் ஏஞ்சலோ இருதயசாமி பேசுகையில், ”12-ம் வகுப்பு கலை மற்றும் அறிவியல் பிரிவுக்கு இரண்டு வினா வங்கி புத்தகமும், கணிதத்துக்கு இரண்டு தீர்வு புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், இயற்பியலுக்கு ஒரு தீர்வு புத்தகமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகத்துடன் சேர்த்து தீர்வு புத்தகமும் கணித பாடத்துக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

அடுத்த ஆண்டு (2024) மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பை சேர்ந்த சுமார் 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள உள்ளனர். அதற்காக ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுனர்கள் அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் ஆகியோரை கொண்டு இந்த மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு கையேடு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

வினா வங்கி புத்தகம் மற்றும் தீர்வு புத்தகம் ஆகியவை தயாரிக்கும் பணியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.இதற்காக சுமார் 6 லட்சம் புத்தகங்கள் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் வழியாக அரங்குகள் அமைக்கப்பட்டு, இந்த வினா வங்கி மற்றும் தீர்வு புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மாதிரி புத்தகங்கள் இந்த (டிசம்பர்) மாதத்தின் 3-வது வாரத்தில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்: அமைச்சர் ரகுபதி

பத்திரப்பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம்: சிறப்பம்சங்கள் என்ன?

Tamil Nadu model question booklet for 10th 12th

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel