அரசு விரைவு பேருந்துகளில் இருவழி பயணச் சீட்டை இணையதளம் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, திரும்ப வருவதற்கான கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோர் பயணித்து வருகிறார்கள். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுக்கும் பேருந்து சேவை செயல்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, தினசரி மிதவை, குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை, கழிப்பறை வசதியுடன் கூடிய 1,082 பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 300 கி.மீ தூரத்திற்கு மேல் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பயணச்சீட்டு இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி 2006 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ”பயணிகள் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் ஆம்னி பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், விழா நாள்கள் தவிர மற்ற நாள்களில் இணையவழி பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்” எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்”.
இந்த அறிவிப்பு இன்று (செப்டம்பர் 5) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டை ஒரே நேரத்தில் , https://www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்பவர்களுக்கு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
விழா நாட்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு மேற்கண்ட கட்டண சலுகை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா