19 ஆண்டுகால ஏக்கம்: வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

விளையாட்டு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இன்று (ஜூலை 24) ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 16ம் தேதி அமெரிக்காவில் தொடங்கியது. இந்தத் தொடரில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்குபெற்றுள்ளனர். தங்க மகன் நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய அணி இத்தொடரினை களம் கண்டது.

கடந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார். இதனையடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதி போட்டி நடைபெற்றது. ஈட்டி எறிதலில் உலகநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 32 பேர் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் சார்பில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் ஆகியோர் உட்பட 12 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்தது பவுல் ஆனது. பின் இரண்டாவது சுற்றில் 82.39 மீட்டர் மற்றும் மூன்றாவது சுற்றில் அவர் 86.37 மீட்டருக்கு ஈட்டியை எறிந்தார். நான்காவது சுற்றில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த நீரஜ், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். அவரின் கடைசி முயற்சி மீண்டும் பவுல் என அறிவிக்கப்பட்டது.

முடிவில் கீரின்லாந்தை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.46 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கபதக்கத்தை தட்டி சென்றார். 88.13மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க தாகம் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக 2003 இல் பாரிசில் நடந்தத் தொடரில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். அதே வேளையில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஆண் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் மற்றொரு வீரர் ரோஹித் யாதவ் அதிகபட்சமாக 78.72 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 10வது இடம் பிடித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *